Monday, July 7, 2014

போரூர் கட்டிடப் படுகொலையில் கொலையுண்ட தொழிலாளர்களின் அவலம்!



தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேரிடர்!

கடந்த சனி (ஜூன் 28) மாலை சென்னையில் மழை பெய்த பொழுது போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்ததில் இதுவரை கட்டிடத் தொழிலாளர்கள் 61 பேர் இறந்துள்ளனர், 27 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர், இன்னமும் 25 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. மீட்புப் பணியை தமிழக தீயணைப்பு துறையும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் இரவும் பகலுமாக கடந்த 6 நாட்கள் செய்து வந்து வெள்ளிக்கிழமையோடு (சூலை 4) மீட்பு பணி முடிந்துவிட்டது என அறிவித்திருக்கின்றார்கள், நூற்றுக்கதிமனோர் உள்ளே சிக்கியிருக்கக்கூடும் என்பதே தொழிலாளர்கள் மற்று பொது மக்களின் கணக்கு, ஆனால் இன்றோ மீட்பு பணி முடிந்துவிட்டு என்று அறிவித்துள்ளார்கள், அப்படியானால் மீதமுள்ள , காணாமல் போன தொழிலாளர்கள் எங்கே?  தமிழக முதல்வர் மட்டுமல்ல இறந்ததில் சீமாந்திர தொழிலாளிகள் அதிகம் என்பதால் சீமாந்திர முதல்வரும் வந்து மீட்புப் பணியை பார்வையிட்டுள்ளனர். இருவரும் இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு அறிவித்துள்ளார்கள். கட்டிட உரிமையாளர் மனோகரன், பொறியாளர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரழப்பும் கண்டனக்குரலும் அதிகமானதால் ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையும் ஒன்றை அமைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேரிடர் என்று மத்திய அரசின் பேரிடர் குழுமம் கூறியுள்ளது.


உண்மையில் இடிபாட்டுக்குள் சிக்கியவர்கள் எத்தனை பேர்?

முதலில் 72 தொழிலாளர்கள் சிக்கியுள்ளார்கள் என்று அந்த கட்டிட உரிமையாளர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது, இறந்தவர்களோடு சேர்ந்து வெளியில் எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஐ நெருங்கிவிட்டது, இன்னமும் 25 பேர் இருக்க‌க்கூடும் என்கின்றார்கள் மீட்புப் பணியினர். ஆனால் அன்று சம்பளம் வாங்கும் நாள் என்பதாலும், பெரும்பாலானவர்கள் அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில்தான் தங்கிவந்தார்கள் என்பதாலும் 200பேர்க்கு மேல் கட்டிட இடிவில் சிக்கினார்கள் என கட்டிடத்தில் வேலை பார்த்து அன்று வேலைக்கு வராத சில தொழிலாளர்கள் திட்டவட்டமாக கூறுகிறார்கள்... அப்படி என்றால் உண்மையில் சிக்கியவர்களும், இறந்தவர்களும் எத்தனை பேர்? அரசு இதை வெளிப்படையாக சொல்ல தயங்குவதேன்? அனைத்து தொழிலாளர்கள் பற்றி சரியான ஆவணம் இல்லை, மருத்துவ காப்பீடும் இல்லை என தெரிகிறது. அதற்குத்தான் இதனை மறைக்கப்பார்க்கிறார்கள் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது.


விதிகளை தளரத்தி சி.எம்.டி.ஏ வெளியிட்ட அரசாணைகள்

சென்னையை சுற்றி அவசர கதியாக, சரியாக திட்டமிடப்படாமல் சதுப்பு நிலங்களை அழித்து, நீர்நிலைகளை ஆக்கிரமித்து நீராதாரங்களைப் பற்றி கவலைப்படாமல் பல கட்டிடங்கள் இவ்வாறு எழுப்பப்பட்டு வருகின்றன. இடிந்த கட்டிடப்பகுதி ஏரி அருகாமையில் அமைந்திருக்கும் களிமண் அதிகமான பகுதி, அங்கு எப்படி 11 மாடி கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தார்கள்? மண் பரிசோதனை செய்து உறுதி சான்றிதழ் எப்படி பெற்றார்கள்? என்ற கேள்விகளை அந்த பகுதியில் உள்ள மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் நீண்ட நாட்களாக கேட்டும், புகார் கொடுத்தும் வந்துள்ளார்கள், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கீழ் செயல்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சி.எம்.டி.ஏ) முறைகேடுகள் செய்தது தெரியவந்துள்ளது. சாலை அகலம் குறைவான இடத்தில் அதிக அகலம் காட்டி விதியை மீறி 11 மாடி கட்டவும், கட்டிடத்தை சுற்றி இருக்க வேண்டிய இடத்திற்கான விதிக்கு குறைவான இடம் விட்டும் அனுமதி வாங்கி கட்ட ஆரம்பித்த பின் அந்த இரு விதிகளையும் தளர்த்தி அரசாணைகள் வெளியிட்டிருக்கிறார்கள் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசாணைகள், எண்: 239, எண்: 106).



அதிமுக-விற்கும் திமுக-விற்கும் சம பங்குண்டு

தமிழக முதல்வர் மீட்புப் பணியை பார்வையிடச் சென்றபோது செய்தியாளர்கள் இதைப்பற்றி கேட்டதற்கு “சி.எம்.டி.ஏ அனுமதி வழங்கியதில் எந்தத் தவறும் செய்யவில்லை. கட்டிட நிறுவனம் தான் விதியை மீறி கட்டியுள்ளது” என்று கூறினார். இது இந்தக் கோரப் படுகொலைகளின் மொத்த குற்றத்தையும் கட்டிட நிறுவனத்தின் மீது ஏற்றி சி.எம்.டி.ஏ-வையும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையை காப்பாற்றும் முயற்சி அல்லவா? தமிழக அரசு தனக்கான பொறுப்பில் இருந்து தவறியது சரி என ஆகிவிடுமா? திமுக தலைவர் கருணாநிதியும் இந்த கேள்விகளை முன் வைக்கிறார். ஆனால் முந்தைய ஆட்சிக்காலத்தில் நிலத்தரகு(ரியல் எஸ்டேட்) குண்டர்களாக திமுக பொறுப்பாளர்கள் பலர் செயல்பட்டதும், அப்பாவி மக்களை மிரட்டி பல நிலங்களை பிடுங்கி -  விதிமுறைகளை மீறி பல கட்டிடங்கள் எழும்பியதும் நமக்குத் தெரியும். இந்த கட்டிட உரிமையாளர் மனோகரும் அப்படி திமுக பெரிய கைகளின் உதவியோடுதான் வங்கி கணக்காளராக இருந்து மிக விரைவாக பெரிய பல அடுக்கு கட்டிட கட்டுமான உரிமையாளராகியுள்ளார். இந்த சம்பவத்திற்கு மட்டும் சி.பி.ஐ. விசாரணை கோரும் கருணாநிதியை கடந்த பத்தாண்டுகள் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சொன்னால் அமைதியாகி விடுவார் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆக இப்படியான தரமற்ற முறையில், விதிகளை மீறி முறைகேடாக, தொழிலாளர்களை காவு வாங்க கட்டப்படும் ”நகர்ப்புற வளர்ச்சி”யின் குறியீடுகளான இந்த கட்டிடங்கள் இருவரின் ஆசியுடன் தான் கட்டப்பட்டு வருகின்றன, இந்த பிரச்சனை இந்த கட்டிடத்தை மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல. இப்படி பாதுகாப்பற்ற முறையில் எண்ணற்ற கட்டிடங்கள் ஏற்கனவே கட்டியும், கட்டப்பட்டும் வரப்பட்டுள்ளன. இதனைக் குறித்து தீவிர ஆய்வும், விசாரணையும், தடுக்கத் திட்டமும் உடனடித் தேவையாகும்.




புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் வேண்டும்!

கட்டிட இடிபாட்டுகளுக்குள் சிக்கி 60க்கும் மேலான தொழிலாளர்கள் கொலையுண்டது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று தானே முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை அனுப்பும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொழிலாளர்களின் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் தாராவி, மலேசியா என இங்கிருந்து தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்தது போல தங்கள் ஊர்களில் விவசாயமும், பிற தொழில்களும் நலிவுற்றதால் புலம்பெயர்ந்து வரும் ஆந்திரா மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த சட்ட பாதுகாப்பும், பெரிய காயம்பட்டால் மருத்துவ வசதி பெற காப்பீடும் இல்லை. புலம்பெயர் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு இவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், இவர்களின் குழந்தைகளுக்கு தரமான இலவச கல்வியை அரசு வழங்க வேண்டும்.



தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்போம்!

குறைந்த கூலிக்கு சொந்த பந்தங்களை பிரித்து அழைத்து வந்து இழி பிறவியைப் போல சக்கைபோல பிழிந்து வேலை வாங்குகிறார்கள் இங்குள்ள முகவர்களும் முதலாளிகளும். இந்த முகவர்களை, முதலாளிகளை பார்த்து சுண்டுவிரலைக் கூட அசைக்காத சில இனவாத தமிழ்த்தேசியவாதிகள் “வெளியாரை வெளியேற்ற வேண்டும், அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது” என குறைந்த பட்ச சனநாயக உணர்வுமற்று பேசிவருகிறார்கள். ஒரு தேசத்தின் விடுதலைக்கு அந்த தேசத்தை அடிமைபடுத்தி வைத்திருக்கும் பலம் வாய்ந்த ஆதிக்க அரசும், அதற்கு துணையாக இருக்கும் உள்நாட்டு அதிகார கும்பலும், பக்கபலமாக இருக்கும் பெரும் முதலாளிகளுமே எதிரிகளன்றி பிற தேசத்து உழைக்கும் மக்களல்ல. அவர்கள் நம் சகோதரர்கள், நம்மைப் போலவே அதிகாரமற்றவர்கள், நம் தோளோடு தோள் நிற்கும் நேச சக்திகள்.



முதலாளிகளின் இலாப வெறி!

காலங்களைக் கடந்து நீடித்து நிற்க வேண்டிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே  இடிந்து வீழ்கின்றன.  ஒரு காலத்தில் இலாபம் கிடைத்தால் போதும் என்றிருந்த முதலாளிகள், இன்று கொள்ளை இலாபம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்றார்கள். தமிழ்நாட்டில் சமூக நிலை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிய நிலையில் இருப்பதால் இங்கு கூலி சற்றே உயர்ந்திருக்கின்றது, ஆனால் எங்களுக்கு அதே 100 ரூபாய் கூலியில் ஆட்கள் தேவை என்பதால் சமூக நிலையில் பிந்தங்கிய மாநிலத் தொழிலாளர்களை நோக்கிச் செல்கின்றனர், இதனால் தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வேலை பறி போகும் அதே நேரத்தில், வரும் தொழிலாளர்களின் உரிமையும் பறிபோகின்றது.  அடுத்து கட்டுமானப் பொருட்களின் தரத்தில், கட்டப்படும் இடத்தின் தரத்தில் என ஒவ்வொன்றிலும் சமரசம் செய்து தனது இலாபத்தை கொள்ளை இலாபத்தில் மட்டும் எந்த வித சமரசமுமின்றி செயல்பட்டுவருவதே இந்த கட்டிடப்படுகொலைக்கும், 61 தொழிலாளர்களின் கொலைக்கும் காரணமாகும்.  தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுப்பதே இது போன்ற படுகொலைகளைத் தவிர்க்கும்.



சிக்குண்ட தொழிலாளர்களை மீட்க உறவினர்கள் எழுப்பிய ஓலம் அந்த பகுதியை மட்டுமல்ல, தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திக்கற்றவர்களாக நிற்கும் பிற மாநில தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்புசாரா தோழிலாளர்களின் உரிமைகளுக்காக நாமும் சேர்ந்து குரல் கொடுப்போம். இது போல ஒரு கோரச்சம்பவம் கூட வருங்காலத்தில் நடக்காமல் தடுத்து நிறுத்த அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் படியான போராட்டங்களை தீர்க்கமாக முன்னெடுப்போம்.


ஸ்நாபக் வினோத்

No comments:

Post a Comment