Monday, April 14, 2014

பாபர் மசூதி இடிப்பு - காவிக் கும்பலின் திட்டமிட்ட சதியே!




1992- ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு என்பது வெகு கவனத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது வெளிவந்துள்ளது.


அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தச் சதிச் செயலை சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டுதான் செய்தது என்று நாட்டின் முற்போக்கு ஆற்றல்கள் கூறிவந்தது இன்று உறுதி ஆகியுள்ளது. கோபத்துடன் கூடிய கூட்டத்தின் கும்பல் மனப்பான்மையால் நடந்தது என்று இன்றுவரை கூறிவந்த காவிக் கும்பல், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காணொளி ஆதாரங்களை வெளியிடுவதற்கான காரணம் என்ன என்று கதறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தேர்தல் கதியில் யாரும் இந்த நிகழ்வைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.


கோப்ராபோஸ்ட்(COBRAPOST) என்னும் இணையதள ஊடகம் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையின் (OPERATION JANMABHOOMI) மூலம் தெரிய வந்துள்ளது. அயோத்தியா இயக்கம் என்ற பெயரில் ஆராய்ச்சி செய்யும் மாணவராகச் சென்ற நிருபரிடம் தங்களுடைய வெற்றி பெருமிதங்களாகக் கூறியுள்ள காவிக் கும்பலின் சுயதம்பட்டங்களே இவை.



இவ்வாறான சுயதம்பட்டங்கள் சங்பரிவாரக் காவிக் கும்பலுக்கு ஒன்றும் புதிது இல்லை. 2002-ல் நடைபெற்ற குஜராத் படுகொலைகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு நடத்தினோம் என்று தெஹல்கா இணையதள ஊடகம் நடத்திய ரகசிய நடவடிக்கையில் இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையும் இந்த நாடே பார்த்தது.


கோப்ராபோஸ்ட் இணையதள ஊடகம் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில் ராமஜென்ம பூமி இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பி.எல்.ஷர்மா பிரேம், தர்மேந்திர சிங் குர்ஜார், கல்யாண் சிங், பவன் பாண்டே, சந்தோஷ் துபே, சாதவி ரிதம்பரா, ராம்ஜி குப்தா, ரமேஷ் பிரதாப் சிங்,பிரகாஷ் சர்மா, சம்பத் ராய் பன்சல்,மொறேஷ்வர் சாவே ஆகிய இருபத்தி மூன்று முக்கிய நபர்களிடம் இந்த நேர்காணல்கள் நடத்தப்பட்டு உள்ளன.


1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் சர்க்கேஜ் என்ற இடத்தில் 38 பேர் கொண்ட குழுவுக்கு லட்சுமணச் சேனா என்ற பெயரில் ராணுவத்தில் இருந்த உயர் அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து நீல டீலா என்னும் இடத்தில் நடைபெற்ற பயிற்சியில் கொக்கிகளைச் செலுத்தி எப்படி ஒரு கட்டிட அமைப்பின் உச்சியில் ஏறுவது என்று பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.அத்தோடு எப்படியாவது மசூதியை இடித்துவிட வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத்தின் ரகசிய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. இந்தப் பயிற்சியில் ஈடுபட்ட கரசேவகர்களுக்கு மசூதி இடிப்பிற்கு ஒருமாதம் முன்பு வரை, பாபர் மசூதியை இடிப்பதற்குத்தான் பயிற்சியளிக்கப்படுகிறது என்பது சொல்லப்படவே இல்லை.



கரசேவை நடத்தி இடிப்பதற்கு லட்சுமணச் சேனா என்று ஒரு தயார் செய்த இவர்கள், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போகும் போது மாற்றுத் திட்டமாக டைனமைட்டைக் கொண்டு இடிப்பதற்குச் சிவசேனாவின் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பிரிவு தயாராகவே இருந்துள்ளது.இந்த மாற்று திட்டத்திற்கும் பதிலியாகப் பெட்ரோல் குண்டைக் கொண்டு மசூதியைத் தகர்ப்பதற்கான திட்டத்தையும் வைத்திருந்தனர்.


பெட்ரோல் குண்டைப் பயன்படுத்துவது நிறைவேறாமல் போனதால், இறுதியில் கரசேவையில் ஈடுபட்டவர்களே மசூதியை இடித்துத் தள்ளியுள்ளனர்.



பாபர் மசூதி இடிப்பு பற்றி அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங்குடன் திட்டம் பற்றிய தகவல் தொடர்ந்து பரிமாறப்பட்டு வந்துள்ளது.டிசம்பர் 5 ஆம் தேதியே தகவல் பரிமாறப்பட்டு, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ செய்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 6 ஆம் தேதி தன்னுடைய பதிவியைக் கல்யான் சிங் ராஜினாமா செய்ய எடுத்த முடிவை, குடியரசு தலைவர் ஆட்சி வந்து இடையூறு செய்துவிடும் என்று முரளி மனோகர் ஜோஷி கேட்டுக் கொண்டதன் பேரில் நிறுத்தி வைத்துள்ளார்.


சந்தோஷ் துபே, வினய் கட்டியார், பி.எல் சர்மா போன்ற ராமஜென்ம பூமி இயக்கத்தின் முக்கிய நபர்கள் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிற்கும் பாபர் மசூதி இடிப்பு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அப்போதிருந்த நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசு பாபர் மசூதி இடிப்பைப் பற்றி முற்றிலும் தெரிந்திருந்த போதிலும் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது.


பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் காங்கிரசின் பங்கு என்பது, 1949 ஆம் ஆண்டுக் குழந்தை ராமர் சிலையை மசூதியின் உள்ளே வைப்பதற்கான சதிச் செயலில் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் ராகவ்தாசின் உதவியுடன்தான் நடைபெற்றது. அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வரான கோவிந்த வல்லப பந்தின் நெருக்கமே ராகவ்தாஸ் சதிச் செயலில் பங்கெடுக்கக் காரணமாக இருந்தது.


1986 -ல் நடைபெற்ற ஷா பனோ வழக்கை அடுத்து ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு மசூதி நுழைவாயிலை இந்துக்களின் வழிபாட்டிற்குத் திறந்துவிட்டது. இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில், காங்கிரசின் பல்வேறு தலைவர்கள் தங்களுடைய அரசியல் லாபத்திற்காகப் பாபர் மசூதி விவகாரத்தைப் பயன்படுத்தியே வந்துள்ளனர். இப்போது பாபர் மசூதி இடிப்பிலும் பங்கெடுத்து தனது மதச்சார்பின்மை முகமூடியை நிரந்தரமாகத் தொலைத்துள்ளது காங்கிரசு.



ராமஜென்ம பூமி இயக்கத்தின் வீச்சும், வேகமும் அதிகரிக்க ஓரிருவர் இறக்க வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் உத்தரவிட்டதும் அம்பலமாகியுள்ளது.

அதுவும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஓரிருவர் இறந்தால் கலவரம் நாடு முழுக்கப் பற்றிப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வங்காளத்தைச் சார்ந்த கோத்தாரி சகோதரர்களும், ராஜஸ்தானைச் சார்ந்த மகேந்திர சிங்கும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.



பாபர் மசூதி இடிப்பு என்பது 1992-ஆம் ஆண்டோடு முடிந்த கதையல்ல. இன்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்பதுதான் மதவாத பாரதிய ஜனதாவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருக்கிறது.


1990 ஆம் ஆண்டு மண்டல் பரிந்துரையை ஏற்று வி.பி.சிங் அரசுத் துறை வேலை வாய்ப்புகளிலும், கல்வித் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அப்போதைய பாரதிய ஜனதா கட்சிக்கு பெருத்த நெருக்கடியை கொடுத்தது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே அத்வானி அயோத்தியில் கரசேவை நடத்துவதற்கான ரத யாத்திரையைத் தொடங்கினார்.



இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் பரிந்துரையை வி.பி .சிங் ஏற்றது, அத்வானியின் ரத யாத்திரை, தொடர்ந்து கொண்டுவரப்பட்ட திறந்த சந்தை பொருளாதாரம், 1992-ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு ஆகிய இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.


அரசுத் துறையில் இட ஒதுக்கீடு வந்தவுடன், சந்தையைத் திறந்துவிட்டு சேவைத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை நோக்கி நம்மை நகர்த்திய இந்திய ஆளும் வர்க்கம் தான், பாபர் மசூதி இடிப்பிலும் பங்கெடுத்துள்ளது.


வஞ்சக நோக்கத்தோடு, மிகச் சாதுர்யமாகத் திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தவர்கள்தான் இன்று சட்டப்படி ராமனுக்குக் கோவில் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கை விடுகிறார்கள். இதனோடு சேர்த்து பெருமுதலாளிகளின் வளர்ச்சியையும் நம்முடைய வளர்ச்சியாகப் பதிவு செய்கிறார்கள்.


இவர்களுடைய தேர்தல் அறிக்கையும்,பாபர் மசூதி இடிப்பிற்கான அத்வானியின் ரத யாத்திரை, மண்டல் பரிந்துரை அமலாக்கத்திற்கு எதிராகவே இருந்ததும் நமக்குச் சொல்வது

ஒன்றே ஒன்றுதான். பாரதீய ஜனதா கட்சி நமக்கான கட்சி இல்லை என்பதே அது.


சமூக விரோத செயல்களைச் செய்துவிட்டு, அதைத் தாங்களின் வெற்றியாகப் பாவித்துப் பெருமிதத்தோடு நேர்காணல் கொடுக்கும் இந்தக் கயவர்கள்தான் வளர்ச்சி என்கிற போலிப் பூச்சோடு தேர்தலுக்காக நம்மிடம் வருகிறார்கள். இந்த மதவாதக் கும்பலை நிராகரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது.

தரவு:
http://www.cobrapost.com/index.php/news-detail?nid=5785&cid=70

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

2 comments:

  1. அயோத்தியில் இராமர் கட்டவேண்டும் என்பது சங்பரிவார்க்ளுடைய நோக்கம் மட்டும் இல்லை. பல இந்துக்களின் எண்ணமும் கூட. இராமர் அங்கு பிறந்த்தாரா என்பதற்கு அடையாளம் கேட்கும் நமது நண்பர்கள் ஹஜ் யாத்திரை போதற்கு அரசிடம் கை ஏந்துவதன் காரணம் என்ன. மதத்தின் பெயரைக்கூறி அரசை பயமுறுத்தி வந்த சிறுபான்மையினரின் துயரம் புரிகிறது.

    இந்து மதத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு அவர்களுக்குத் தேவை பார்ப்பனர்களைப் பற்றிப் பேசுவதுதான். அத்ற்குத் துணை போதற்குத்தான் நமது கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்களே.

    இதுபோன்ற மத விசயங்களில் நமது கம்யூனிஸ்டுகள் தலையிட்டால் மிச்சமிறுக்கிற இரண்டு மானிலங்களும் போகும். பாரதீய ஜனதா இன்னும் உயரும்.

    கோபாலன்

    ReplyDelete

  2. தோழர்.கோபாலன்,

    இராமர் கோயில் எப்படி இந்துக்களின் மனதில் ஏற்றப்பட்டது , அதற்காக சங் பறித்த உயிர்களின் எண்ணிக்கை என எல்லாம் இந்த பேட்டியில் தெளிவாக வருகின்றது. மேலும் இது கோப்ரா போஸ்ட் என்ற ஊடகத்தின் அறிக்கை. எதற்கு தேவையில்லாமல் எல்லாவற்றிலும் நீங்கள் கம்யூனிசுட்டுகளை நுழைக்கின்றீர்கள் ?

    இந்துக்களில் மொத்தம் ஐந்து பிரிவினர் என்கிறது கீதை... பிராமண‌ வர்ண இந்துக்கள், சத்ரிய வர்ண இந்துக்கள், வைசிய வர்ண இந்துக்கள், சூத்திர வர்ண இந்துக்கள், அவர்ண இந்துக்கள்.... இப்படி சாதியை, வர்ணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்து தர்மம் உள்ளது, அதை தான் மனுநீதியும் சொல்கின்றது. இப்படி ஒடுக்குமுறையை அடிப்ப்டையாகக் கொண்டது தான் இந்து மதம்.....

    இராமர் அங்கு தான் பிறந்தாரா? ஆதாரங்கள் ?.... வழமை போல இங்கும் சில பொய்களை சொல்லுங்கள்....

    நற்றமிழன்.ப‌

    ReplyDelete