Friday, February 21, 2014

மீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க திருவாரூரில் அணி திரள்வோம்!



தமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்டங்களான கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு கீழே நிலக்கரி உள்ளது. அந்த நிலக்கரிப் பாறை இடுக்குகளில் மீத்தேன் வாயு உள்ளது. 2000 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து இந்த மீத்தேனை உறிஞ்சி எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்னும் தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. முதற் கட்டமாக தஞ்சையில் 12 இடங்களிலும், திருவாரூரில் 38 இடங்களிலும் கிணறுகள் அமைக்கும் வேலைகளைத் தொடங்கி விட்டது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம்.
நம்மாழ்வாரின் தொடர் பரப்புரையால், ஆபத்தை உணர்ந்த தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை மக்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொடக்கக்கட்ட பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரத்தநாடு வட்டம் பாவாஜிக் கோட்டையில் வயல்வெளியில் போடப்பட்டிருந்த அந்நிறுவனம் நட்டகல்லை ஊர் மக்கள் திரண்டு வந்து பிடுங்கி எரிந்தனர். இந்தப் பாதிப்பை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத பகுதிகளில் முதல் கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.


இதனால் ஏற்படும் பாதிப்புகள் :

1) நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றிவிட்டு எரிவாயு எடுப்பதால், நிலத்தடி நீர் வறண்டு போகும்.
2) விவசாயம் செய்ய நீர் கிடைக்காது; அதுமட்டுமல்ல, குடிக்க நீர் இறக்குமதி செய்ய வேண்டும்.
3) பூகம்பம், நில அதிர்வு, நிலம் உள்வாங்குதல் ஏற்படும். தஞ்சை பெரிய கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதாகோயில் உள்ளிட்ட புனித தலங்கள் பாதிப்படையும்.
4) கடல்நீர் நமது நிலத்தடியில் உட்புகுந்து அனைத்து நிலத்தடி நீரும் உப்பு நீராகும்.
5) காற்று, நீர், நிலம் ஆகிய அனைத்திலும் இரசாயனம் கலக்கும். இதனால் புற்றுநோய், மூளை பாதிப்பு உட்பட பல புது நோய்கள் உண்டாகும். மீத்தேன் வாயு காற்றில் கலந்தால் மலட்டுத்தனம் உருவாகும்.
6) நாம் நம் வாழ்விடத்தை விட்டு வெளியேறி நாடோடியாக சொந்த நாட்டின் அகதிகளாக சுற்றித் திரிய வேண்டிய நிலை ஏற்படும். தாயகத்தை விட்டு வெளியேறிய இனம் பிற இனங்களிடம் அடிமைப்பட்டு அழிந்து ஒழியும்.
7) பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் பண்பாடு செழித்த காவிரிப் படுகை என்ற தமிழர் தாயகத்திலிருந்து, தமிழர்களை தானாகவே வெளியேற வைத்து, அகதிகளாக அலைய வைத்து, தமிழினத்தை அழிக்க இருக்கிற மீத்தேன் எரிவாயுத் திட்டம் என்பது தமிழின அழிப்பின் ஒரு தொடக்கம்.


எனவே, கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்.22 சனிக்கிழமை அன்று திருவாருரில் மக்கள் திரள் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 காவிரிப் படுகையை அழிக்க வரும் மீத்தேன் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்

 ஓ.என்.ஜி.சி நிறுவனம் காவிரிப் படுகைப் பகுதியில் எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் எடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்

 காவிரிப் படுகைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அறிவிக்க வேண்டும்.
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு சங்கங்கள், இயக்கங்கள், கட்சிகள், விவசாய அமைப்புகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் பேரணியில் கலந்து கொள்கின்றன.

காலை 9 மணிக்கு திருவாரூர் புதிய தொடர்வண்டி நிலையத்தில் தொடங்கி நகர்மன்ற அலுவலகம் வரை மக்கள் திரள் பேரணி நடைபெற இருக்கின்றது. பேரணி முடியும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நமக்கு உணவிட்ட நிலம், உயிர் கொடுத்த தாய்க்குச் சமம்;
இதில் அந்நியன் கால்படச் சகியோம்!

வாருங்கள் தமிழர்களே…
மண்ணக் காக்க… மக்களைக் காக்க… மீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க அணி திரள்வோம்!


ஒருங்கிணைப்பு :
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
8608884534, 814312315, 8903447371, 9443337401
antimethaneproject@gmail.com
fb page – மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – anti methane project federation

No comments:

Post a Comment