Friday, May 9, 2014

ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குப் புகலிடம் தேடி வந்தாலும் முள்வேலி சிறைக்கூடம் தானா?



இலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளாலும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் போராட்டங்களாலும் எதிர்ப்புகள் பெருகிவருகிறது. ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டு புலனாய்வை வலியுறுத்தும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஐநா மனித உரிமை ஆணையம் புலனாய்வை விரைவில் தொடங்கயிருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் தனக்கு ஏற்பட்ட பின்னடைவை சரிகட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஈழத்தில் செயல்படத் தொடங்கிவிட்டதாகச் சொல்லி இனப்படுகொலைப்போரை ”பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற தனது சித்தரிப்பை மீண்டும் கட்டமைக்க முயல்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் புலத்தில் செயல்படுவதாகச் சொல்லி ஈழத்தமிழர்களுக்காய் குரல் கொடுக்கும் 16 தமிழ் அமைப்புகளையும், 424 பேரையும் தடை செய்துள்ளது. அதன் நட்பு நாடுகளையும் தடை செய்யக் கோரியுள்ளது. (ஏற்கனவே ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராகப் பன்னாட்டுப் புலனாய்வைக் கோரும் தீர்மானத்தைப் புறக்கணித்த இந்திய அரசு, சில நாட்களுக்கு முன்பு இலங்கைப் பரிந்துரைத்த 16 தமிழ் அமைப்புகளையும், 424 பேரையும் எந்த ஆதார‌முமின்றித் தடை செய்துள்ளது.)

2008-2009 போருக்குப் பின்னால் தமிழீழத்தின் வடக்குப்பகுதி முழுவதும் இலங்கை ராணுவத்தின் பிடிக்குள் வந்தது, போரில் பாதிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தத்தம் ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தமிழீழத் தாயகப் பகுதியின் பெரும் விவசாய நிலங்கள், மீன்பிடிப் பகுதிகள், நிலப்பரப்புகள் இன்றளவும் ராணுவ நிலைகளுக்கும், சிங்களமயமாக்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்த நிலையில் இனப்படுகொலையின் கூட்டு சூத்திரதாரி இந்தியா இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து இலங்கையைக் காக்கவும், ஈழத் தமிழர்களின் ஈடுசெய் நீதியான தமிழீழ விடுதலைத் தீர்வைத் தடுக்கவும் 13வது சட்டதிருத்தத்தைத் தீர்வாக ஈழத்தமிழர்கள் மீது திணிக்க வலியுறுத்தவே இலங்கை 2012ல் போலிஸ் உரிமையும், நில(காணி) உரிமையும் இல்லாத‌ வடக்கு மாகாண சபைக்குத் தேர்தலை நடத்தியது. போலிஸ் உரிமையும், நில(காணி) உரிமையும் இல்லாவிட்டாலும், ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து சிறிது விடுபட்டு சிவில் வாழ்க்கைக்குத் திரும்ப ஈழத்தமிழர்கள் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முனைந்தனர். சிங்கள அரசிற்கு எதிராகத் தமிழ்த்தேசிய கூட்டணி பெருவாரியாக வெற்றிபெற்று வடக்கு மாகாண சபையை அமைத்தது, ஆனால் தமிழ் மக்களின் வாழ்வில் தான் எந்த மாற்றமும் வரவில்லை, ராணுவ கட்டுப்பாடு கொஞ்சமும் குறையவில்லை, சிங்கள குடியேற்றம் நிறுத்தப்படவில்லை.

போருக்குப் பின்னால் ஐந்தாண்டுகள் ஆகியும் இலங்கைத் தீவில் வாழ்வதே கடினம் என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் கிடைத்த பணத்தைத் திரட்டி புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்... பொதுவாகப் பணம் படைத்தவர்கள் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), நுழைவுச் சீட்டு(விசா) வாங்கி ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா நாடுகளுக்குப் புலம்பெயரும் போது, அதற்கு வழி இல்லாத அடித்தட்டு மக்கள் தங்கள் மொத்த உடமையையும் விற்று உயிரை மட்டும் பிடித்துக்கொண்டு படகில் ஆஸ்திரேலியா, இந்தியா எனத் தஞ்சம் தேடி ஓடிவருகிறார்கள், இந்தக் கொடும் பயணத்தில் கரைசேரும் முன்னே இறப்பவர்கள் ஏராளம் பேர். ஒரு நாட்டில் வாழும்படியான சூழல் இல்லாதபோது வேறு நாட்டிற்குத் தஞ்சம் தேடி வருபவர்களை அகதிகள் என அங்கீகரித்து அனைத்து உரிமைகளும், சலுகைகளும் வழங்க வேண்டும் என சர்வதேசச் சட்டம் சொல்கிறது. அகதிகளுக்குப் புகலிடமும் அடைக்கலும் கொடுப்பது அடிப்படை அறமும் மாந்தநேயமும் கூட.

ஏழரை கோடி தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டைக் கொண்டுள்ள அண்டை நாடான இந்தியா ஈழத்தில் இருந்து தஞ்சம் புகும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது மட்டுமல்ல, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரனை நடத்த, ஈடுசெய் நீதியாகத் தமிழீழம் அமைய உதவ வேண்டியதும் அதன் கடமையாகும். அதுதான் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. ஆனால் அகதிகளுக்கான சர்வதேசச் சட்டத்தை இன்னமும் ஏற்காத இந்திய அரசோ, அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை மூன்றாம் தர மக்களாக நடத்தி வருகிறது.


போருக்குப் பின்னால் புகலிடம் தேடி இந்தியா வரும் ஈழத்தமிழர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள், இயக்கத்தில் இருந்தவர்கள் என்று சொல்லி அகதிகளாகக் கூட அங்கீகரிக்காமல் செங்கல்பட்டு, பூந்தமல்லி எனச் சிறப்பு முகாம்களான முள்வேலிச் சிறைக்கூடங்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துவருகிறது. தமிழக அரசும் தன்னுடைய சிறப்புரிமையைப் பயன்படுத்தி விடுவிக்காமல் அவர்களைத் துன்புறுத்துவதில் இந்திய அரசின் கைத்தடியாகச் செயல்பட்டு வருகிறது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசிற்கு எதிராகத் தமிழக மக்களின் கோரிக்கை வலுப்பெறும்போதெல்லாம் தமிழகச் சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றும் ஜெயலலிதா அரசு, மறுபக்கத்தில் ஈழத்தில் இருந்து புகலிடம் தேடி வரும் ஈழத் தமிழர்களை அகதிகளாகக் கூட அங்கீகரிக்காமல் முள்வேலி சிறைக்கைதிகளாகத் துன்புறுத்தப்படுவதற்குத் துணைபோகிறது. ”பாம்பும் சாகக்கூடாது, கம்பும் உடையக் கூடாது” என்ற பழமொழி போலத் தமிழக அரசின் இந்த நிலைப்பாடு தமிழக மக்களின் கோரிக்கைக்கு எதிராகச் செய்யும் துரோகமாகும்.

ஐநா தீர்மானத்தை ஒட்டி கடந்த மார்ச், ஏப்ரலில் இருந்து ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை பெருகிவருகிறது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என்ற பெயரில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் என்று சொல்லி கடந்த ஏப்ரலில் 3 பேரை ’என்கவுண்டர்’ கொலை செய்த இலங்கை ராணுவம், தற்போது ஈழப்பகுதிகளில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடுவதாகச் சொல்லி இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் பலரைத் தேடிப் பிடித்துக் கொலை செய்துவருகிறது. பலபேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இதனால் ஆயிரக்கனக்கான ஈழத்தமிழர்கள் உயிர் பிழைக்க அடைக்கலம் கேட்டு இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் தப்பி ஓடிவருகிறார்கள்.


அப்படித் தப்பியோடி ஓரிரு நாட்களுக்கு முன்பு மே 5ம் நாள் தமிழ்நாட்டிற்கு வந்த 5 குழந்தைகள் உட்பட 10 பேரை அகதிகளாக ஏற்றுக்கொள்ளாமல் இந்திய அரசின் அழுத்தத்தால் புழல் சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. மே4 ஞாயிறு பின்னிரவில் மன்னாரிலிருந்து புறப்பட்டு வந்த யாழ்ப்பானத்தைச் சார்ந்த கணினிப் பொறியாளர் தயாபரராஜ்(வயது 34), மனைவி உதயகலா (வயது 32), மகன் டியோரோன் (வயது 9), மகள்கள் டிலானி ((வயது 6), டில்சியா (வயது 2), மற்றும் குடும்பத்தை விட்டுவிட்டு தனியே வந்த முல்லைதீவைச் சார்ந்த ஓட்டுனர் தவேந்திரன் (வயது 35) ஒரு படகிலும், முல்லைதீவைச் சார்ந்த கணேஷ் சுதாகர் (வயது 33), மனைவி ராமக்கா (வயது 30), மகள் நிலக்சனா (வயது 12), மகன் விதுரன் (வயது 5) ஆகியோர் மற்றொரு படகிலும் ஏறி தனுஷ்கோடி வந்திறங்கினர். முட்டளவு கடல் நீரில் மே5 திங்கள்கிழமை விடியற்காலை 3 மணிக்கு விட்டுவிட்டுப் படகுகள் மன்னாருக்கு திரும்பிவிட்ட நிலையில், 3 மணி நேரம் கடல் நீரில் நடந்தே இரண்டு குடும்பமும் தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்துள்ளனர்.

தனுஷ்கோடி காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மத்திய உளவுத்துறை ’ரா’ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட 5 குழந்தைகள் உட்பட 10 பேரும் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படாமல் உரிய ஆவனங்கள் இல்லை என்று சொல்லி வெளிநாட்டினர் சட்டம் பிரிவு 14, கடவுச் சீட்டு விதிகள் 1950 பிரிவுகள் 3(அ), 6(அ) ஆகிய சட்டங்களின் படி குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றம் மூலம் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ராணுவ அடக்குமுறையில் இருந்து உயிர்பிழைக்கப் புகலிடம் தேடி வருபவர்களை மேலும் அச்சமூட்டும் வகையில் இந்தியாவிலும் அடக்குமுறைக்குள்ளாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்த நேரமும் இலங்கை ராணுவத்தால் உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில் இன்னமும் சில ஆயிரம் ஈழத்தமிழர்கள் தஞ்சம் தேடி வரத்தயாராக இருக்கிறார்கள் என்று வந்தவர்கள் சொல்லியுள்ளார்கள். ஆனால் இந்தியாவோ இலங்கை அரசின் வேண்டுகளின் படி ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஈழத்தமிழர்களுக்காகப் புலத்தில் இருந்து குரல் கொடுக்கும் 16 தமிழ் அமைப்புகளைத் தடை செய்திருப்பதும், தஞ்சம் தேடி வந்த குழந்தைகள் உட்பட 10 பேரை சிறையில் அடைத்திருப்பதும் ஈழத்தில் இலங்கை சிங்கள அரசின் ஒடுக்குமுறையை ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிற வேறு வழியில்லை என்ற செய்தியை ஈழத்தமிழர்களுக்குச் சொல்லும்படியாகவே உள்ளது. ஈழத்திலிருந்து வெளி உலகத்துக்கு எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது என்ற இலங்கை அரசின் சதிக்கு இந்திய அரசும் தொடர்ந்து துணை போகிறது.

ஏற்கனவே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று சொல்லி நீண்ட நாட்களாகச் செங்கல்பட்டு, பூந்தமல்லி ’முள்வேலி’ சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்து அகதிகள் முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. அதோடு இந்த 10 பேரையும் உடனடியாகப் புழல் சிறையில் விடுவித்து அகதிகளாக அங்கீகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்ப வேண்டும். அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகளையும், குழந்தைகளுக்குத் தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க உத்திரவாதமும் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்காய் புலத்தில் இருந்து குரல் கொடுக்கும் 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 பேரின் மீது இந்திய அரசு பிறப்பித்த தடையை உடனே நீக்க வேண்டும் ஆகியவை நமது கோரிக்கையாகும்.

இனக்கொலை இலங்கைக்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள அழுத்தங்களைத் திசைதிருப்பவும், ஐநா மனித உரிமை மன்றத்தின் சர்வதேச விசாரனையைச் சீர்குலைக்கவும், ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து ராணுவ அடக்குமுறைக்குள் வைத்துள்ள இலங்கை அரசை எச்சரித்துக் கண்டிக்கவும், கடந்த மே5 புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 ஈழத்தமிழர்கள் உட்படப் புகலிடம் தேடிவந்த அனைத்து ஏதிலிகளையும் அகதிகளாக அங்கீகரித்து அடைக்கலமும் வாழ்உரிமையும் வழங்கக்கோரியும், ஈழத்தமிழர்களின் குரலாய் புலத்தில் இருந்து ஒலிக்கும் 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 பேரின் தடையை விலக்கக்கோரியும் இந்திய, தமிழக அரசுகளைத் தமிழக மக்களின் சார்பில் ஒரே குரலாய் வலியுறுத்துவோம். தமிழீழ விடுதலையைத் தொடர்ந்து அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கும் இலங்கை-இந்திய கூட்டு சதியை ஒன்றுபட்டு முறியடிப்போம்.


ஸ்நாபக் வினோத்.
சேவ் தமிழ்ஸ் இயக்கம்.


தரவுகள்:

http://www.dailymirror.lk/news/45244-sl-bans-ltte-fronts.html

http://www.thehindu.com/todays-paper/tp-national/10-lankans-held-in-tn/article5980690.ece

5 comments:

  1. முறியடிப்போம்

    ReplyDelete
  2. தகவலை சிறப்பாக பகிர்ந்த, தோழர் வினோத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,

    ReplyDelete

  3. தோழர்.ஹமீத் - சேர்ந்து போராடுவோம்.

    தோழர்.ஏர்வளவன் - கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  4. உதயகலா என்பவர் இலங்கையில் பலரை ஏமாற்றி பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர். இவரது பிரதான தொழில் சட்ட விரோத ஆட்கடத்தல். ஏமாந்த மக்களை மேற்கத்தேய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பணத்தை வாங்கி விட்டு அவர்களை ஏமாற்றி விடுவார். இவர் பற்றிய செய்திகள் பல இணையத் தளங்களில் உள்ளன. தற்போது இலங்கையில் உள்ள நீதிமன்றுகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் இருந்து தப்பி வந்துள்ளார்.

    http://www.sankathi24.com/news/41272/64//d,fullart.அச்ப்க்ஸ்

    http://www.athirvu.com/target_news.php?action=fullnews&id=1256

    http://www.athirvu.com/target_news.php?action=fullnews&id=1250

    http://muththumaninews.blogspot.com/2011/12/blog-post_2.html

    http://eelamview.wordpress.com/2011/12/05/cheating-disable-wome/

    ReplyDelete
  5. உதயகலா என்பவர் இலங்கையில் பலரை ஏமாற்றி பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர். இவரது பிரதான தொழில் சட்ட விரோத ஆட்கடத்தல். ஏமாந்த மக்களை மேற்கத்தேய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பணத்தை வாங்கி விட்டு அவர்களை ஏமாற்றி விடுவார். இவர் பற்றிய செய்திகள் பல இணையத் தளங்களில் உள்ளன. தற்போது இலங்கையில் உள்ள நீதிமன்றுகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் இருந்து தப்பி வந்துள்ளார்.

    http://www.sankathi24.com/news/41272/64//d,fullart.அச்ப்க்ஸ்

    http://www.athirvu.com/target_news.php?action=fullnews&id=1256

    http://www.athirvu.com/target_news.php?action=fullnews&id=1250

    http://muththumaninews.blogspot.com/2011/12/blog-post_2.html

    http://eelamview.wordpress.com/2011/12/05/cheating-disable-wome/

    ReplyDelete