Thursday, June 12, 2014

கால்பந்தை திருப்பி உதைக்கும் பிரேசில் மக்கள்!


2014-உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்னும் சில மணிநேரங்களில் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரத்தில் தொடங்கவிருக்கிறது. கால்பந்து என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வரும் பிரேசில் நாட்டில்தான் இந்தமுறை உலகக் கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டிகளை FIFA எனப்படும் உலகக் கால்பந்து சம்மேளனம் நடத்துகிறது. வழமையாக, வேறு நாடுகளில் நடக்கும் போது தங்களுடைய வீட்டின் சுவர்களிலும், தெருக்களிலும் வண்ணம் பூசி கோலாகலமாகக் கொண்டாடி வந்த பிரேசில் நாட்டு மக்கள், இந்த முறை அந்த நாட்டு அரசுக்கு எதிராகவும், மக்கள் வரிப் பணத்தை விழுங்கும் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கும் எதிராகவும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.



மக்களின் அடிப்படைத் தேவைகள் , தொழிலாளர் உரிமைகள், ஊழல் எதிர்ப்பு, அரசின் மேட்டுக்குடிப் பாசம் ஆகிய காரணங்களே மக்களின் இந்தப் போராட்டத்திற்கு அடிப்படை.

எப்பாடுப்பட்டலும் அம்பலம் ஏற்ற முடியாத தங்களின் சொற்களை, உலகக் கால்பந்து போட்டிகளுக்குக் கிடைக்கும் வெளிச்சத்திலாவது இந்த உலகம் உற்று பார்க்கட்டும் என்றே பிரேசில் நாட்டு ஏழை மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்படும் மைதானங்கள் போட்டிகள் முடிந்த பின்பு கேட்பாரற்று கிடப்பது என்பது நாம் அறிந்ததே. பிரேசிலிலும் பல ஆயிரம் கோடிகள் செலவில் புது மைதானங்கள் கட்டப்பட்டும், பழைய மைதானங்கள் புதுபிக்கப்பட்டும் வருகின்றன.

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத ஏழை நாடான பிரேசிலில், இந்திய மதிப்பில் 65000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்து கால்பந்து போட்டிகள் தேவையா என்பதே மக்களின் முழக்கம்.
இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகிய அனைத்து உழைக்கும் வர்க்க மக்களும் முன்னின்று போராட்டத்தை நடத்துகின்றனர். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு எதிரான இந்தப் போராட்டங்களுடன் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டங்களும் வெடித்துள்ளது.

காமன்வெல்த் அமைப்பில் தன்னுடைய பிடிப்பைக் காட்டிக்கொள்ள எப்படிக் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்திய அரசு நடத்தியதோ, அதே போன்று தான் பிரேசில் இந்தக் கால்பந்து உலகக் கோப்பையையும், 2016-ல் ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்துகிறது. காமன்வெல்த் போட்டிகளை இந்திய அரசு நடத்திய லட்சணம் நாம் யாவரும் அறிந்ததே. இப்போது நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான தயாரிப்புகளில் நடைபெற்ற ஊழலும்,அதற்கு தண்ணீராக செலவிடப்படும் மக்கள் பணமும், 2016-ல் நடத்தப் போகும் ஒலிம்பிக் போட்டிகளும் பிரேசில் மக்களை சினந்து எழச் செய்துள்ளது.



"உணவுக்கே அல்லல்படும் எங்களுக்கு உலகக் கோப்பை கால்பந்து தேவையில்லை", " நெய்மரை (பிரேசில் கால்பந்து வீரர்) விட இங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பானவர்கள்", " பிபா-வே (FIFA) திரும்பிப் போ" என்று பிரேசில் தெருக்களில் மக்கள் முழங்குகிறார்கள்.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் சொல்லும் அதிமேதாவிகள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், " இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் முதல்நாள் தொடக்க ஆட்டத்திற்கான நுழைவுச் சீட்டுகளில் வெறும் 40 விழுக்காடு மட்டும் ரசிகர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. 60 விழுக்காடு நுழைவுச் சீட்டோ வர்த்தக நிறுவனங்களின் வியாபர நலன்களுக்காகவும், உலகப் பிரபலங்களுக்கும் விற்கப்பட்டுள்ளது".
1994 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணியில் விளையாடிய ரொமாரியோ, " மக்கள் இன்றும் கால்பந்தை நேசிக்கிறார்கள், ஆனால் அடிப்படைத் தேவைகள், மருத்துவம், விலைவாசி உயர்வு என்று வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தராமல், கால்பந்து போட்டிகளுக்காக வாரி இறைக்கப்படும் பணம், அதில் நடக்கும் ஊழல் ஆகியவற்றை எதிர்த்தே போராடுகிறார்கள்.இந்த சூழ்நிலையில் நாங்கள் அப்படித்தான் சிந்திக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.



இந்த மக்களின் போராட்டங்களைத் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் என்று அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கும் பிரேசில் அரசு, போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு அருகில் வசித்துவரும் ஏழை மக்களையும், பூர்வக்குடி மக்களையும் வெளியேற்றி வருகிறது.
கால்பந்து விளையாட்டைத் தாங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகப் பார்த்த மக்கள் இன்று தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காக உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை எதிர்த்து போராடி வருகின்றனர். மக்களைக் காக்க வேண்டிய அரசோ, கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து கொண்டு மக்களின் உரிமைக் குரலை ஒடுக்குகிறது.


விறுவிறுப்பான கால்பந்து போட்டிகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தை விட, முக்கியமானது பிரேசில் மக்களின் போராட்டங்கள். பிரேசில் கால்பந்து அணியின் உலகக் கோப்பை வெற்றியைவிட, பிரேசில் மக்களின் போராட்டங்கள் வெற்றி பெறுவதே காலத்தின் தேவை.

கதிரவன்

2 comments:

  1. > ஏழை நாடான பிரேசிலில் .. 7th in GDP , if u reject GDP as a measure for growth, they are doing better in HDI too ... Lula deviates from pro people programs BUT Dilma is doing fairly well, Brazil is going to spend US $12 ,the same amount will be used for some long term infrastructure projects too ... when China hosted Olympics it used that as opportunity to build the infrastructure ... Corruption in the first world and third world countries are very different ... if there is a private contract there will be a corruption , people also have to think how to make the private companies accountable , if it's NOT possible to make them accountable propose alternatives ... if the companies are NOT keeping their books clean , freeze their accounts ..

    ReplyDelete
  2. I have referred Brazil as poor country in my article since the people are rising the slogan " We want Food; Not Football". Even though the statistcis you have given looks good with both GDP and HDI but it doesn't reflect on working class people.

    ReplyDelete