Monday, March 31, 2014

பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!

30 மார்ச்சு 2014 தமிழ்நாடு

பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!

தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை

ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் !

இலங்கை அரசைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய முயன்று இறுதியில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த இந்திய அரசைக் கண்டிக்கின்றோம்!


ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடரில் கடந்த மார்ச்சு 27 அன்று இலங்கை மீது பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி வகுக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இதே மன்றத்தில் இலங்கையைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கற்றப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் (LLRC) குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரின. கடந்த காலங்களில் உள்நாட்டு விசாரணை என்ற பெயரில் ஒரு பன்னாட்டுப் புலனாய்வைத் தடுப்பதில் வெற்றி கண்ட சிங்கள அரசு இம்முறை (2014 இல்) தோல்வி கண்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. சீனா, பாகிசுதான், இரசியா, கியூபா உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மார்ச்சு 3 ஆம் நாள் தொடங்கி தீர்மானம் நிறைவேறிய நாள் வரை மொத்தம் நான்கு வரைவுகள் வந்துள்ளன. தற்பொழுது இந்த நான்காம் வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 பரிந்துரைகள் உள்ளன.

தீர்மானத்தின் சுருக்கம்:

“இத்தீர்மானம் இலங்கை அரசு நம்பகமான தேசிய செயல்முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் பன்னாட்டுப் விசாரணைக்கான பொறியமைவு ஒன்று அவசியம் என்ற ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவிபிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் கவனத்தில் கொள்கின்றது; கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கால வரையறைக்குள்(2002 முதல் 2009 வரை) இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றது; இன்னொரு புறம், நம்பகமான உள்நாட்டுப் பொறியமைவை ஏற்படுத்தச் சொல்லி இலங்கை அரசை வலியுறுத்துகின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்று கோருகின்றது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு (28 ஆவது கூட்டத் தொடரில்) இந்த முயற்சிகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தை வேண்டுகின்றது. மேலும் இத்தீர்மான வரைவு 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கக் கோருகின்றது.“


உலகத் தமிழர்களின் கோரிக்கை என்பது ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலை , போர்க்குற்றங்கள் , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மீது ஒரு சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு நடத்த வேண்டும் என்பதாகும். முந்தைய ஆண்டுகளில் ஐநா மனித உரிமை மன்றத்தில் உள்நாட்டு விசாரணையே கோரப்பட்டு வந்தது. இவ்வாண்டு உள்நாட்டு விசாரணையா? அல்லது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வா? என்ற புள்ளியில் சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான சர்வதேசப் போராட்டம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடந்தது . இதில் சிங்கள அரசு தோல்வி அடைந்துள்ளது.
13 ஆவது சட்டத்திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் இலங்கையின் ஒத்துழைப்புடனும் உடன்பாட்டுடனும் தான் ஐ.நா. சிறப்பு பிரதிநிதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் இந்தியாவின் தலையீட்டில் நடந்துள்ளது. எப்படியேனும் பன்னாட்டுப் புலனாய்வைக் கோரும் 10(ஆ) பரிந்துரையை நீக்குவதற்கான முயற்சியை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்துள்ளன. அதை நீக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மறுத்துவிட்டன.


அதன் பின்னர், இரண்டு முக்கிய காரணங்களுக்காக புலனாய்வுக்கான கால அளவை 2002 – 2009 ஆம் ஆண்டுக்குள் முடக்கும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கட்டமைப்புரீதியான இன அழிப்பு நடந்துவரும் 2009 க்குப் பின்னான - இன்று வரையிலான காலகட்டமும் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டால் இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றம் அம்பலமாகிவிடும் என்பது ஒரு காரணம். மற்றொரு காரணம் 1987 – 1989 காலகட்டத்தில் இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்கள் மீது நடத்திய போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரன குற்றங்களும் அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதாகும்.


தீர்மானத்திற்கான வாக்கெடுப்பின் போது தீர்மானம் மீதான விவாதத்தைத் தள்ளிப் போடுவதற்கு - பன்னாட்டுப் புலனாய்வுக்கான பரிந்துரையை நீக்குவதற்கு - முயன்றுள்ளது இந்திய அரசு. இதில் வெற்றியடைய முடியவில்லை. இறுதியில் இலங்கையுடனான தன் நட்பை உறுதி செய்து கொள்ளும் விதமாக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்திய அரசு வெளிநடப்பு செய்தது. ”பன்னாட்டுப் புலனாய்வைக் கோருவதென்பது இலங்கையின் தேசிய இறையாண்மையையும் அரசு நிறுவனத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகும், இது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இறையாண்மைக்காக கவலைப்படும் இந்தியா, தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கின்றது.
பன்னாட்டுப் புலனாய்வுக்கான தீர்மானத்தை ஒட்டிய தொடர் நிகழ்வுகள் நேர்கோட்டில் அமையப்போவதில்லை. ’இந்த தீர்மானத்தை நிராகரிக்கிறோம்’ என்று இராசபக்சே அறிவித்துவிட்டார். தீர்மானத்தின்படி பன்னாட்டுப் புலனாய்வை மேற்கொள்ளச் சொல்லி நம்முடைய போராட்டத்தைத் தொடர வேண்டும். இது மேற்குலக அரசுகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தும். சிங்கள அரசு மீது அரசியல்,பொருளாதார, பண்பாட்டுத் தடைகளை விதிக்கச் சொல்லிப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இது சிங்கள அரசை மேலும் தனிமைப்படுத்தும். தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தம் கொடுப்பதற்கும் வேகமாக நடந்துவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகத் தமிழீழ மக்கள் போராடுவதற்கும் தேவையான புற அழுத்தமாக இவை அமையும்.


இந்த வகையில் இத்தீர்மானத்தில் நம்முடைய அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லையென்றாலும் இலங்கையின் உள்நாட்டு விசாரணையை மறுத்து பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிவகுத்திருப்பதை வரவேற்கின்றோம். நீண்ட போராட்டத்தில் ஒரு சிறு முன்னேற்றம் இது. இத்தகைய தீர்மானங்களின் பின்னணியில் வல்லரசுகளின் நலன்கள் ஒளிந்திருப்பது உண்மையென்றாலும் உலகத் தமிழர்களின் போராட்டத்தினால் தான் இது சாத்தியமானது. குறிப்பாக, இது தாயகத் தமிழர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறு வெற்றி.


அதே நேரத்தில், சர்வதேச அரங்கில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்க்கத் தொடங்கிவிட்டது சிங்கள அரசு. தமிழர் தாயகத்தில் குவிக்கப்பட்டுள்ள ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான சிங்கள இராணுவத்தை வெளியேற்றக் கோரி போராட வேண்டும்.


இந்த தீர்மானத்தை வலுப்படுத்தச் சொல்லி நாம் கோரினோம். ஆனால், காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு தீர்மானத்தை வலுப்படுத்தவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. இந்தியா மட்டுமல்ல இந்தியாவோடு சேர்ந்து 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பா.ஜ.க. வின் மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவரை தொடர்ந்து வரும் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் பா.ஜ.க.வும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இது மீள் உறுதி செய்கின்றது. தமிழ்நாட்டு மக்களின் போராட்டம் மட்டுமே இந்திய சிங்களக் கூட்டை முறிக்கும்.

ஐ.நா. தீர்மானத்தின்படி பன்னாட்டுப் புலனாய்வு நடத்துவதை உறுதி செய்யத் தொடர்ந்து போராடுவோம்! இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கைக்காக தொடர்ந்து போராடுவோம்!

எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் உள்ள தமிழர் அமைப்புகளும் இன உணர்வாளர்களும் உறுதியோடு எடுத்த கூட்டு முயற்சியின் பயனாகவே இந்த வெற்றியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு படியாக முன்னேறி இறுதி வெற்றியை அடையும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்று உறுதி ஏற்போம்.

த. செ மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

கு. இராமகிருஷ்ணன்
பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தியாகு
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

செல்வி
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி

தி. செந்தில்
ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்சு இயக்கம்

Friday, March 28, 2014

மோடி - வெளிச்சங்களின் நிழலில்! நூல் வெளியீடு


மோடி = வளர்ச்சி ?
மோடி = முன்னேற்றம் ?

குஜராத் - மோடி - வளர்ச்சி - முன்னேற்றம் - தமிழகம் - எதிர்காலம் குறித்து விரிவாக அலசும்

"மோடி - வெளிச்சங்களின் நிழலில்" - நூல் வெளியீடு

நாள்: 30/03/2014 - கிழமை: ஞாயிறு - நேரம்: மாலை 5 மணி -

இடம் - வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், பனகல் பூங்கா, தியாகராயர் நகர், சென்னை.

நூல் ஆசிரியர்: க‌திரவன் நாகரத்தினம் :

ஆசிரியர் குறிப்பு: தோழர். கதிரவன், சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஊடக அணி உறுப்பின‌ர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், தற்பொழுது பெங்களூரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சிறப்பு அழைப்பாளர்கள்:

தோழர்.கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர்.கோவை இராமக்கிருஷ்ணன், பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

தோழர்.மீ.த. பாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சி(மா.லெ), மக்கள் விடுதலை, தமிழ்நாடு

தோழர்.தைமிய்யா, தலைமை கழக செயற்குழு உறுப்பினர்,த.மு.மு.க‌

தோழர்.அமீர் அம்சா, மாநில செயலாளர், எஸ்.டி.பி.ஐ

தோழர்.சிந்தனை செல்வன், மாநில பொது செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி



பதிப்புரையிலிருந்து சில வரிகள்....

‘வளர்ச்சி’யின் பெயரால் மோடியை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கம், ஈழத்தின் பெயரால் காங்கிரசுக்கு மாற்று என்று கருதிக் கொண்டு பா.ஜ.க.வை ஆதரிக்கும் மற்றொரு சாரார், என இரு சாரார் தமிழகத்தில் உள்ளனர். தேர்தலைக் கடந்து நீண்ட காலக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் சங் பரிவார் அமைப்புகள், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் சமூகத்தின் ஆழ்மட்டத்தில் வேரூன்றி கிளைப் பரப்பக் கூடியவை. இதற்கு மாற்றாக , நாம் தொடர்ந்து புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தும், போலி வளர்ச்சி கொள்கைகளை எதிர்த்தும் பரப்புரை தொடர வேண்டியுள்ளது. மேலும் மிக எளிதாக பலியிடக்க கூடிய மக்கள் பிரிவினராக இஸ்லாமியர்களைக் கருதுகின்றது இந்திய ஆளும்வர்க்கம்.

இந்தப் பின்னணியிலே ‘மோடி - வெளிச்சங்களின் நிழலில்’ என்ற இந்நூலை வெளியிடுகின்றோம். இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்திற்கு ஒரு கருவியாக இந்நூல் பயன்படும் என்று நம்புகிறோம். இதை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுமாறு ஜனநாயகத்தின் மீது பற்றுக் கொண்ட பல்வேறு அரசியல் நீரோட்டங்களைச் சேர்ந்த ஜனநாயக ஆற்றல்கள், அரசியல் இயக்கங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். ஏராளாமான உண்மைகள், தகவல்கள், எளிய நடை, சிறப்பான எடுத்துக்காட்டுகள் என்ற சிறப்பம்சங்களைத் தாண்டி அவருடைய ஜனநாயக உணர்வின், மக்கள் மீது கொண்ட பற்றின் எழுத்து வடிவமே இந்நூல்.

-----

இந்த நூல் எமது இயக்கத்தின் பதிப்பகமான "சிற்றுளி பதிப்பகத்தின்" முதல் வெளியீடாக வெளி வருகின்றது. இந்நூலிற்கு தோழர் விடுதலை இராசேந்திரன் அணிந்துரை எழுதியுள்ளார்.

நூல் விலை : 25 ரூபாய்




சேவ் தமிழ்சு இயக்கம்
98844 68039

Tuesday, March 25, 2014

ஐ.நா மனித உரிமை மன்றமும், இலங்கை மீதான தீர்மானமும்..



ஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது அம்மன்றத்தில் உள்ள 45 நாடுகளின் பிரதிநிதிகளிடையே விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தீர்மானத்தின் முதல் வரைவைவிட (முதல் வரைவை குறித்த சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடு http://save-tamils.blogspot.in/2014/03/blog-post_3351.html ) இரண்டாம் வரைவு வலுகுறைந்துள்ளது, குறிப்பாக சரத்து 9ல் "இலங்கை அரசின் அனுமதியுடன் தான் ஐநா மனித உரிமை மன்ற ஆலோசனைகளை செயல்படுத்த வேண்டும்" என்று தீர்மானத்தை இன்னும் நீர்த்து போகச் செய்ததில் இந்தியா அரசின் பங்கு அதிகம்.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டங்களாலும், சர்வதேச மனித உரிமை அறிக்கைகளாலும், அதோடு தங்களது நலன்கள் அடிப்படையிலும் பல மேற்குல நாடுகள் நடந்துகொண்டிருக்கும் ஐநா மனித உரிமை மன்ற விவாதங்களில் "இலங்கை அரசு மீது ஒரு பன்னாட்டு புலனாய்வு உடனடியாக தேவை" என்ற கருத்தை வெளிப்படையாக முன்வைக்கின்றன. ஆனால் இந்தியாவோ தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக காட்டிக்கொண்டு எப்படியாவது பன்னாட்டு புலனாய்வை தடுத்து இலங்கையை காக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது. சீனா-ரஷ்யா ஆதிக்கத்தைத் தகர்த்து தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள‌ இலங்கையில் தனக்கான இடத்தை பிடிக்கத் துடிக்கும் அமெரிக்க-இங்கிலாந்து கூட இலங்கை மீது தீர்மானத்தை கொண்டுவரும் இவ்வேளையில் இலங்கை-இந்தியா கூட்டணி மட்டும் உடையாமல் அப்படியே இருக்கிறது.

இந்தியா-இலங்கை கூட்டை உடைக்க ஏழரை கோடி மக்கள் கொண்ட தமிழகத்தால் தான் முடியும். இந்தியாவின் தீர்மானத் தலையீட்டைத் தடுத்து வலுவாக்க வேண்டிய அல்லது திருத்தி நம்முடைய கோரிக்கைகள் உள்ளடக்கிய தீர்மானம் கொண்டுவர வைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டிற்கு உண்டு. ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இன்னமும் நம் குழப்பங்கள் தீரவில்லை. வரலாற்றில் இருந்து பாடம் கற்பதில் மெத்தனமாக இருக்கிறோம்.

தீர்மானத்தை ஒட்டி ஈழத்தமிழர்களின் முதன்மை எதிரியான சிங்கள இனவெறி அரசை தனிமைபடுத்த கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துகின்றோமா? நிலைப்பாடுகள் எடுக்கும் போது யதார்த்த அரசியல் நிலையிலிருந்து எடுக்காமல், கற்பனையில் ஆகாயத்தில் கோட்டை கட்டுவது எவ்விதத்திலும் இன்றும் இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழ்ர்களுக்கு எவ்விதத்திலும் உதவாது. போருக்கு பிந்தைய புலம்பெயர்ந், தமிழ்க‌ தமிழர்களின் ஐந்தாண்டுகால போராட்டங்களின் தொடர்ச்சியாக சர்வதேச சூழல் இப்போது சிங்கள அரசிற்கு எதிராக மாறியுள்ளது. சிங்கள அரசு மீது பன்னாட்டு பொறியமைவை ஏற்படுத்துவதன் மூலம் அதனை சர்வதேச சமுதாயத்தில் இருந்து தனிமைபடுத்தி ஈழத் தமிழர்கள் மீது தொடரும் கட்டமைப்பு ரீதியிலான இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும். ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானத்தில் சுதந்திரமான(தற்சார்புள்ள) பன்னாட்டு புலனாய்வை கொண்டுவருவதே நம் உடனடி இலக்காக இருக்க வேண்டும்.

அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கலாமா? எதிர்க்கலாமா?

அமெரிக்கத் தீர்மானம் `ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இலங்கை அரசு மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை வெளிப்படையாக கோரவில்லை. ஈழம், தமிழர் என்ற வார்த்தைகள் இல்லை, அதேவேளை 13வது சட்ட திருத்தம் எனும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வை கோருகிறது. (இதன் மூலம் இந்தியாவின் பங்கு இருப்பது வெளிப்படையாக தெரிகின்றது). ஆனால் இந்த தீர்மானத்தில் குறைந்த பட்சமாக நாம் கோருவது ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை, போர்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்த இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த புலனாய்வு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கு குறைவாக கோரும் எதையும் நாம் ஏற்கப்போவதில்லை.


ஆனால் 13வது சட்டத் திருத்தத்தோடு ஈழத்தமிழர், இனப்படுகொலை என்ற வார்த்தைகளும் இல்லாமல் நமக்கு சாதகமான ஒரு தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு மட்டும் வந்தால் அது ஈழ விடுதலை போராட்டத்தை இடை மறிக்கும் என்று எண்ணுவ‌வதே நம்மில் சிலருக்கு இருக்கும் சிக்கல். ஈழத் தமிழர்களின் இன்றைய ய‌தார்த்த நிலையைத் தெரியாதவர்கள் பன்னாட்டு புலனாய்வே இருந்தாலும் தீர்மானம் நிறைவேறினால் தமிழீழக்கோரிக்கையை கைவிட்டதாகிவிடும், என்றும்,போற்குற்றங்களை மட்டும் புலனாய்வு கொண்டுவரும் சர்வதேச சமூகம் புலிகளையும் விசாரித்து, அவர்களை முடக்கிவிடுவார்கள் என்றெல்லாம் தேவையற்ற குழப்பங்கள் எழுப்பப்ப‌டுகின்றன. என்ன நேர்ந்தாலும் ஈழத்தமிழர்கள் தனித்தமிழீழக் கோரிக்கையை கைவிடப்போவதில்லை, புலிகளின் மீது வைத்த குற்றங்களுக்கு எந்த சான்றும் இல்லை, அதே நேரம் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான எல்லா சான்றுகளும் இவ்விசாரணையில் மீண்டும் வைக்கப்பட்டு, தமிழர்களுக்கு ஈடு செய் நீதி கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.

ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையும், தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வும்!

போருக்கு பின்னால் 90 ஆயிரம் துணையை இழந்த‌ பெண்கள் ஈழத்தில் தங்கள்குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பல கிராமங்களில் 80 விழுக்காடு பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

மீன்பிடித்தல், விவசாயம் போன்ற தொழில்களை செய்வதை தடுக்கிறது சிங்கள அரசு.

விவசாய விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டு ராணுவத்திற்கும் சிங்கள குடியமர்வுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

5 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் ராணுவம் வடக்குப் பகுதியில் இன்றும் குவிக்கப்பட்டுள்ளது.

பல இந்து, முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் புத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வழிபாட்டுரிமை மறுக்கப்படுவதோடு பண்பாட்டு சிதைவு திட்டமிட்டு நடத்தப்படுகிறது.

சொந்த தொழில் தொடங்க அனுமதி மறுக்கும் அரசு, திட்டமிட்டு வடக்கு கிழக்கின் தற்சார்பு பொருளாதாரத்தை அழித்து, அதை தெற்கை சார்ந்த பொருளாதாரமாக மாற்றுகின்றது.

போரினால் கை கால் இழந்து நகர முடியாத அளவிற்கு ஊனமான நிலையில் பலர் உள்ளனர்.

போரின் போது சரணடைந்த பல போராளிகளை பற்றி இன்னமும் தகவல் இல்லை. காணமல் போனதாக கூறப்படும் பல்லாயிரக்கானக்கானோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

இன்றளவும் வெள்ளை வேன் மூலம் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், அப்பாவி மக்கள், ஆண்கள் கடத்தப்படுவது, கொல்லப்படுவது தொடர்கிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள் உள்ளே நுழைவதில் இன்றும் சிக்கல் இருக்கிறது.

இனப்படுகொலை இலங்கை மீது ஏற்பட்டுக்கொண்டிருந்த சர்வதேச அழுத்தங்களைத் தடுக்க நினைத்த இந்தியா, ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டு சிங்கள அரசால் கிடப்பில் கிடந்த இலங்கை அரசியலமைப்பின் 13வது சட்டதிருத்தத்தை அமுல்படுத்த அறிவுறுத்தியது. அதன்படி வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தி, இலங்கை விடுதலைப்புலிகளின் மீதான பயங்கரவாத போரை முடித்து (இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலான‌ 'தி இந்து' இன்றளவும் இப்படித்தான் எழுதிவருகிறது) சனநாயகத்தை அங்கு மலரச்செய்து உலகிற்கு காட்ட முயற்சித்தது இந்திய-இலங்கைக் கூட்டணி.


வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பு நிராகரிப்பு, காணி(நில) உரிமை-போலிஸ் உரிமை கூட இல்லாத நகராட்சி அந்தஸ்த்துள்ள மாகாண சபை, ஒன்றுபட்டு இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற 13வது சட்டதிருத்தம் தங்களது ஈழ தேசிய விடுதலைக்கு எதிரானது என்று தெரிந்தும் தங்களின் இலட்சியமான தனித் தமிழீழ கோரிக்கையை தூர இலக்காக கொண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலை ஈழத்தமிழர்கள் இடை நிவாரணமாக பயன்படுத்திக்கொண்டார்கள். ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து கொஞ்சமாவது மீண்டு சிவில் நிர்வாகம் கிடைக்க 70% அதிகமான மக்கள் தேர்தலில் வாக்களித்தனர், தாங்கள் ஈழக் கோரிக்கையை கைவிடவில்லை என்பதற்கு சிங்கள ஆளும் வர்க்க கூட்டணிக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வாக்களித்தனர். தாயக நில அபகரிப்பு, வாழ்வாதார நெருக்கடி, வாழ்க்கையே ஒவ்வொரு நாளும் மரண வேதனை என்ற கோரப்பிடியில் இருக்கும் மக்களால் அப்படித்தான் செயல்பட முடியும். அதுதான் சரியும் கூட.

தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்படும் ஈழ ஆதரவு போராட்டங்களே ஈழ மக்களுக்கு நம்பிக்கை. சிறுசிறு வழிகளில் சனநாயக போராட்டங்களை அவ்வப்போது எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சனநாயக வெளி கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. உதாரணம் காமன்வெல்த் மாநாட்டின் போது காணாமல் போனவர்களை மீட்டுக் கொடுக்கும்படி காமன்வெல்த் நாடுகளின் பிரதிநிதிகளை நோக்கி வீதிக்கு வந்து போராடினார்கள்.

ஏன் வேண்டும் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு?

கடந்த ஆண்டு ஐநா மனித உரிமை மன்ற ஆணையர் நவிபிள்ளை இலங்கைக்கு விசாரிக்க வரும்போது சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புகள் பல ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள். பன்னாட்டு புலனாய்வு வரும்போது சர்வதேச இடையூறு வரும், அப்படியொரு சர்வதேச பொறியமைவு வந்தால் ஈழத்தின் மீதான ராணுவபிடியை விலக்க வேண்டிருக்கும் என்பது சிங்கள அரசு தரப்பிற்கு நன்றாக தெரிகிறது.

அதனால்தான் சிங்கள இனவெறி அரசை உலகிற்கு அம்பலபடுத்தவும், சிங்கள அரசை உலக அரங்கில் இருந்து தனிமைபடுத்தவும், நிலங்கள் அபகரிப்பு, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு, மக்களின் வாழ்வாதார நெருக்கடி, பண்பாட்டு சிதைப்பு என 2009 இனஅழிப்பு போருக்கு பின்னும் தொடரும் கட்டமைப்பு ரீதியான இனஅழிப்பு செய்வதை உடனே தடுக்கவும், ஈழத்தில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தை வெளியேற்றவும், மிகப்பெரிய மரண நெருக்கடியில் இருக்கும் ஈழ மக்களுக்கு போராட ஒரு சனநாயக வெளியை ஏற்படவும் இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலானாய்வு நடத்தக் ஈழத்தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கோருகிறார்கள். நாமும் அந்தக் கோரிக்கையை வலியிறுத்தி போராடிவருகிறோம்.

பன்னாட்டு புலனாய்வே தீர்வை கொடுத்துவிடுமா?

தற்சார்புள்ள பன்னாட்டு புலானாய்வு நடத்துவதாலே, அதுவும் குறிப்பாக இனப்படுகொலைக்கான தற்சார்பு பன்னாட்டு புலனாய்வு நடத்தினால் தான் சர்வதேச நாடுகளும் ஐநாவும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தும் என்று சிலர் கருதி வருகிறார்கள். அது தவறான கருத்து. ஈழ விடுதலை பாதையில் இன்று மிக முக்கிய பகுதி தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை நடத்த கோருவது. அவ்வளவே, அதுவே தீர்வை எழுதிவிடாது.


சர்வதேச சட்டங்களின் படி, ஈழ மக்களின் சாட்சியங்களை வைத்து புலனாய்வு முடிந்து கிடைக்கும் தீர்ப்பை வைத்து மீண்டும் சர்வதேச நீதிமன்றங்களை அணுகி சர்வதேச அமைப்புகள் மூலமாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோர வேண்டும், அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வின் ஊடாக கிடைக்கும் சனநாயக வெளியைப் பயன்படுத்தி ஈழ மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களினாலும், சர்வதேச நாடுகளின் அழுத்தங்களினாலும் பொதுவாக்கெடுப்பு நடத்தி ஈழத்தை வென்றெடுக்க முடியும்.

இவையெல்லாம் ஐநா அமைக்கும் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை இலங்கை அனுமதித்தால் தான் நடக்கும், ஒருவேளை இலங்கை அதை புறக்கணித்தால் உலக‌ நாடுகள் பொருளாதாரத் தடை கொண்டுவரும், ஒரு அழுத்தமான பொழ்றியமைவு இலங்கை மீது ஏற்படும். அவ்வாறாக படிப்படியான பன்னாட்டுசர்வதேச பொருளாதாரத் தடை, தொடர்ச்சியான பண்பாட்டு, விளையாட்டு புறக்கணிப்பின் மூலம், சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக ஈழத்தின் மீதான இலங்கையின் பிடியை தளர்த்தி ஈழ விடுதலையை அங்கீகரிக்க முடியும். ஆகவே தான் இன்றைய சூழலில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு முதன்மையானது என அதனை முன்னெடுக்கிறோம்.

எப்படி சாதிக்கப் போகிறோம்?

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஐநா உலக அரசுகளின் சபை. ஐநாவில் பாதுகாப்பு அவையே அதிக அதிகாரம் பெற்றது. பாதுகாப்பு அவையில் இருக்கும் 5 வல்லரசு நாடுகளில் எதுவொன்றும் தன்னுடைய வீட்டோ அதிகாரம் மூலம் அதில் வரும் எந்த தீர்மானத்தையும் தோற்கடிக்க முடியும். ஐநா மனித உரிமை மன்றத்தில் தான் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரம் இல்லை, இது ஓரளவிற்கு சனநாயகமுள்ள மன்றம். எந்த ஒரு தேசிய இனப்போராட்டமும் சர்வதேச களத்தில் தான் முடிவுபெறுகிறது. எனவே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடைமுறையில் இருக்கும் இந்த சர்வதேச அமைப்பை, சிங்கள அரசை தனிமைபடுத்த பயன்படுத்துவது அவசியமானது. அதன் மூலம் தமிழீழத் தேசிய இனத்தின் மீது இன்றளவும் நடைபெற்று வரும் மிகப்பெரிய ஒடுக்குமுறைகளை, இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியும்.


ஈழத்தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழகத் தமிழர்களின் ஐந்தாண்டு போராட்டங்கள், சர்வதேச மனித உரிமைமன்றங்களின் அறிக்கைகள், வெளிவந்த சாட்சிகள், ஆவணங்களின் காரணமாகத்தான் உலக நாடுகள் இன்று இலங்கை மீது ”தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு உடனடியாகத் தேவை” என்று பேசிவருகின்றன. ஆசியாவின் வல்லரசான சீனாவின் ஆதிக்கத்தை உடைத்து
தெற்காசிய பிராந்தியத்தில் தனது நலனுக்காக, கடந்த இரண்டு தீர்மானங்களாக இலங்கை மீது உள்நாட்டு விசாரனையை மட்டும் கோரிய அமெரிக்கா 2014 தீர்மானத்தில், 8வது சரத்தில், பன்னாட்டு புலனாய்வு நடத்த ஐநா மனித உரிமை ஆணைய அலுவலகத்தைக் கோருகிறது. நமது உடனடி இலக்கான “தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை” அமெரிக்காவோ, கியூபாவோ, தென்னாப்பிரிக்காவோ எந்த அரசு கொண்டுவந்தால் என்ன, அதன் விளைவு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவப்போகிறது. அதனால் அதனை வரவேற்பது நமது கடமையாகும்.


2009க்கு முன்புவரை தனது ராஜதந்திரம் மூலம் அனைத்து அரசுகளையும் ஓரணியில் சேர்த்து ஈழத்தமிழர் தரப்பை தனிமைபடுத்தி பெரும் இனப்படுகொலையை செய்துமுடித்தது இலங்கை அரசு. வல்லரசு நாடுகளுக்குள் இருக்கும் போட்டியால், மேற்குலக நாடுகள் இன்று “இலங்கை மீது பன்னாட்டு புலனாய்வு உடனே வேண்டும்” என்று திரும்பியுள்ள நிலையில் உலக அரங்கில் சிங்கள அரசை
தனிமைபடுத்த கிடைத்த நல்ல தருணம் இது. போருக்குப்பின் ஐந்தாண்டுகளாக தொடரும் இன அழிப்பில் இருந்து தாயத்தை காப்பதற்கு இது மிக அவசியமானதாகும்.


இந்த பன்னாட்டு புலனாய்வு எனும் சர்வதேச பொறியமைவை சரியாக பயன்படுத்தாமல், ”அமெரிக்கா இலங்கையை இன்றும் காக்க நினைக்கிறது, அமெரிக்கா-இங்கிலாந்து-இந்தியா-இலங்கை-ஐநா அனைவரும் கூட்டு இனப்படுகொலையாளிகள், அன்றும் கூட்டாளிகள் இன்றும் கூட்டாளிகள், அனைவரும் இனப்படுகொலைக்காக உடனே தண்டிக்கப்பட வேண்டும்” என்பது யாரிடமும் கோரிக்கை வைக்க முடியாததகவும், சிங்கள அரசை தனிமைப்படுவதைத் தடுப்பதாகவும், சிங்கள அரசு விரும்பிய வேலையைச் செய்வதாகவும், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை செய்யாததாகவும் அமைந்து விடும். இந்த தருணத்தில் அனைவரையும்
தண்டிப்பது முக்கியமா? அல்லது இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அரசியல் நீதியாக தமிழீழம் அமைய இலங்கை அரசு மீது சர்வதேச பொறியமைவு ஏற்படுத்துவது முக்கியமா? இந்த நேரத்தில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை தவறவிடுவது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாய் முடியும்.


இந்தியாவை நோக்கி...


ஏழரை கோடித் தமிழர்களை தன் குடிமக்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்திய அரசைத்தான், ஐநா மனித உரிமை மன்றத்தில், தீர்மானத்தை திருத்தம் செய்யவோ அல்லது எதிர்த்து வாக்களிக்கவோ அல்லது வேறு தீர்மானம் கொண்டுவரவோ நாம்
கோரமுடியும். தன் குடிமக்களின் கோரிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை அதற்குண்டு. 2009 இனப்படுகொலையில் கூட்டுக்குற்றவாளி என்பது மட்டுமல்ல, இன்றளவும் உலக அரங்கில் சிங்கள அரசை காக்கும் வேலையை செய்கிறது இந்தியா.
அந்த நட்பை முறித்து ஈழ விடுதலைக்கு பாதை அமைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்குண்டு. இந்தத் தருணத்தில் மாற்றுத் தீர்மானம் கொண்டுவர அரசேதும் இல்லாத நாம், அமெரிக்கத் தீர்மானத்தை எரிப்பதாலோ, எதிர்ப்பதாலோ, ஐநாவை
புறக்கணிப்பதாலோ எந்த பயனும் இல்லை. அது தமிழக போராட்டங்களை நீர்த்துப்போகவே செய்யும்.

அதனால் தான் நமது உடனடி இலக்கான, இலங்கை மீது "தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு" நடத்த "புலனாய்வு ஆணையம்" அமைத்திட ஐநா மனித உரிமை மன்றத்தில் உடனடியாக வகை செய்! என்று இந்தியாவை நோக்கி, குவிமையப்படுத்தி கோரிக்கை
வைக்கிறோம். இது இந்தியாவை பணிந்து கேட்கும் கோரிக்கை அல்ல, இது தமிழ்த் தேசிய கோரிக்கை, தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் குரலாக தமிழக சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட கோரிக்கை. இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்கி நமது இலக்கை அடைய ஒன்றிணைவோம், போராடுவோம்,வெற்றிபெறுவோம்.

ஸ்நாபக் வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்

Monday, March 24, 2014

இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை

செய்திக் குறிப்பு
இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டு புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி
சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை

நாள் : 24 - மார்ச்சு ,2014 ( திங்கட்கிழமை) | காலை 11 மணியளவில்
இடம் : சென்னை ஆளுநர் மாளிகை அருகில்


இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீது புரிந்த இனப்படுகொலை , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் , போர்க்குற்றங்கள் மீதான சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு ஆணையம் அமைத்திட ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்திய அரசு உடனடியாக வகை செய்ய வலியுறுத்தியும், கடந்த இரண்டு ஆண்டு தீர்மானங்களை இந்தியா நீர்த்து போகச் செய்து இலங்கையை பாதுகாத்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது. அவ்வாறு இந்த ஆண்டு தீர்மானத்தில் இந்தியா எந்தவித நீர்த்துப் போகச் செய்யும் வேலையையும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் 18 தமிழக அரசியல் இயக்கங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் இன்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், அமைப்புகள்:

தோழர் கொளத்தூர் மணி திராவிடர் விடுதலை கழகம் ,
தோழர் கோவை இராமகிருஷ்னன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,
தோழர் தியாகு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
எஸ்.டி.பி.ஐ
தோழர் செல்வி தமிழ்நாடு மக்கள் கட்சி ,
தோழர் பொழிலன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் ,
தோழர் செந்தில், சேவ் தமிழ்ஸ் இயக்கம்
தோழர் சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
மாணவர் இளையராஜா, தமிழ்நாடு மாணவர் இயக்கம்
மாணவர் தினேஷ், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு,
மேலும் தமிழ்த் தேச மக்கள் கட்சி , தமிழர் குடியரசு முண்ணனி , கம்யூனிஸ்டு கட்சி ( மா.லெ.) மக்கள் விடுதலை , தமிழ்நாடு , காஞ்சி மக்கள் மன்றம் , தமிழர் எழுச்சி இயக்கம் , அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம் , சேவ் தமிழ்ஸ் இயக்கம், தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ச.இளங்கோவன், +91 98844 68039
செய்தி தொடர்பாளர் - சேவ் தமிழ்ஸ் இயக்கம்







Sunday, March 23, 2014

சோற்றுக்குள் யானையை மறைத்தல்


கடந்த 21 ஆம் திகதி(2014), வெள்ளிக்கிழமை மாலை, ”இலங்கை: யானையை மறைத்தல்” என்ற பேராசிரியர்.மணிவண்ணனின் நூல் அறிமுக விழா, சென்னை மயிலையில் உள்ள மேய்ப்புப்பணி வளாகத்தில் நடைபெற்றது.

இப்புத்தக அறிமுக விழாவை நடத்திய ”போர்க்குற்றம் மற்றம் இனப்படுகொலைக்கெதிரான மன்றத்தின்” சிறு அறிமுகத்தைச் செய்து வைத்த சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் இளங்கோ, நிகழ்வு முழுவதையும் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

’பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என சிங்கள அரசு உலகெங்கும் பரப்புரை செய்தாலும், இது தமிழர்களை முற்றாக கொன்றொழித்த இனவழிப்பு போர். அத்தகைய இனவழிப்பு போரின் கொடூரத்தையும், 2010 டப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையையும், சேனல் 4 காணொளி ஆவணங்களையும் தமிழக மண்ணிலிருந்து, வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்ற பணியை, "போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கெதிரான மன்றம்" செய்து வந்திருக்கிறது. அந்த மன்றத்தின் முக்கியமான ஆளுமையான தோழர் பேரா.மணிவண்ணனின் புத்தகமான "இலங்கை: யானையை மறைத்தல்" என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும், வரவேற்று தோழர் இளங்கோ பேசினார்.

தோழர் செந்திலின் உரை:- நூலாசிரியர் பேரா.மணிவண்ணன் அறிமுகம்

2009 இலங்கையின் இறுதி கட்ட போரானது, அதுவரை புவிசார் அரசியலின் மீது, உலக ஒழுங்கின் மீது எங்களுக்கிருந்த நம்பிக்கைகளை முற்றாக தகர்த்தெறிந்தது. உலகெங்கும் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. செயற்கோள்களின் துணையோடு உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளுமளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டோம். இத்தகைய அசுர வளர்ச்சியடைந்த கால கட்டத்திலும், நம் தமிழர்களுக்கெதிராக நடந்த அநீதி பேசப்படவில்லை. நம் கோரிக்கைகளின் நியாயம் எடுத்துச் செல்லப்படவில்லை. இந்திய உளவியலும் மெளனம் காத்தே நின்றது. நமக்கான வலுவான ஆதாரங்களை முன் வைக்கும் நோக்கில், ’இலங்கை: யானையை மறைத்தல்’ நூலை எழுதிய பேரா.மணிவண்ணன், சென்னை பல்கலைக் கழகத்தில் அரசியல் துறைத் தலைவராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வேலூர். தில்லி பல்கலைக் கழகத்தில் 17 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்த மணி வண்ணன் அவர்கள், உலகெங்கும் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து, அறிவுத்துறையில் சீரிய ஆய்வுகள் நடத்திய அனுபவம் வாய்ந்தவர். குறிப்பாக பர்மிய, திபெத்திய விடுதலை போராட்டங்களில் அர்ப்பணிப்புள்ள பங்காற்றியவர்.


போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கெதிரான மன்றத்தில் பேரா.மணிவண்ணன் பேசத் துவங்கும் போது இப்படித் தான் துவங்குவார். “நான் பர்மிய விடுதலை போராட்டங்களுக்காக பேசியிருக்கிறேன். திபெத்திய விடுதலை போராட்டங்களுக்காக பேசியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் யாரும் என்னை ‘நீ எந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவன்’ என்று கேட்டதில்லை. ஈழ விடுதலைக்காக பேசும் போது மட்டும் என்னை தமிழன் என்று அடையாளப்படுத்துகின்றனர்’ இரண்டாம் உலகப்போருக்கு பின் ஐ.நா அவை தோற்றுவிக்கப்பட்டாலும் 1948 முதல் 2009 வரை, உலகெங்கும் இனக்கொலைகள் நடந்திருக்கின்றன. இனக்கொலைகள் நடைபெற்றால், அந்த கொலைகள் இனத்தையே முற்றாக அழிக்கும் (Intent) உள்நோக்கம் கொண்டது தானா என்பதை நிறுவுதலே சிக்கலானது. அதை இனக்கொலை தான் என்பதை ஒப்புக் கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் நலன்கள் பொருந்திப்போக வேண்டும். இதை ஆதாரப்பூர்வமாக நிறுவ, அறிவுத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.

இப்புத்தகத்தில் பல ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரசு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நேரில் கண்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இவர்களின் மூலமாக இந்த ஆதாரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில், இனக்கொலை என்பதன் பொருள் புரிந்து கொள்ளப்படுகின்றது ( Sensitize ). ஆனால் தெற்காசிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் மட்டுமே உணரப்படுகின்றன. இனப்படுகொலைகளை புரிந்து கொள்ளுமளவு இங்கு வளர்ச்சி நிலைமைகள் இல்லை.

ஆகவே சிங்கள அரசுக்கு எதிரான, தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் பேரா. மணிவண்ணனின் இப்புத்தகம் ஒரு வலிமையான கருவியாக பயன்படும் என்றார்.

ச. பாலமுருகன் , மக்கள் சிவில் உரிமைக் கழகம்

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்ச் சமூகம் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து வந்தாலும், தமிழகம் தாண்டி அது செல்லவில்லை. ஈழப் பிரச்சினையின் நியாயமும் எடுத்துச் செல்லப்படவில்லை. மேலும் இப்போர் குறித்த ஆவணங்கள் பிற மொழிகளிலும் இல்லை. தமிழகத்தின் வெளியே இருக்கும் பல்வேறு மனித உரிமை இயக்கங்கள், சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையே ஆன ஒரு போராக மட்டுமே பார்க்கின்றன. ஆகவே மனித உரிமைகள் சார்ந்த நாம், நம்முடைய போதாமையை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.


1960 ஆம் ஆண்டு, இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட “ஜெனிவா மாநாட்டு சட்டம்” ( Geneva Convention Act ), ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் வரையறைகளை பாதுகாக்க வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் படி, எந்த நாடும் போர்க்குற்றத்திற்கும் இனப்படுகொலைக்கும் துணை போகக் கூடாது. அப்படி துணை போனால் அதை எதிர்த்து போராட வேண்டியது, இந்தியக் குடிமகனின் கடமை. அவ்வகையில், நம் போராட்டங்கள் சட்டப்பூர்வமானவையே.

இது உணர்ச்சி வயப்பட்ட போராட்டமல்ல. நீண்ட நெடிய வரலாற்றுப்பின்னணி கொண்ட சனநாயகப் போராட்டம். இதை வெறும் தமிழர் பிரச்சினை, தமிழன் பார்த்து கொள்வான் என்று சுருக்கப்படாமல், உலகின் மெளனத்தை உடைக்க வேண்டும். உலகளாவிய மனித உரிமை பிரச்சினையாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்ட இந்த சாட்சியங்கள் ( புத்தகத்தின் ), அடுத்த தலைமுறைக்கும் கையளிக்கப்படுகிறது. இந்நூலை எழுதியதன் மூலம் பேரா.மணிவண்ணனின் வாழ்வு பூரணமடைந்து விட்டது.


விடுதலை இராசேந்திரன் ( தி.வி.க )

சர்வதேச அரங்கில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் பேரா.மணிவண்ணனின் நீண்ட நெடிய அர்ப்பணிப்புள்ள பணி குறித்து தன் கருத்துகளை பதிவு செய்த தோழர் விடுதலை இராசேந்திரன், இந்நூல் குறித்த சில குறிப்புகளையும் முன் வைத்தார்.

இலங்கையின் இரட்டைக் கோட்பாட்டு செயல்பாட்டை ( Doctrine of Double Effect ) பதிவு செய்கின்றது இந்நூல், ஈழ முரண்பாடுகளை இராணுவ ரீதியாக அடக்குதல், தமிழின அடையாளங்களை முற்றிலுமாக அழித்தல் ஆகிய இரு கோட்பாட்டு செயல்பாட்டின் அடிப்படையில், அங்கு நடந்த இனக்கொலையின் உள்நோக்கத்தை ( Intent ) நிறுவுகிறது இந்நூல்.


தற்போது வந்திருக்கும் அமெரிக்கத் தீர்மானம், பயனற்றது என்றாலும், ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் கீழ் இலங்கை அரசு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதுவே நிரந்தரமான தீர்ப்பும் அல்ல. மேலும், பன்னாட்டு விசாரணை என்ற ஒற்றைக் கோரிக்கை வலுவாகிக் கொண்டிருக்கும் வேளையில், பேரா.மணிவண்ணன் அவர்கள், இந்நூலில், இலங்கை அரசு தனக்குத் தானே விசாரித்துக் கொள்ளும் தகுதியை இழந்து விட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளார். இந்த உண்மையை ஐக்கிய நாடுகள் சபையும் ( UN Expert Committee ) ஒப்புக் கொண்டிருக்கிறது. ஐ.நா அவையின் தீர்ப்புப்படி, LLRC என்றழைக்கப்படுகிற, இலங்கை அரசு தனக்குத் தானே விசாரித்து கொண்டமையில், சர்வதேச ஒழுங்கு பின்பற்றப்படவில்லை. எனவே ஐ.நா மனித உரிமை ஆணையமே தலையிட்டு, பன்னாட்டு விசாரணை கொண்டு வர வேண்டும். ஒரு நாட்டில் இனப்படுகொலை நடந்து, அது மோசமாக வெளியே தெரிய வருகிற போது, அந்நாடு RTP-Right to Protect ந் அடிப்படையில் ம‌க்களை காக்க தவறுகின்ற போது அந்நாட்டில் மற்ற நாடுகள் தலையிடும் உரிமை இருக்கின்றது. இலங்கை அரசு சொல்வது போல, இறையாண்மைக்கு ஊறு என்கிற வாதமெல்லாம் செல்லுபடியாகாது. இதை 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா மாநாட்டுத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

மேலும் இலங்கை அரசு ஒரு அரசு என்பதன் தகுதியை இழந்து விட்டது. அது சிங்கள பெரும்பான்மைவாதத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்து, நிர்வகிப்பதற்கான ஒரு தலைமை மட்டுமே. தென்னாப்பிரிக்காவில் இருந்த அரசு நடந்த குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் சிங்கள அரசு இருமாப்புடன், எங்கள் நாட்டில் எந்த தவறும் நிகழவில்லை என்பதையே திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. தமிழீழத்தில் புலிகளின் மறுபிறப்பை பற்றி பேசும் இதே சிங்கள அரசு, 2009 இறுதி கட்ட போருக்கு பின், புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்ற பிரகடனப்படுத்தியது அரசின் செயல்பாட்டில் உள்ள முரணைக் காட்டுகின்றது.

இனக்கொலை (Genocide ) என்ற சொற்பிரயோகம் ஐ.நா அவையின் தீர்மானத்தில் கொண்டு வரப்படுமேயானால், அடுத்த நிமிடமே, இரு நாடுகளும் ஒன்றாக வாழ முடியாது. தனித்தனி நாடுகளாக பிறப்பெடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகி விடும். எனவே தான், இனக்கொலை என்ற வார்த்தையை கொண்டு வருவதில் ஐ.நாவின் அனைத்து நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன.. முதலில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும். அதன் வாயிலாக, தமீழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு படிப்படியாக நம் காய்களை நகர்த்த வேண்டுமேயன்றி, எடுத்த எடுப்பில் இனப்படுகொலை என்று நாம் வலியுறுத்துவோமேயானால், நீண்ட நெடிய நம் வரலாற்றுப் போராட்டத்தில், சர்வதேச அரங்கில் நாம் பின்னடைவை சந்திக்க நேரிடும்.

நீதியரசர் கே.சந்துரு


திபெத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களையெல்லாம் ஆதரித்து உரிமையுடன் வாழ வைக்கும் இந்திய அரசு, தமிழர்கள் என்றால் மட்டும் பாராமுகமாக இருக்கிறது. பன்னாட்டுச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, ஈழப்பிரச்சினைக்கு பிறகே எழத் தொடங்கியுள்ள நிலையில். புலம் பெயர்ந்தவர்களுக்கும் உரிமை இருக்கிறதென்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் பன்னாட்டு சட்டங்கள் தேவை. ஈழத்தில் நடந்தது இன அழித்தொழிப்பே. கடந்த மூன்று தசாப்தங்களாக சிங்கள அரசு, தன் நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை காக்கத் தவறிவிட்டது. மேலும் இது போன்ற சமகால அரசியல் குறித்து கல்லூரி பேராசிரியர்கள் பேசத் தயங்கும் இக்கால கட்டங்களில், பேரா.மணிவண்ணனின் இவ்வாவணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஈழத்து கவிஞர் காசி அனந்தன்

உலக அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இந்திய தலைமை அமைச்சர், முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய எல்லோரின் கைகளிலும் இந்நூல் கொண்டு சேர்க்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்திய கவிஞர், புத்தகத்தின் முக்கிய பகுதிகளை வாசித்தார். ஈழ மக்களுக்கு நடக்கும் கொடுமைகள், மறுக்க முடியாத சான்றுகள், புள்ளி விவரங்கள், மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள், தரவுகள் ஆகிய அனைத்தையும் பேரா.மணிவண்ணன் இந்நூலில் அடுக்கியுள்ளார்.

தோழர் தியாகு

இலங்கை அரசு செய்வது சோற்றுக்குள் யானையை மறைக்கிற வேலை. அதை அவர்களால் நீண்டகாலம் செய்யமுடியாது. மேலும் நடந்தது இனக்கொலை என்று தெரிந்தும் நம்மால் நிரூபிக்க முடியவில்லை. ஐ.நாவின் எந்த உறுப்பு நாடுகளும் நடந்தது இனக்கொலை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. பேரா. மணிவண்ணன் நடந்தது இனக்கொலை தான் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக அல்ல, ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். எனக்கு முன் பேசியவர்கள் குறிப்பிட்டது போல, இனக்கொலையின் நோக்கம் ( Intent ) நிரூபிக்கப்பட வேண்டும். நோக்கம் என்பது நடந்து முடிந்ததை மட்டும் கொண்டும் பார்க்கப்படுவதில்லை. நடந்து கொண்டிருப்பவைகளை கணக்கில் கொண்டும் பார்க்கப் பட வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகளை அடக்குமுறைக் கருவிகளாக பயன்படுத்தும் போஸ்னியா, செர்பியா நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் சேர்க்க வேண்டும். மேலும் ஐ.நா. அவையில் அனந்தி சசீதரன், சிங்கள அரசு பாலியல் வன்கொடுமைகளோடு, தமிழ்ப் பெண்களை விலைமாதர்களாகவும் மாற்றி வருகிறது. இது தமிழ்ப் பண்பாட்டையே சீர்குலைக்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

ஈழத்தில் நடந்தது இனக்கொலை தான் என்பதற்கு, கோத்தபய இராசபக்சேவின் திமிர்வாதப் பேச்சே போதுமானது. கோத்த்பய சொல்கிறார், “வடக்கில் தமிழர்களை எங்களால் நம்ப முடியாது. அங்கு எம் இராணுவத்தினர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யாவிடில் தான் நான் வியப்படைவேன்” மேலும் தமிழர்களின் குருதிச் சேதத்திற்கு நாங்கள் குருதிக்கொடை” செய்திருக்கிறோம். கோத்தபயவின் இந்த பேச்சு, தமிழர்கள் மீது தான் இத்தகைய கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன என நிரூபிப்பது மட்டுமின்றி, அங்கு இருப்பது சிங்கள இராணுவமே, இலங்கை இராணுவமல்ல என்பதையும் நமக்கு காட்டுகிறது.

மேலும் இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு கருத்தடை, ஆனால் சிங்கள குடும்பத்தில் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கு ஊக்கத் தொகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இனவழிப்பு பங்களிப்பிற்கு, இந்திய அரசிற்கும் ஒரு பெரும்பங்கு இருக்கிறது. இந்திய அரசு இந்த குற்றங்களுக்கெல்லாம் கழுவாய் தேட வேண்டும். ஆனால் அது தானாக தேடாது. நம் தமிழ் மக்கள் தான் அதை தேடும்படி செய்ய வேண்டும்.

தோழர் நெடுமாறன்:

நீதியரசர் கே.சந்துரு குறிப்பிட்டது போல, எந்த அரசுகள் மாறினாலும் வெளியுறவுக் கொள்கைகள் மாறப் போவதில்லை. இந்திரா காந்தி செய்த சிற்சில மாற்றங்களைக் கூட அடுத்து வந்த இராஜிவ் காந்தி அரசு ஒன்றுமில்லாமல் போகச் செய்து விட்டது. மேலும் மாற்றுக் கருத்துகளை முற்றாக நீர்த்துப் போகச் செய்வதற்குரிய சக்திகள் நம் நாட்டிலேயே இருக்கின்றன. இந்நிலையில், பேரா.மணிவண்ணனின் இந்நூல், உலங்கெங்கும் வாழும் அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், புலம் பெயர் வாழ் தமிழர்கள் கைகளில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

பேரா.மணிவண்ணன்

கார்ல் மார்க்ஸ், மூலதனம் என்ற நூலை எழுதிய போது, இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறார். அப்படித்தான் நானும் இந்த ஐந்து ஆண்டுகளாக இப்புத்தக உருவாக்கத்தை சுமந்து திரிந்தேன். இந்நூலை எழுதும் சில தருணங்களில் என்னையறியாமலேயே என் கண்கள் நிறைந்து, அழுகையை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

சேவ் தமிழ்சு இயக்க இளைஞர்கள் போல, இன்றைய இளைஞர்கள் அரசியல் பேசுவதும், மாணவர் போராட்டங்கள் நடப்பதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறன்து. இந்த போராட்டங்கள் நமக்கான நீதி கிடைக்கும் வரை ஓயக்கூடாது. ஓயப்போவதில்லை என்றார், பேராசிரியர்.மணிவண்ணன்.


அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை -குறள் - 76

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது என்கிறது குறள்.

பேராசிரியர் மணிவண்ணனை பொருத்த மட்டும் அவர் ஈழத் தமிழர்கள் மீதும் அவர்தம் விடுதலை மீதும் வைத்துள்ள அன்புக்கும் பற்றுக்கும் அவரின் அறிவாற்றலை பயன்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்று இந்த நூலின் மூலம் நிறுவியுள்ளார். இதன் மூலம் குறள் சொல்லும் அறத்திற்கும், மறத்திற்கும் மட்டுமல்ல அறிவுற்கும் அன்பு சால்பு என்று பேராசிரியர் மெய்பித்துள்ளார். அதனை குறிக்கும் பொருட்டு பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு தமிழீழத்தின் தேசிய மலர் ‘காந்தள்’ படம் பொருத்தி ‘அறிவிற்கும் அன்பு சார்பு’ என்ற நினைவுப் படம் அளித்து ‘போர்க் குற்றங்கள், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்’ சார்பாக மதிப்பளிக்கப்பட்டது.

அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

ஆளுநர் மாளிகை முற்றுகை


ஆளுநர் மாளிகை முற்றுகை - நாள்: மார்ச் 24, திங்கள் கிழமை காலை 10 மணி


அன்று வன்னியில்…. இன்று ஜெனிவாவில்…


அன்று:

ஐந்தாண்டுகளுக்கு முன் 2009 இல் இதே நேரத்தில் ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலோ நாடாளுமன்ற தேர்தல். இங்குள்ள கட்சிகள் வாக்கு சேகரித்துக் கொண்டிந்தன. அங்கு மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிந்தது; போரும் முடிந்தது. 1.5 இலட்சம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டிருந்தார்கள்.


ஈழத்தில் இன்று வரை :

போர் முடிந்தாலும் சிங்கள அரசின் கட்டமைப்புரீதியான தமிழின அழிப்பு தொடர்கின்றது. தமிழர் தாயகப் பகுதியில் இலட்சக்கணக்கில் சிங்கள இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது. தமிழர் நிலங்களைப் பறிக்கின்றது. சிங்களர்களைக் குடியேற்றி வருகின்றது. தமிழர்தம் மத அடையாளங்களை அழித்து பெளத்த அடையாளங்களை நிறுவி வருகின்றது. ஆள் கடத்தல், சட்ட விரோதக் கைதுகள், கொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த யதார்த்தம் தான் எந்த ஒரு சிறு வாய்ப்பையும் தவற விட்டுவிடக் கூடாதென்று நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

இது வரை:

2008-09 ஆம் ஆண்டு இலங்கை அரசு நடத்திய இன அழிப்புப் போரில் நடந்த சர்வதேச விதிமீறல்கள் குறித்த காணொளிகள், புகைப்பட ஆதாரங்கள், நிரந்தர மக்கள் தீர்ப்பாய அறிக்கைகள், மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் வெளிவந்தன. ஐ.நா. மூன்று நிபுணர் குழு தனது விசாரணையின் முடிவாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இந்தப் பின்னணியில் இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீது புரிந்த இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீதான சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றோம். அதன் மூலம்,


• சிங்கள இனவெறியை உலகத்திற்கு அம்பலப்படுத்த முடியும்.

• சிங்கள அரசை உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியும்.

• சிங்கள இராணுவத்தைத் தமிழீழப் பகுதியில் நிறுத்தி வைக்க முடியாதபடி அழுத்தம் கொடுக்க முடியும்.

• தமி்ழர் நிலங்களைப் பறிப்பதை கேள்விக்குள்ளாக்க முடியும்.

இதன் விளைவாய் ஈழத்தில் போராட்ட வெளி விரிவாகும். மக்கள் மீண்டெழுவர்!

இன்று:

உள்நாட்டு விசாரணை என்று சிங்கள அரசு உலகின் கண்களில் மண்ணைத் தூவப் பார்க்கும் நிலையில், இலங்கை சென்று வந்த ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கை அரசு புரிந்த சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். நமது கோரிக்கை உலக அரங்கில் இன்று வலுப்பெற்று வருகின்றது.

இந்நிலையில்தான், இன அழிப்புப் போரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களைப் பயன்படுத்தி சீன சார்பு இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசுகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிறுவப் பார்க்கின்றன.

ஜெனிவாவில் மார்ச் 3 முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கூட்டத் தொடரில் அமெரிக்கா தலைமையிலான ஐந்து அரசுகள் சேர்ந்து தீர்மான வரைவை முன் வைத்துள்ளன. அந்த வரைவு விவாதிக்கப்பட்டு மார்ச் 26 ஆம் நாள் நிறைவேற இருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகையே தன் பக்கம் அணி திரட்டி வைத்திருந்த சிங்கள அரசு இன்று தடுமாறி நிற்கின்றது.

தீர்மானத்தின் சாரம்:

அந்த வரைவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று வரையறுக்கப்பட வில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்; நம்பத்தகுந்த உள்நாட்டு புலனாய்வு நடத்தப்பட வேண்டும்; இதை ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் கண்காணிக்க வேண்டும் என்கின்றது தீர்மானம். இத்தனையும் நாம் ஏற்காதவையென்றாலும் நாம் கோரியவற்றில் ஒன்றும் அவ்வரைவில் இருக்கின்றது. அது தான், ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகமே இரு தரப்பும் புரிந்த குற்றங்கள் மீது புலனாய்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை.

இந்தப் பரிந்துரையில் சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வுக்கான கரு அடங்கியுள்ளது. இதைத் தான் நாம் பற்றிப் பிடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுகின்றோம். ஆனால் சிங்கள அரசு இதை கலைத்துவிட வேண்டும்; சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வுக்கான சுவடு கூட தீர்மானத்தில் இருந்துவிடக் கூடாது என்று பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருக்கின்றது.


தடைக்கல்லாய் இந்தியா!

இந்திய அரசு வெளித்தோற்றத்தில் மெளனம் காக்கின்றது. ஆனால் உண்மையில் சிங்கள அரசைக் காக்கின்றது. இந்தியாவின் துணையோடு ஒரு முக்கியத் திருத்தம் நடந்தேறிவிட்டது. ஐ.நா. மனித உரிமை மன்றம் இலங்கைக்கு ஆலோசனை வழங்க வேண்டுமென்றால் இலங்கையின் உடன்பாடும் ஆலோசித்தலும் முன் நிபந்தனையென்று மாற்றப்பட்டுவிட்டது.

பன்னாட்டுப் புலனாய்வுக்கும் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றியது தமிழக சட்டப் பேரவை. ஒரு பக்கம் அத்தீர்மானத்தைப் புறக்கணித்ததன் மூலம் ஏழு கோடித் தமிழர்களின் அரசியல் உரிமையைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கின்றது இந்திய அரசு. மறுபக்கம் காங்கிரசு எதிர்ப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட ஈழ ஆதரவுப் போராட்டத்தின் பயனாய் காங்கிரசோடு எவரும் கூட்டணி சேரவில்லை. அதனாலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிக்கும் சரி அத்தீர்மானத்தை ஆதரித்த கட்சிகளுக்கும் சரி ஈழத்தின் பெயரால் வந்தவர்களுக்கும் சரி காங்கிரசை எதிர்த்தவர்களுக்கும் சரி ஈழப் பிரச்சனை இன்று தேவையற்றதாகிவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்விட்ட பிழையை இப்போதும் விடப் போகின்றோமா?


அன்று வன்னியில் நடந்தது உள்நாட்டுப் போர். இன்று ஜெனிவாவில் நடப்பது சிங்களருக்கு தமிழருக்கும் இடையேயான சர்வதேசப் போர். இந்தக் களத்தில் எப்படியேனும் ஒரு சுதந்திரமானப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தச் சொல்லும் தீர்மானம் வரச் செய்ய வேண்டும். வெளிப்படையான புலனாய்வு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதுவே நமது குறி.

பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்கத் துடிக்கும் சிங்களத்திற்கு பக்கபலமாய் நின்று கொண்டிருக்கின்றது இந்திய அரசு. 30 ஆண்டுகாலம் போரைச் சுமந்தவர்களுக்கு, முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்தவர்களுக்கு, ஐந்தாண்டுகளாக சிங்கள இனவெறி இராணுவப் பிடியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நீதி கிடைக்கத் தடையாய் இருப்பது இந்திய அரசு.

இந்திய அரசின் துரோகப் படலம் தொடர்கின்றது இந்திய அரசை நம் மக்களிடம் தோலுரித்துக் காட்டி வழிக்கு கொண்டுவர வேண்டிய கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு. தமிழீழத் தாயகத்திலுள்ள ஈழத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பும் இதுவே.

இந்திய சிங்களக் கூட்டணியை முறிக்காமல் சர்வதேச மன்றத்தில் ஈழத் தமிழருக்கு அரசியல் நீதி கிடைக்கப் போவதில்லை. இதுவே தருணம், இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்க வாரீர்!

இந்த வரலாற்றுக் கடமைக்கு களம் காண்போம்!

செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் – குறள் 466

பங்கேற்கும் அமைப்புகள்:

திராவிடர் விடுதலை கழகம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
எஸ்.டி.பி.ஐ
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு மக்கள் கட்சி
தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
த‌மிழ்த் தேச மக்கள் கட்சி
தமிழர் குடியரசு முன்னணி
கம்யூனிசுட்டு கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு
தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
தமிழர் எழுச்சி இயக்கம்
காஞ்சி மக்கள் மன்றம்
சேவ் தமிழ்சு இயக்கம்


Thursday, March 20, 2014

பகத் சிங்கையும் அம்பேத்கரையும் படித்தால் கைது செய்யப் படுவீர்கள்!



அருந்ததி ராயின் பேட்டியையோ, மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலையோ, கயர்லாஞ்சி கொடூரம் பற்றிய தகவல்களையோ, பகத்சிங்கின் புத்தகங்களையோ வைத்திருந்தால்,எந்நேரத்திலும் நீங்கள் காவல்துறையால் கைது செய்யப்படலாம். "நீங்கள் இஸ்லாமியனாக இருந்தால் தீவிரவாதி, தலித்தாக இருந்தால் நக்சலைட்” இப்படி தான் இங்கு காவல்துறை செயல்படுகின்றது என்று தலித் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் ஒருவர் தெக‌ல்கா இணையதளத்திற்கு வழங்கிய கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது.

UAPA என்றழைக்கப்படுகிற‌ “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” (Un lawful Activitiess Prevention Act, 1967) கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி அன்று, பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில், விரிவான விவாதங்களை அனுமதிக்காமல், 3- ஆவது முறையாக திருத்தியுள்ளது மத்திய அரசு. சட்டம் இயற்றப்பட்டது 1967ல் தான் என்றாலும், கடந்த பத்து ஆண்டு கால காங்கிரசு ஆட்சியில் மட்டுமே , மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது ஒரு அரசின் சட்டப்பூர்வ பயங்கரவாத சாதனை. இச்சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரான சட்டமாகும்.


முதல் திருத்தம் , 2004 ஆம் ஆண்டு. தடா, பொடா ஆகிய கருப்புச் ச‌ட்டங்களில் இருந்த கொடும் பிரிவுகள், யு.ஏ.பி.ஏ - வில் சேர்த்துக் கொள்ளப்பட்டன, பிறகு தடா, பொடா சட்டங்கள் நீக்கப்பட்டது அரசின் சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் சம்பவத்தின் போது நாட்டில் நிலவிய தீவிரவாத பீதியை சாதகமாக்கிக்கொண்டு மத்திய அரசு 2-வது முறையாக இச்சட்டத்தை திருத்தி அதன் கடுமையை அதிகரித்தது. இப்போது 3-வது முறையாக மீண்டும் திருத்தப்பட்டு இன்னும் பல கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ள‌ன‌. சுருக்கமாகக் கூறினால், 2004ல் தேர்தலில் வெற்றி பெற, "பொடாவை ரத்து செய்வோம்" என வாக்குறுதியளித்த காங்கிரசு கட்சி, ஆட்சியமைத்தவுடன், பொடாவை ரத்து செய்து, யு.ஏ.பி.ஏ என்ற பெயரில் மீண்டும் மறுபிறவி எடுக்க வைத்திருக்கிறது.

கருத்துரிமை (Freedom of Expression), அமைப்பாக ஒன்று சேர்ந்து செயல்படும் உரிமை (Freedom of Association) போன்ற அரசியலமைப்புச் சட்ட உரிமைகளும், அரசியல் உரிமைகளும் (Political Rights), ஜனநாயக உரிமைகளும் (Democratic Rights) இச்சட்டத்தின் மூலம் மறுக்கப்படுவது மட்டுமின்றி, அரசுக்கு எதிராக ஒருவர் முணுமுணுத்தாலே காவல்துறை அவர்களை கைது செய்ய‌லாம் என்கிற அளவுக்கு மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவப்படுவது, அரச பயங்கரவாதத்தின் ஒரு நீட்சியாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் பெருமிதம் கொள்வோம்.




யுஏபிஏ சட்ட விதிகள்:

* 'பொடா' சட்டத்தைப் போலவே, இச்சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் சிறையில் வைத்து கொடுமைப்ப‌டுத்த‌ முடியும்.

* பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகையோ அல்லது வேறு ஏதேனும் தடயங்களோ இருந்தாலும் கூட, அவரை குற்றவாளி என காவல்துறை கருதி, கைது செய்ய முடியும். மேலும் தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரூபிக்க வேண்டும்.

* ஒரு புல‌னாய்வுக்கு தொட‌ர்புடைய‌து என‌க்க‌ருதி காவ‌ல்துறை விவரம் கேட்டால் எவரும் முழுமையான தகவல் தரவேண்டும். இல்லையேல் இச்சட்டப்படி, தகவல் தர மறுப்பவரை கைது செய்ய முடியும்.

* தொலைபேசி உரையாட‌ல்களை இடைமறித்து கேட்டு அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவ‌ரைக் கைது செய்ய‌ காவ‌ல்துறைக்கு எல்லைய‌ற்ற‌ அதிகார‌ம் வ‌ழ‌ங்குகிற‌து.

* குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வரையறை இச்சட்டத்தில் தெளிவாக இல்லாததால், அவர் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்/இருக்கலாம் என்று குற்றம் சாட்டி, யாரை வேண்டுமானாலும் காவ‌ல்துறை கைது செய்ய‌லாம்.


இந்திய‌ அர‌சிய‌லைப்புச் ச‌ட்ட‌ம் வ‌குத்துள்ள‌ அடிப்ப‌டை ம‌னித‌ உரிமைகளுக்கு எதிரான‌ இத்த‌கைய‌ அட‌க்குமுறைச் ச‌ட்ட‌ங்க‌ளின் மூல‌ம் சிறுபான்மையினரும், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளும், ப‌ழ‌ங்குடியின‌ருமே கைது செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். 2007 ஆம் ஆண்டுக்கு பிற‌கு நூற்றுக்க‌ண‌க்கான‌ கைது ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நட‌ந்தேறியிருக்கின்ற‌ன‌.

மகாராஷ்டிரா மாநில‌த்தில், நாக்பூரில் 'தீக்சா' என்னுமிட‌த்தில் தான் அம்பேத்க‌ர், ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ த‌லித்துக‌ளோடு புத்த‌ ம‌த‌த்தைத் த‌ழுவினார். இந்தியாவின் ப‌ல‌ பகுதிகளில் வாழும் த‌லித் மக்கள், வருடம் முழுமையும் திக்சாவிற்கு பயணம் செய்து கொண்டே இருக்கின்றனர். அவ்வகையில், திக்சாவிற்கு செல்லத் திட்டமிட்டு, மஹாராஷ்டிரா விரைவு ரயிலில் ஏறிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கார‌ண‌ம் பெரிதாக‌ ஒன்றுமில்லை. அந்நால்வ‌ரில் ஒருவ‌ரான‌ அனில் ம‌மானே ஒரு த‌லித் எழுத்தாள‌ர். அவ‌ரிட‌மிருந்தது க‌ய‌ர்லாஞ்சி ப‌ற்றி அவ‌ரே எழுதிய‌ ஒரு புத்த‌கம் இருந்தது, அதை ம‌க்க‌ளிட‌ம் ப‌ர‌ப்புரை செய்து வந்த‌ அவ‌ர‌து மாண‌வ‌ரான‌ தின்க‌ர் கைது செய்யப்பட்ட இரண்டாம் நபர்., இதில் வேடிக்கை என்னவென்றால் கைது செய்யப்பட்ட ம‌ற்ற‌ இருவ‌ரும் , இவ‌ர்க‌ளுக்கு துளியும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌வ‌ர்கள், அவர்கள் செய்த ஒரே குற்றம் அந்த பெட்டியில் பயணம் செய்தது. இவ‌ர்க‌ளெல்லாம் ந‌க்ச‌ல் இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்ப‌வ‌ர்க‌ள் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்த‌ காவ‌ல்துறை இவ‌ர்க‌ளிட‌ம் கேட்ட கேள்வி, "அம்பேத்க‌ரிய‌வாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இன்னுமொரு 1857 ஐ உருவாக்க‌ப் பார்க்கிறீர்க‌ளா? " . கைது செய்த பின்னர் மமானேவை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, “இன்னொரு அம்பேத்காராக உருவாகப் பார்க்கிறாயா?” என்று அடித்தது காவல்துறை. இந்துத்துவத்தின் கொடிய கரங்கள் அரச இயந்திரம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினரும், தலித், பழங்குடி மக்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.


இதே போல ச‌ந்திராப்பூர் என்ற‌ ஊரில் மாணவர்களுக்கு ப‌க‌த் சிங், ஜோதிபா பூலேவைப் ப‌ற்றி பாட‌ம் எடுத்த‌த‌ற்காக‌ ப‌த்து மாண‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். கைது செய்யப்பட்டதற்கான கார‌ண‌ம் பக்த் சிங் பற்றி பாடம் எடுப்பதன் மூல‌ம் இவ‌ர்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளுக்கு க‌ள‌ம் அமைத்து கொடுக்கின்றார்க‌ள் என்ற‌து காவ‌ல்துறை, அதாவ‌து ப‌க‌த்சிங் ச‌மூக‌த்தில் ந‌டைபெறும் அநீதிகளைத் தண்டிக்க ஆயுதத்தை (அன்றைய சூழ்நிலையின் கட்டாயத்தின் பேரில்) பயன்படுத்தினார், ப‌க‌த்சிங்கை ப‌டித்து அவ‌ர‌து கொள்கைக‌ளில் மாண‌வ‌ர்க‌ளுக்கு ஈடுபாடு ஏற்ப‌ட்டால் அவ‌ர்க‌ளும் ஆயுத‌ம் தாங்கிய‌ புர‌ட்சியை நோக்கி செல்வார்க‌ள் என்கிற‌து காவ‌ல்துறை. இப்ப‌டியாக‌த் தான் ப‌க‌த்சிங்கும் இந்தியாவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கிறார். சமூகப்போராளியான பினாயக் சென் கைது செய்யப்பட்டதும் இதே யு.ஏ.பி.ஏ சட்டத்தின் வாயிலாகத் தான்.

பினாய‌க் சென் ஒரு மாவோயிசுட்டு ஆத‌ரவாள‌ர் என்ப‌த‌ற்கு காவ‌ல்துறை பினாயக் சென் வீட்டில் இருந்து கைப்பற்றிய(!) கார்ல் மார்க்சு எழுதிய‌ மூல‌த‌ன‌ம் நூலை நீதிம‌ன்ற‌த்தில் ஆதார‌மாக‌ காட்டிய‌து. இதுபோன்ற‌ ஆதாராங்க‌ளை (!) வைத்து தான் பினாயக் சென் ஒரு தேசத்துரோகி என‌க் கூறி ஆயுட்கால‌ சிறைத் த‌ண்ட‌னை வழங்கியது நீதிமன்றம்.

பெங்க‌ளூர் ம‌ல்லேஸ்வ‌ர‌ம் குண்டு வெடிப்பில், த‌மிழ‌க‌ இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌தும் இதே யுஏபிஏ சட்டத்தின் மூலமாகத் தான். அப்துல் நாசர் மதானி, கர்நாடக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் எந்த வித விசாரணையுமின்றி, குற்றமும் நிரூபிக்கப்படாமல் சிறைக் கொட்டடியில் வதைக்கப்பட்டு கொண்டிருப்பதற்கு காரணமும் யுஏபிஏ தான். கர்நாடக நீதிமன்றம், யுஏபிஏ அடிப்படையாகக் கொண்டே மதானிக்கு தொடர்ந்து பிணை வழங்க மறுத்து வருகிறது. அதே நேரம் மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சஞ்சய் தத்தோ மூன்றாம் முறையாக பிணையில் வெளிவந்து படங்களில் நடித்து வருகின்றார். ஒருபுறம் ஒன்பது ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் பிணை மறுக்கப்படும் மதானி , மறுபுறம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டும் தொடர்ந்து பிணை வழங்கப்படும் சஞ்சய் தத். இப்படி தான் இங்கே நீதி (!) இருக்கின்றது.

மக்கள் விரோத அரசுகளுக்கு எதிரான அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் "பயங்கரவாத, தேசவிரோத, தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான" நடவடிக்கைகளாக அடையாளப்படுத்துதலே இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களின் நோக்கமாக‌ இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கிலும், கஷ்மீரிலும் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தின் மூலம் (AFSPA) இந்திய இராணுவம் அம்மக்களை தெருநாய்களைப் போல சுட்டுக் கொள்வதையும், பெண்களை பாலியல் வன்புணர்வுக் குள்ளாக்குவதையும் பொழுதுபோக்காகச் செய்து வருகிறது. அச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து பதினோரு ஆண்டுகளாக உணவை மறுத்து போராடி வருகிறார் ஐரோம் ஷர்மிளா.

மக்களின் சமூக, பொருளியல், வாழ்வாதார‌ பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வைக் காணாமல், அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் தீர்வு காண எத்தனிக்கும் ஆளும் அரசுகளை போராடித் தான் பணிய வைக்க வேண்டும். தடா, பொடா, ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து விழிப்புணர்வடைந்திருக்கும் நாம், யுஏபிஏ போன்ற சட்டங்களைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. இத்தகைய அடக்குமுறை சட்டங்களை முறியடிக்க, தொடர் பரப்புரைகளும், கருத்தரங்குகளும் அதையொட்டிய மக்கள் போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்




தரவுகள்:

1. http://www.tehelka.com/a-deadly-cannon-has-loaded-more-fire-power/

2. http://www.thoothuonline.com/

3. http://www.thehindu.com/opinion/editorial/rethink-the-new-uapa/article4218425.ece

4. http://en.wikipedia.org/wiki/Unlawful_Activities_(Prevention)_Act

5. http://popularfrontnellaiwest.blogspot.in/2013/06/uapa.html

6. http://www.tehelka.com/bhagat-singh-and-ambedkar-are-no-longer-national-icons-you-can-be-arrested-for-reading-them/

இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு - தமிழக குடிமைச் சமூகத்தினர் போராட்டம்



இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்தக் கோரி இந்திய அரசு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி தமிழக குடிமைச் சமூகத்தினர் போராட்டம்

கடந்த மார்ச் 16 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சேவ் தமிழ்சு இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் இந்திய அரசு இலங்கை மீது ஐ.நா மனித உரிமை மன்றத்தில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வுக்கான தீர்மானத்தை கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் இந்திய அரசு ஈழத் தமிழர்கள் மீது 13ஆவது சட்ட திருத்தத்தை திணிப்பதை எதிர்த்தும், இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வைக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.


சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர், தோழர்.செந்தில் பேசும் பொழுது, அமெரிக்க கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் இலங்கை அரசு புரிந்துள்ள இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கும் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வைச் சேர்த்து அதை வலுப்படுத்தாமல், நீர்த்துப் போகச் செய்யும் பணிகளில் வேகத்தை காட்டும் இந்திய அரசு, மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் தொடர்ந்து மயான அமைதி காத்து வருகின்றது என்றார். அதே நேரம், தற்சமயம் நடந்து வரும் ஐ.நா.மனித உரிமை மன்றக்கூட்டத்தைப் பற்றி தமிழகத்தில் உள்ள தேர்தல் அரசியல் கட்சிகள் கள்ள மௌனம் காத்துவருவதை கண்டித்தார்.


தீர்மானத்தின் இரண்டாவது வரைவில் 9ஆவது புள்ளியில் மாற்றப்பட்டுள்ள "இலங்கை அரசை கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கப்பட வேண்டும்" என்ற வரி இந்திய அரசின் தலையீடை அம்பலப்படுத்துகின்றது. இதே போல தான் சென்ற முறையும் இந்திய அரசு ஒரு வரியை மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. நாம் நமது போராட்டத்தை இந்தியாவை நோக்கி வைத்து, இந்தியா இத்தீர்மானத்தில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை சேர்த்து அதை வலுப்படுத்தக்கோரி நாம் போராட வேண்டும் என்றார்.


பி.யூ.சி.எல்-லைச் சேர்ந்த பேராசிரியர்.சரஸ்வதி பேசும்பொழுது, இந்தியா இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்கு முன்பும், பின்னரும் தொடர்ந்து ஆதரித்தே வருகின்றது, இருந்தாலும் இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வைக் கோரும் ஒரு தீர்மானத்தை கொண்டுவர நாம் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.


தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்.தியாகு இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பிலான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.


போர்க்குற்றமல்ல‌, இனப்படுகொலை என்பது தான் சரி என்ற விவாதம் தவறானது. நாம் நடைபெற்றது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழர்கள் இனப்படுகொலைக்கும் உள்ளானார்கள் என்று சொல்ல வேண்டும். தமிழர்கள் மீதான இனப்படுகொலை என்பது, இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழர்கள் மீது செய்து வரும் இன அழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்களின் கூட்டே. தமிழர்களுக்கு எதிரான போரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களுக்கான நீதியே நாங்கள் கோருவது. முன்முடிவுகளை வைத்துக் கொண்டு நாம் எந்த விசாரணைக்குள்ளும் செல்ல முடியாது. இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்தியுள்ள இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் பற்றிய விசாரணை வேண்டும் என்பதே நம் கோரிக்கையாக இருக்க வேண்டும், அதில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழகத்தில் இருப்பதால், நாம் நமது போராட்டத்தை இந்தியாவிற்கெதிராக ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்" என்றார் தோழர்.தியாகு.


தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர். சேகர், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்.அருண், பி.யூ.சி.எல் தமிழக பொறுப்பாளர் பேரா. சரசுவது, தமிழர் குடியரசு முன்னணியைச் சேர்ந்த தோழர்.ஜெயப்பிரகாஷ், தமிழ்நாடு மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்.இளையராஜா, கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர்.ஜெயக்குமார், எழுத்தாளர்.சந்திரா, பேரா.குழந்தை, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, பாலின சிறுபான்மையினருக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் தமிழக தமிழர்களாகிய நாங்கள் இந்திய அரசு இலங்கை புரிந்த இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை தீர்மானமாக முன்வைக்க வேண்டும் என்று கோரினர்.

Tuesday, March 18, 2014

தகவல் தொழில்நுட்பத் துறை பெண் ஊழியர்களுக்கான கருத்துக்கணிப்பு


பெண் பாலினம் பற்றிய புரிதல்,பெண்கள் மேம்பாடு குறித்து தகவல் தொழில்நுட்ப துறை பெண் பணியாளர்கள் மத்தியிலான ஆய்வு....



தொழில் நுட்பத் துறையில் வேலைப் புரியும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த ஆய்வு, தொழில் நுட்பத் துறையை நோக்கிய எங்கள் இயக்கத்தின் முதல் முயற்சியாகும்.இது பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஒரு சமூக ஆய்வு.



நவீன தொழில்துறையான தொழில் நுட்பத் துறையில் தான் பெண்களால் மற்ற துறைகளை விட ஒப்பீட்டளவில் உரிமைகளை அனுபவிக்க முடிகின்றது. இருப்பினும் பெண்கள் வேலை, வாழ்க்கை இரண்டிலும் சவால்களை சந்திக்க வேண்டிருக்கிறது. தொழில் நுட்பத் துறையில் வேலைப் புரியும் பெண்களின் அன்றாட வாழ்வின் உண்மை நிலைமையை அறிவதற்கும், பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளைக் கண்டறிந்து , இந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவதற்கும் இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.





இந்த ஆய்வு சமூக ஆராய்ச்சி நோக்கத்திற்காக மட்டுமே, ஆய்வின் மூலம் கிடைக்கும் விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும், எனவே இந்த ஆய்வை எந்த தயக்கமும் இன்றி மேற்கொள்ளுங்கள், சக பெண் தோழிகளுடனும் பகிருங்கள். இந்த ஆய்வை நடத்துவது சேவ் தமிழ்சு இயக்கம் - ஐ.டி மற்றும் மற்ற தொழில் துறையில் வேலைச் செய்யும் ஊழியர்களின் கூட்டு இயக்கம்.




இந்த ஆய்வு பற்றிய மேலதிக தகவல்கள் பெற விருப்பம் இருந்தால் 98407 13315 என்ற கைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளவும். இந்த ஆய்வின் முடிவு பற்றியும், மேலும் தகவல் அறியவும், உங்கள் மின்னஞ்சல் முகவரியும், கைப்பேசி எண்ணையும் ஆய்வின் கடைசிப் பக்கத்தில் பகிரவும்.

http://www.itsurvey.in

உழைக்கும் பெண்களின் இன்றைய நிலை - தோழர்.இரமணி (உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -8)



உழைக்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஆண், பெண் சமத்துவத்திற்காகவும் 1910, மார்ச்-8 அன்று நியூயார்க் நகர வீதிகளில் வாக்குரிமை, 8 மணிநேர வேலை, கூலி உயர்வு ஆகிய கோரிக்கைகளில் ஆர்த்தெழுந்து போராடி 201 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்நாளை நினைவுகூர்கையில் இச்சமூகத்தில் இன்று பெண்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்கவேண்டிய அவசியமிருக்கிறது.

அரசியல் அதிகாரத்தில் சமூக ஜனநாயகத்தில், பாதுகாப்பில், சமூகத்தின் உளவியல் மாற்றத்தில் பெண்களின் பங்கு என்ன? இன்றைய சூழலில் ஆணாதிக்கம் உறுதிபட்டிருப்பதையும், பெண்கள் மீதான வன்முறைகள் முன்னெப்போதைக் காட்டிலும் கொடூரமான விதத்தில் அதிகரித்து வருவதை எப்படி அணுகுவது? அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன? என்பதைப் பற்றி ஆராய வேண்டியிருக்கிறது. இதுபோல் பெண்களின் பாதுகாப்பு பற்றி உரக்கப்பேசும் இத்தகைய சூழலில் அதிரித்துவரும் உழைக்கும் பெண்களின் இன்றைய கோரிக்கைகள், உரிமைகள் என்ன? என்பதையும் பார்க்கவேண்டியிருக்கிறது.

ஆணாதிக்க வன்முறைகளையும் இழிவு மனப்பன்மையையும் எதிர்த்துப் போராடுவது இருக்கட்டும். பெண்களின் உரிமைகளையும் தகுதியான இடத்தையும் கோருவது இருக்கட்டும், சாலையில் சக மனுசியாக தைரியமாக அச்சமின்றி நடந்துசெல்லும் நிலைமை உருவாகிவிட்டதா? இதற்கு வேதனையுடன் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். இந்த நிலைக்குக் காரணமாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.


நமது குடும்பங்களில் ஆண் குழந்தைகள் ஒருவிதமாகவும் பெண் குழந்தைகள் வேறு விதமாகவும் வளர்க்கப்படுவது மாறவில்லை. பெண்களின் நடை, உடை, நடத்தை இவை யாவும் ஆணாத்திக்கத்திற்கு பணிந்து கொடுக்கும் வகையில் உருவாக்குவது குடும்ப அமைப்பின் தலையாய கடமையாக நீடிக்கிறது. இருட்டுவதற்கு முன்பாக வீடு திரும்பாத பெண்ணின் உடமைகளுக்கும், உடலுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறிருக்க, பெண்கள் முன்போல அடிமைகளாக இல்லை- அவர்கள் சமூக வெளியில் ஆணுக்கு நிகராய் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்று சுதந்திரமாக உலவுகிறார்கள் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? 33 சதவித இட ஒதுக்கீட்டை இன்றும் நிறைவேற்றாமல் இருப்பது எதனை குறிக்கிறது? புறையோடிப்போன ஆணாதிக்க கருத்தாக்கம் ஆழ வேறூன்றி இருப்பதைத்தானே காட்டுகிறது?

கவலையளிக்கும் இதுபோன்ற நிலைமை நீடிக்கும்போதிலும், இத்தகைய இழிநிலையை எதிர்த்த, போராட்டத்தால் மட்டுமே புது வழிபிறக்கும் என்பதை உலக்கு உணர்த்திய மார்ச்- 8 உழைக்கும் பெண்கள் தினம் நமக்குள் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதிலும் பெண்களின் பங்கு அன்றும் சரி, இன்றும் சரி எளிதாக புறந்தள்ளிவிட முடியாதது. கல்வி பெறும் உரிமை விஞ்ஞானம், மருத்துவம், இலக்கியம், கணிப்பொறி, நிர்வாகம், விவசாயம், நுண்கலைகள் என பெண்களின் அறிவுத்திறனும் செயல்திறனும் விண்ணை எட்டியிருப்பது வெளிப்படை. இதற்கு இணையாக சமூகத்தில் ஊறிப்போயிருக்கும் பிற்போக்கு சிந்தனை பெண்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி முடக்குவதும், வன்முறையாலும், வக்கிரங்களாலும் பின்னோக்கித் தள்ளுவதையும் அன்றாடம் காண்கிறோம்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், ஆசிட் வீச்சுகள், வரதட்சணை கொலைகள், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது என தேசிய புள்ளிவிவர ஆவணம் தெரிவிக்கிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு புது சட்டங்கள் கொண்டு வந்தாலும் நடைமுறையில் சிந்தனையில், பெண்ணை பற்றிய ஆணாதிக்க மதிப்பீடுகளில் மாறுதல் ஏற்படாத நிலையே நீடிக்கிறது. சட்டங்களாலும் காவல்துறையாலும் பெண்களின் மதிப்பும், உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதிலும் ஐயத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, இவையே பெண்களை ஒடுக்கும் ஆயுதங்களாக பயன்படுவது குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் எதிர்ப்புக்குரல்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டியிருக்கிறது.

அடுத்து இன்றைய உலகமயச் சூழலில் பெண்கள் முன்னாட்களில் இல்லாத பல புதிய துறைகளில் பணியாற்றுகிறார்கள். இவற்றில் அமைப்பாக்கப்பட்ட அமைப்பாக்கப்படாத துறைகளும் அடங்கும். தகவல் தொழில்நுட்பத்துறை, கால் சென்டர், பி.பி.ஓ ஆயத்த ஆடைகள், ஏற்றுமதி நிறுவனங்கள், உணவகங்கள் போன்ற துறைகளில் பெண்கள் அதிகமாகப் பணியாற்றுகின்றனர். குறிப்பாக கிராமங்களில் விவசாயம் நலிவடைந்ததில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் இன்று விவசாயக் கூலிகளாக, ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் அதிகளவு பெண்கள் அன்றாடக்கூலிகளாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் நகரத்திற்கு வந்து எவ்வித பாதுகாப்பின்றி இயங்கும் கட்டுமானம், வீட்டுப்பணி, சிறு உணவகங்கள், குடிசைத்தொழில்கள், நடைபாதை வியாபாரம், பூக்கடைகள் போன்ற தினக்கூலி வேலைகளிலும் பெண்கள் பெருமளவில் பணியாற்றுகிறார்கள்.


இவர்கள் பெண்கள் என்பதாலேயே குறைந்த சம்பளம், கடுமையான விதிமுறைகள், பாலியல் தொந்தரவுகள், பிற உரிமைகள் பறிப்பு, வளைந்து கொடுக்காவிட்டால் வேலை பறிக்கப்படுமென்ற அச்சுறுத்தல்களில் பணிந்து நடக்கும் கட்டாயம் இருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் முகவர்களின் துணைகொண்டு பணியாளர்கள் இந்த நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். குறிப்பாக புலம்பெயர்ந்து வேலைக்கு செல்லும் பெண்கள் புரோக்கர்களின் மூலம் அமர்த்தப்படுவதால் இவர்களுக்கான பணி பாதுகாப்புக்கும் உயிர் உத்தரவாதத்திற்கும் பொறுப்பாளி யார் என்பதில் கேட்பாரற்ற நிலை நீடிக்கிறது.

இன்று அமைப்பாக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை போன்ற சேவைத் துறைகளில் மட்டும் 21% பெண்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் அமைப்பாக்கப்படாத துறைகளில் 48% பெண்கள் (ஆண்கள் 21%) வேலை செய்கிறார்கள். இப்பெண்களுக்கு சம்பளமும், பிற உரிமைகளும் கிடைப்பது இல்லை என்பதோடு, அவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்பதை சமீப காலங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண்களின் மரணங்களும் கொலைகளும் நமக்கு உணர்த்துகின்றன. திருப்பூரில் ஏற்றுமதிப் பின்னலாடைத் தயாரிப்பில் பணியாற்றும் பெண்களின் தற்கொலைகள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகள், செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிலும், தகவல்தொழில்நுட்ப பணியாளர்களும் பாலியல் வன்முறைகளில் படுகொலைகளில் இறையாவதும் தொடர்கதையாகிவிட்டன.

இத்தகைய கொடூர சம்பவங்கள் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு கேப் பாதுகாப்பு வண்டி அனுப்பப்படுகிறது என்கிற கருத்தாக்கத்தை தகர்க்கும்விதமாக அம்பிகா, உமாமகேஸ்வரியின் மரணம் நமக்கு சாட்சியாக இருக்கிறது. காவல்துறையின், டி.சிஎஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த நகர்வில் மோசடியும் ஆணாதிக்க திமிருமே வெளிப்பட்டது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வதை விட அந்நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்கிற விதத்தில்தான் உடனடியாக வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதுடன், நாஸ்காம் சில விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளதை பார்க்கலாம்,


அதுகூட அந்நிறுவனத்தில் மட்டுமே நடைமுறையாக்கியிருக்கிறது. சென்னையின் மற்ற நிறுவனங்களில் இவை சம்பந்தப்படாத ஒன்றாகவே பார்க்கும் நிலை. இவையேகூட அடித்தட்டு பெண்களுக்கோ, சிறுமிகளுக்கோ நடப்பதில்லை. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு 13 அம்ச திட்டங்களைக் கொண்டுவந்தது. அதனை நடைமுறைப்படுத்தாத நிலையில் இந்நிறுவனத்திற்காக அதிரடியாக நடவடிக்கை எடுத்ததுடன் அவை இந்நிறுவனத்தின் சிக்கலாக பார்க்கும் மோசமான மனோபாவமே இவற்றில் தெரிகிறது.

முதலாளியத்தின் லாப வேட்டைக்காக ஏகாதிபத்தியத்தின் சந்தைக்கான போட்டியில் தொழில்துறை பிரமிக்க வைக்கும் மாற்றங்களை அடைந்துள்ளது. ஆனால் உலக வங்கியும், சர்வதேச நிதிநிறுவனமும் உலக வர்த்தக நிறுவனமும் விதிக்கும் நிபந்தனைகளுக்கேற்ப தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்கள் பலியாக்கப்பட்டுள்ளனர். வேலை நேரம் 8 மணிநேரமாக இருந்தது. 12 முதல் 14 மணிநேரமாக மாற்றப்பட்டுவிட்டது. விருப்பத்திற்கு மாறாக ஓவர் டைம் என்ற பெயரில் கட்டாய உழைப்பு திணிக்கப்படுகிறது. ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்துதல், நிரந்தரமற்ற வேலைமுறைக்கு மாற்றுதல் என்ற வடிவில் முதலாளிகளின் லாபத்திற்கு ஏற்றாற்போல் தொழிலாளர்கள் நசுக்கப்படுகிறார்கள்.

ஆக, 18 ஆம் நூற்றாண்டில் வென்றெடுத்த கோரிக்கைகள் பொருத்தப்பாடுடையவையாக உள்ளன. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையும் காற்றோடு காற்றாகிவிட்டது. அதிக சம்பளம் தரும் வேலைகளில் பெண்கள் அமர்த்தப்படுவதில்லை. மாறாக, குறைவான சம்பளம் கொண்ட வேலைகளே பெண்களுக்கானவை என்றாகிவிட்டது. மாதவிடாய்க் காலத்திலும் கர்ப்பக் காலத்திலும் நியாயமாக பெண்களுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவசியப்பட்டிருக்கிறது. அதுபோல உழைக்கும் பெண்களின் குழந்தைகளுக்கான காப்பகங்கள் அமைத்தல், அக்குழந்தைகளை பராமரிக்கவும் உணவளிக்கவும் போதுமான சம்பளத்துடன் பெண்களை வேலைக்கு அமர்த்துதல் ஆகியவை பல தொழில் நிறுவனங்களில் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

பணி உத்தரவாதமும், சம வேலைக்கு சம கூலியும் வேண்டும் என்பதே அமைப்புசாரா பெண் தொழிலாளர்களின் கோரிக்கை. அமைப்பாக்கப்பட்ட பெண் தொழிலாளர்களுக்குக் கிடைத்திருக்கும். குறைந்த பட்ச உரிமைகள்கூட இல்லாத நிலையில், இப்பெண்களின் போராட்டங்களுக்கு வலு சேர்க்கவேண்டிய கடமை நமக்குண்டு. வேலைக்கான உத்தரவாதம், வேலைக்கேற்ற கூலி, 8 மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை, ஆகியவற்றை வென்றெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆக, இச்சமுகத்தில் பெண்கள் பிறப்பின் அடிப்படையிலேயே பாகுபாட்டை சமூக இழிவை சுமந்தே தனது வாழ்கைப் போராட்டத்தை தொடர்கின்றனர். அதனை நிறுவனமயமாக்கும் குடும்பமும் சமூகமும் பொருளாதாரத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் மேலும் இறுக்கமாக்குகிறது. பெண்கள் மீது தொடரும் ஆணாதிக்கத் தடையை தகர்க்க பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒன்றுபட வேண்டும். இதற்கெதிரான போராட்டத்தை நடத்துவதுடன், உழைக்கும் பெண்கள் தங்களின் சம ஊதியத்திற்கான சமூக சமத்துவத்திற்கான கோரிக்கைக்கு அணிதிரள வேண்டும்,

200 ஆண்டுகளுக்குமுன் உழைக்கும் பெண்கள் முன்னெடுத்த முழக்கங்கள் வெற்றிபெற்று முதலாளியத்திற்கு சாவுமணியடித்ததுபோல் இன்று மாறிவிரும் தொழில்துறை மாற்றங்களும் அவற்றில் பெண் தொழிலாளர்களின் பங்கும் அதிகரித்திருக்கிற நிலையில், அனைத்து துறைகளிலும், பணியிடங்களிலும் வேலை உத்தரவாதத்தை உறுதிபடுத்த, பெண்ணை பற்றிய மதிப்பீடுகள் மாற்றும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதும் முக்கியம்.

சமூகத்தில் சரிபாதி பெண்களாகிய நாம் ஆணுக்கு நிகர் பெண் என்று பறைசாற்றத் துணிவோம். உழைப்பாளி பெண்களின் கோரிக்கையை முன்னெடுக்க மார்ச்-8 உழைக்கும் பெண்கள் தினத்தில் உறுதியேற்போம்.


தோழர்.இரமணி
மா.லெ. மக்கள் விடுதலை
தமிழ்நாடு

Monday, March 17, 2014

மோடி - வெளிச்சங்களின் நிழலில்! - 6





நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய வேட்பாளர்கள் அறிவிப்பைச் செய்து வருகின்றன.


காங்கிரசு கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கூட்டணி எதுவும் அமையாத நிலையில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் பின்வாங்கி வரும் செய்தியை நம்முடைய நாளிதழ்கள் தாங்கி வருவது தொடர்கிறது.


எளிய மக்களின் கட்சியாக தம்மை அறிவித்துக் கொண்டு இயங்கி வரும் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி நாடு முழுக்க வேட்பாளர்களை களமிறக்க முயன்று வருகிறது.

பெங்களூரில் நடைபெறும் பிரச்சாரத்திற்கு வரும் அதன் தலைவர் கேஜ்ரிவாலுடன் இரவு விருந்து நடத்தி தேர்தல் நிதி திரட்டுகிறார்கள். இந்த சாமானிய விருந்தின் விலை வெறும் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே(!). மோடியுடனான இரவு விருந்துக்கான விலையான 25 லட்சத்தை ஒப்பிடும் போது, அரவிந்த் கேஜ்ரிவால் சாமானியரே.


இந்திய அளவில் காங்கிரசிற்கு மாற்றாக தங்களை கூறிக் கொள்ளும் பா.ஜ.க அறிவித்துள்ள மூன்று கட்ட வேட்பாளர் பட்டியல்களில் இன்னும் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, மூத்த தலைவரான அத்வானி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள் இல்லை. அத்வானி மணி கட்டிய பூனையை இன்னும் நாக்பூர் நாட்டாமையால் பிடிக்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது.


அத்வானிக்கு ஆதரவான நிலையை எடுப்பதா? அல்லது இந்த தேர்தலில் நாம் முன்னிறுத்தியுள்ள மோடியை ஆதரிப்பதா என்று தெரியாமல் நாட்டாமையான சங்பரிவாரும் குழம்பித்தான் போயுள்ளது. பெங்களூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவரான மோகன் பகவத், “ நாம் ஒரு சமூக அமைப்பு, மோடி என்ற தனிநபரை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை; காங்கிரசின் மோசடிகளையும், சமூகத்தின் தேவை முன்வைதாலே போதுமானது” என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்வானிக்கு ஆதரவாக மோடியை பணிய வைக்கக் கூட இப்படி பேசியிருக்கலாம், இத்தகைய நாடகங்களை பலமுறை நடத்தியுள்ளன சங்பரிவார அமைப்புகள்.


இந்திய அளவில் தேர்தல் அரசியலின் காட்சிகள் இப்படி அரங்கேறிக் கொண்டிருக்க, தமிழகத்தில் இந்த முறை தேர்தல் கூட்டணியிலேயே பெருத்த மாறுதல்கள் உருவாகியுள்ளன.


அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில், அ.தி.மு.க தனித்து போட்டியிடுகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக அரசியல் சூழல் கருதி தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க.-வும், அ.தி.மு.க-வும் இந்திய கட்சிகளான காங்கிரசு, பா.ஜ.க-வை புறக்கணித்துள்ளன.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்திற்கான தேசிய ஜனநாயக கூட்டணியை அமைப்பதில் ஈடுபட்டிருந்தது பா.ஜ.க. இந்த கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க, கொங்கு நாடு மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. விவேகானந்தரைப் படியுங்கள் என்றும், கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட இருக்க முடிந்த ஒரே மதம் இந்து மதம் தான் என்று அவ்வப்போது பேசிவந்த தமிழருவி மணியன் தான் இந்த அணிக்கான முன்முயற்சிகளை எடுத்து தன்னுடைய கதர் ஆடையில் நிரந்தரமாகக் காவியைப் பூசிக் கொண்டுள்ளார்.


பா.ம.க-வின் சாதி அரசியலுக்கும், பா.ஜ.க-வின் மதவாத அரசியலுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. தே.மு.தி.க-விற்கு பெரிய அளவில் கொள்கை இருப்பதாக நாம் நம்புவதற்கில்லை. அதனால் இவர்கள் இந்த அணியில் இணைந்ததில் வியக்க ஏதுமில்லை.



பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு இலங்கை அதிபரும், ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே வந்த போது, சாஞ்சிக்கே சென்று போராட்டம் நடத்தியதோடு, “காந்தியைக் கொன்ற கோட்சே கும்பல்தானே ?!” என்று விமர்சித்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ-வும் பா.ஜ.க அணியில் இருப்பதும், இதற்கு முன்னரும் இருந்ததுதான் ஓட்டு அரசியலின் அருவறுப்பான உண்மை முகம். பெரியார் வழிவந்தவர்களின் கறுப்புத் துண்டு காவிக்கொடி மரத்தில் கட்டப்பட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டது.


இவர்கள் காங்கிரசு மாற்றாக பா.ஜ.க-வை நிறுத்துவது என்பது தற்கொலைக்குச் சமானம். மோடி அலை என்றும், மோடி அலையால் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி தமிழகத்தில் பதினைந்து விழுக்காடாக உயர்ந்திருப்பதாக இவர்கள் சொல்வதும் வடிகட்டிய பொய்.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பிறகு ஒரு இந்தியக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைவது தமிழகத்தில் இதுவே முதல்முறை. இதற்கு முந்தைய தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டுள்ளதே தவிர, கூட்டணிக்குத் தலைமை தாங்கியதில்லை.


இன்று மோடி அலையை முன்னிறுத்தி ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ள தமிழகத்தில் இந்துத்துவ அமைப்புகளின் நிலை எப்படி இருந்தது தெரியுமா?


1940 ஆம் ஆண்டு சேலத்தில் இந்து மகா சபையை தோற்றுவித்தவர்களில் ஒருவரான வீரசாவர்க்கர் பேசும் நிகழ்வு ஒன்று திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வுக்கான பார்வையாளர் கட்டணம் அப்போதைய நாலு அணா. நிகழ்வு நடைபெறவேண்டிய நாள் 23-3-1940. வீரசவர்க்கரும் சேலம் வந்து சேர்ந்துவிட்டார் ஆனால் கூட்டம் வரவில்லை. பின்னர் அனுமதிக் கட்டணம் இரண்டு அணா-வாகக் குறைக்கப்பட்டது.அப்போதும் கூட்டம் வராததால் காலி மைதானத்தில் பேசிவிட்டுப் போனார் வீரசாவர்க்கர். இது பெரியாரின் அன்றைய குடியரசு நாளேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இன்று ஆர்.எஸ்.எஸ்-சின் அடிவருடியான மோடிக்கு வருவதாக சொல்லப்படும் கூட்டத்திற்காக ஒரு கூட்டணி உருவாகியிருப்பது தமிழக அரசியல் தவறான பாதையில் தொடர்ந்து அடியெடுத்து வைப்பதையே காட்டுகிறது.


சங்பரிவார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத் போன்றவை தமிழகத்தில் கால்பதிக்கும் முயற்சி 1970-களில் கன்னியாகுமரியில் உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைப்பதில் இருந்து தொடங்கியது. அப்படியிருந்தும் அவர்களால் தமிழ்நாட்டில் எண்ணியது போல் நிலைத்துநிற்க முடியவில்லை.



1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் இசுலாமிய மதத்திற்கு மாறினர். அப்போது அரபு நாடுகளில் இருந்து கிடைக்கும் “பெட்ரோ-டாலர்” பணமே மதமாற்றத்திற்குக் காரணம் என்று போலிப் பரப்புரை செய்து, தங்களுடைய அமைப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டன சங்பரிவாரங்கள்.


இந்த முறை ஒரு முக்கிய வேறுபாடாக தமிழ் முலாம் பூசி “இந்து முன்னணி” என்ற தமிழ் பெயரோடு பரப்புரை செய்துள்ளனர்.


இந்து முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, மாவட்டம்தோறும் மாநாடுகள் நடத்தப்பட்டன. மீனாட்சிபுரம் மதமாற்றம் பற்றியும், சிறுபான்மையினரின் மீது வெறுப்பை உண்டாக்கும் வகையிலும் மேடைகள்தோறும் பேசப்பட்டது.


நாகர்கோவிலில் நடைபெற்ற இந்து எழுச்சி மாநாட்டில் கன்னியாகுமரி கிறித்துவர்களுக்கு எதிரான உரைகள் நிகழ்த்தப்பட்டு பதட்டமான சூழல் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, கிறித்துவ தேவாலய வாசலில் ஒலிபெருக்கி வைத்ததை ஊதிப் பெரிதாக்கி மதக்கலவரத்தை தூண்டிவிட்டது ஆர்.எஸ்.எஸ்.


2009- ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி, கன்னியாகுமரி (2,54,474 வாக்குகள் - இரண்டாவது இடம் ) மற்றும் ராமநாதபுரம் (1,28,322 வாக்குகள் - மூன்றாவது இடம்) பெற்ற கணிசமான வாக்குகளை நாம் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும்.


இந்துத்துவ அமைப்புகள் மத ஊர்வலங்களையும், யாத்திரைகளையும் இந்துக்களை திரட்டுவ‌தற்கும், கலவரத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் பயன்படுத்தின.


தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்ட இந்து முன்னணி, இந்துக்களை ஒன்று திரட்ட மகாராஷ்டிரத்தின் உற்பத்தியான பிள்ளையார் ஊர்வலத்தை இறக்குமதி செய்தது.


மகாராஷ்டிர மாநிலத்தில் 1894-ல் பார்ப்பனர்களைத் தவிர்த்த இந்துக்கள் இசுலாமியர்களின் மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்பதைத் தடுக்கவும், இந்து என்ற மதத்தின் அடிப்படையில் மக்களைத் திரட்டவும் தான் விநாயகர் ஊர்வலங்கள் திலகரால் தொடங்கப்பட்டன.


1894 ஆம் ஆண்டு பூனாவிலும், 1895 ஆம் ஆண்டு துலியா என்று ஊரிலும் மதக்கலவரம் ஏற்பட்டது. இதே நோக்கத்திற்காகத்தான் பிள்ளையார் ஊர்வலம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 1993-ல் இந்து முன்னணியால் சென்னையில் பிள்ளையார் ஊர்வலம் நடத்தப்பட்டது. திருவல்லிக்கேணி மசூதி தெருவில் சென்ற போது, ஊர்வலத்தினர் வகுப்புவாத முழக்கங்களை எழுப்பி, கற்களையும், செருப்புகளையும் மசூதிக்குள் வீசி எறிந்து கலவரத்திற்கு வித்திட்டனர்.


இதே போன்று இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவ அமைப்புகள் கோவையில் மத மோதல்களை ஊக்குவித்து வருகின்றன. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு தொடக்கப் புள்ளி இந்த அமைப்புகள் நடத்திய ஊர்வலங்களும், மோதல்களும்தான்.

2008-ல் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலுகத்தில் சங்க்பரிவார அமைப்பைச் சார்ந்தவர்களே குண்டுவைத்ததும், பிரபலம் அடைவதற்காக தன்னுடைய வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசிக் கொண்ட பா.ஜ.க செயற்குழு உறுப்பினரையும் நாம் பார்த்திருக்கிறோம்.இப்படி இதை வைத்துத்தான் அரசியல் செய்ய வேண்டும் என்றில்லாமல் கிடைத்ததில் அனைத்திலும் ஆதாயம் அடைய நினைப்பவர்கள் இந்த காவிக் கும்பல்.



இந்திய அளவில் பிரச்சினைகளை ஊதிப் பெரிதுப்படுத்த இவர்கள் நினைக்கும் போது கையில் எடுக்கும் வழிமுறைதான் ரத யாத்திரைகள். பெயர் மட்டுமே ரதயாத்திரை காவு கொண்ட உயிர்களோ ஏராளம்.


1983-ல் விஷ்வ ஹிந்து பரிஷத் முதன்முதலில் யாத்திரையை நடத்தியது. அதைத் தொடர்ந்து 1990-ல் சோம்நாத் கோவிலில் இருந்து அயோத்தி வரை ரத யாத்திரை நடத்தினார் அத்வானி. 1991-ல் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை போவாதாக ரதத்தில் ஏறியது முரளி மனோகர் ஜோஷி. இந்த இரண்டு யாத்திரைகளையும் ஒருங்கிணைத்து நடத்திக் காட்டியவர் தற்போதைய பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி. தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிரச்சாரம் மட்டுமல்ல, ரதயாத்திரைகள் இல்லாமல் இருந்த இடத்தில் இருந்தவாறே படுகொலைகளை(2002) நிகழ்த்த முடியும் என்று நவீனப்படுத்தியவர் தான் இந்த நீரோ.


பாரதீய ஜனதாவோடு தற்போது கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள் மட்டுமல்லாமல், திராவிட இயக்கங்களின் தொய்வும், கூட்டணி அரசியலும் தமிழகத்தில் இந்துத்துவ அமைப்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.


1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி தேசிய ஒருமைப்பாட்டு ஆணையக் கூட்டத்தில் பேசிய அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முதன்முதலாக 1998 ஆம் ஆண்டு ஒத்தகருத்தியல் பாரதீய ஜனதாவுடன் தேர்தல் கூட்டணி அமைத்தார். இன்றும் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ஜெயலலிதா போவதும், ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழாவைக் கண்டுகளிக்க மோடி தமிழகம் வருவதும் நாம் கண்ட கட்சிகளே.


1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தி.மு.க-வும், ம.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து அமைந்த வாஜ்பாயி தலைமையிலான ஆட்சியில் பங்கேற்ற தி.மு.க, ம.தி.மு.க மற்றும் பா.ம.க 2002-ல் நடைபெற்ற குஜராத் வன்முறைக்கு பின்பும் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வந்தன.திராவிடக் கட்சிகளின் சுவரொட்டிகள் மட்டுமே தந்தை பெரியாரை தாங்கி நிற்கின்ற நிலையில் இவை நடக்ககூடியவையே.


2001-ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு மற்றும் கோழி போன்ற உயிரினங்களை வெட்டத் தடை என்று தொடர்ந்து சட்டங்களை கொண்டு வந்து இந்த்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவுப் போக்கை கடைபிடித்தது.


2005-ல் மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்த உமாபாரதி மனுதர்மத்தின்படி "பசுவதை செய்பவர் மிருகத்திற்கு சமமானவர்; கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்ற காரணத்தை மேற்கோள் காட்டி பசுவதையை தடை செய்தது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்டதும் இதற்கு நிகரான ஒரு சட்டம்தான்.



அண்மையில், துக்ளக் பத்திரிக்கையின் சோ ராமசாமி, மோடியை பிரதமராக்க நாம் முயற்சிக்க வேண்டும், அவ்வாறு இல்லையெனில் ஜெயலலிதா பிரதமராக பாரதீய ஜனதா கட்சி தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது மேற்சொன்ன ஒற்றுமைகளையும் கருத்தில் கொண்டுதான். ஜெயலலிதாவும் இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதை கணித்ததோடு, தான் பிரதமர் நாற்காலியில் உட்காராத நிலையில் தன்னுடைய தொகுதிகள் நண்பர் மோடிக்காவது பயன்படட்டும் என்றுதான் கம்யூனிஸ்ட்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டார்



நாம் எல்லோரும் இந்துக்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை முழங்கும் சங்பரிவார அமைப்புகள், மனு தர்மத்தைப் பற்றியோ, சாதியை ஒழிப்பதைப் பற்றியோ வாய் திறப்பதில்லை.


மதுரையில் சமூக நீதி மாநாடு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. இதே மதுரையில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய மாநாட்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு மனுதர்மத்தை சட்டமாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.



இவர்கள் பிரதம வேட்பாளராக, ஆபத்பாந்தவானாக பிரச்சாரம் செய்யும் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில் தலித்துகள் நிலை பற்றி 2009-ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளியிட்ட செய்திகள் இவர்களின் சமூக நீதி பற்றி உண்மையை உரைக்கும்.


* தலித்துகள் இன்னும் கோவிலுக்குள் நுழைய முடியாது.

* 98 விழுக்காடு இன்னும் இரட்டைக் குவளை முறை புழக்கத்தில் உள்ளது.

* பள்ளிக்கூடங்களின் மதிய உணவுத் திட்டத்தில் தலித் குழந்தைகள் அவமதிக்கப்படுகிறார்கள்.

* ஐந்தில் ஒரு குழந்தைக்கு தீண்டாமையினால் போலியோ சொட்டு மருந்து மறுக்கப்பட்டுள்ளது.


பெரியாரின் அயராத பிரச்சாரத்தால் விரட்டப்பட்ட சங்பரிவாரங்கள் திராவிட அரசியல் கட்சிகளின் கொள்கை விட்டுகொடுப்பாலும், தேர்தல் அரசியல் சந்தர்ப்பவாதத்தாலும்தான் தமிழகத்தில் பரவியுள்ளன.


தேர்தல் அரசியல் வாக்கு வங்கி அடிப்படையில் வேண்டுமானால் பா.ஜ.க -வின் வீச்சு குறைவாக இருக்கலாம். ஆனால், மக்கள் பரப்புரையிலும், இந்துத்துவத்தை கொண்டு சேர்ப்பதிலும் இந்த அமைப்புகளின் வேகம் பலமடங்காக பெருகியுள்ளது. இந்த பலம்தான் எச்.ராஜாவும், சி.பி.ராதாகிருஷ்ணனும் பெரியாரை இகழ்ந்து பேசியதன் பின்னணியில் இருப்பது.


தந்தை பெரியார் தன்னுடைய வாழ்நாள் முழுக்க போராடி நமக்குக் கற்று கொடுத்த சுயமரியாதை நிலைக்க வேண்டுமெனில், இது பெரியார் மண் என்ற இறுமாப்பில் இருந்து வெளிவர வேண்டிய தருணம் வந்துவிட்டது. நம்மை சூழ்ந்துள்ள இந்துத்துவ அபாயத்தையும், மோடி முகமூடி அணிந்து வரும் பாசிசத்தையும் எதிர்த்து வருகின்ற தேர்தல் கடந்தும் போராட வேண்டிய தேவை நம்முன் உள்ளது.


பார்ப்பனமயப்படுத்தும் தந்திரத்தையும், அரசியலையும் எதிர்த்து போராடுவதற்கான தளத்தை நமக்காக பெரியார் அமைத்து தந்தார், மோடிமயம் ("MODI”fied) என்ற போர்வையில் இந்துத்துவ மயப்படுத்த வரும் கயவர்களை எதிர்த்து பெரியார் வழியில் நின்று போரிட வேண்டிய கடமை நம்முடையது.


கதிரவன்,
சேவ் தமிழ்சு இயக்கம்.


பாகம் -1 - http://save-tamils.blogspot.in/2013/09/1.html
பாகம் -2 - http://save-tamils.blogspot.in/2014/01/2.html
பாகம் -3 - http://save-tamils.blogspot.in/2014/02/3.html
பாகம் -4 - http://save-tamils.blogspot.in/2014/02/4.html
பாகம் -5 - http://save-tamils.blogspot.in/2014/03/5.html