Tuesday, February 25, 2014

எழுவர் விடுதலையில் நசுக்கப்படும் தமிழக மக்களின் குரல்!



உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வதன்ன?

கடந்த பிப்.18 அன்று ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21ஆம் பிரிவு "சராசரி குடிமகனுக்கான வாழ்வதற்கான உரிமை" என்ற சட்டத்தின் அடிப்படையில் விலக்கி ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள், சதாசிவம், இரஞ்சன் கொகாய், சிவகீர்த்திசிங் அமர்வு உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் 23 ஆண்டுகள் சிறையில் வாடியிருக்கிறார்கள்; அத்தோடு 11 ஆண்டுகளுக்கு மேல் கருணை மனு மீதான நீண்ட நாட்கள் காத்திருப்பு, அவர்களை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது, இது நான்கு ஆயுள் தண்டனைக்கு சமமாகும்...மேலும் இந்திய குற்றவியல் சட்டம் 432 பிரிவின்படி குறிப்பிட்ட அரசு விடுவித்துக்கொள்ள உரிமை உள்ளது என்று விரிவாக சொல்லியுள்ளது தீர்ப்பு.




தமிழக அமைச்சரவை ஏழுபேரையும் விடுதலை செய்து அறிவிப்பு!

அடுத்த நாளே (பிப். 19) தமிழக முதலமைச்சர் தலைமையில் கூடிய அமைச்சரவை மூவர் உட்பட ராஜீவ் கொலைவழக்கில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழ்வருக்கும் விடுதலை என்றும், மத்திய புலனாய்வு விசாரித்ததால் மூன்று நாட்கள் மத்திய அரசு ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும், இசைவு வந்தாலும், வராவிட்டாலும் நிபந்தனையற்று விடுவிப்பதாகவும் முடிவெடுத்து சட்டசபையில் பேரவை விதி 110 கீழ் முதல்வரால் அறிவிக்கப்பட்டது. ஏழுபேர் விடுதலையை ஆதரித்தவர்களும், பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் உட்பட மரண தண்டனையே மானுடத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனப் போராடியவர்களும், பல்வேறு சமூக சனநாயக இயங்கங்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.


மத்திய அரசு எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை!

ஆனால் இந்த முடிவைப்பற்றி தன்னிடம் முன்கூட்டியே ஆலோசனை கேட்கவில்லை, கேட்டபின் தான் அறிவிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என (பிப். 20ல்) உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை கோரி வழக்கு தொடுத்திருந்தது மத்திய அரசு. அதோடு உச்சநீதிமன்றத்தின் மூவர் தூக்கு நீக்கம் என்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றும், வழக்கின் தனித்துவத்தை கருத்தில் கொள்ள தவறிவிட்டது எனவும் கூறி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரியுள்ளது. ஏற்கனவே வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு தண்டனை நீக்கம் செய்து வழங்கிய தீர்ப்பில் இவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் உள்ளது, அதன் தொடர்ச்சி தான் இந்த தீர்ப்பு, அரசியலமைப்பு சட்டத்தில் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்று உள்ளது, வழக்கின் தன்மையை பொறுத்தோ, கொலை செய்யப்பட்டவர் நாட்டின் உயரிய பொறுப்பில் இருந்தவர் என்பதற்காக எல்லாம் தீர்ப்பு மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்....

தமிழக அரசு எழுவரை விடுவிப்பதற்கு உள்ள வழிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை, அரசு தனது பதிலை இருவாரத்திற்குள் நீதிமன்றத்தில் கூற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது தமிழக அரசு உரிய பதில் வழங்கினால் போதும், சட்ட வழிமுறையை சரியாக பின்பற்றி எழுவர் விடுதலை செய்யமுடியும். எப்போதுமே நமது பக்கம் இல்லாத சட்டமும், நீதிமன்றமும் இன்று நமது பக்கம் உள்ளது. "நாட்டின் கூட்டு மனசாட்சிக்காக" காசுமீரத்தின் அப்சல் குருவை தூக்கிலிட்டு கொன்றது போல 23 ஆண்டுகள் ஒவ்வொருநாளும் "இன்று தூக்கா நாளை தூக்கா" என கொடுமையானத் தண்டனை அனுபவித்த பின்னும் சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் இந்திய தேசியம் என்கிற பெயரில் இந்திய தேசிய கட்சிகள், அவர்களின் கைக்கூலி ஊடகங்களும் கொல்லத் துடிக்கின்றன‌ .

அற்புதம் அம்மாளின் மரண தண்டனைக்கெதிரான போராட்டம்...


ராஜீவ் கொலை வழக்கின் தீர்ப்பு சொல்வதென்ன? ராஜீவின் கொலை ஒரு பயங்கரவாத செயலா?

தீர்ப்பில் மிகத் தெளிவாக சில ஐயப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன, அதாவது இது இந்திய இறையாண்மைக்கு எதிராக நடந்த பயங்கரவாத தாக்குதல் அல்ல, இது இந்திய அமைதி ப்டையின் நடவடிக்கைக்காக பழிவாங்குவதற்கு நடத்தப்பட்ட படுகொலையே என உச்சநீதிபன்ற தீர்ப்பு கூறுகின்றது. இன்னமும் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட இடுப்புக் குண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட‌வில்லை. குற்றத்தின் திட்டம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு வந்த மூவருக்கு மட்டும் தான் தெரியும், அவர்கள் அனைவரும் விசாரணைக்கு முன்னரே இறந்துவிட்டார்கள்... சதி திட்டம் முழுமையாக விசாரணையில் தெரியவில்லை போன்ற முக்கிய அம்சங்கள் அந்த தீர்ப்பில் உள்ளது.


ஜெயின் கமிசன், வர்மா கமிசன்படி உண்மையான குற்றவாளி யார்?

1999க்கு பிறகு கொலை வழக்கு விசாரணை முழுமையாக முடிவடையவில்லை என்று கூறி வர்மா கமிசன், ஜெயின் கமிசன் இரண்டு விசாரணை கமிசன்கள் அமைக்கப்பட்டன. இரண்டுமே சதியில் பின்னணி உடையவர்களான சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி, சில காங்கிரஸ் தலைவர்களை விசாரிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இன்றுவரை அவர்கள் விசாரிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி விசாரணை நீதிபதியான ஜெயின் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இந்த இறப்பும் தெளிவாக விசாரிக்கப்படவில்லை. வர்மா கமிசன் அறிக்கை காணாமல் போய்விட்டதாக அரசு சொல்கிறது. இப்படி ஒரு ஓட்டை வாளி தான் இராஜீவ் விசாரணை.... உண்மை குற்றவாளிகள் அதிகார பலத்தைப் பயன்படுத்தி தப்பித்துவிட, எந்த அதிகார பின்புலமும் இல்லாத எளியவர்கள் மட்டுமே கடந்த 23 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்....



இன்றளவும் முழுமையாக விசாரிக்கப்படாத இந்த வழக்கு எங்கே மறுவிசாரணைக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தங்களை காத்துக்கொள்வதற்காக, நாட்டின் நலன், நாட்டின் முக்கிய தலைவரை இழந்துவிட்டோம், பயங்கரவாத செயல், மூவர் உயிரை காப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது, படுகொலையில் இறந்த 15 பேருக்கு என்ன நீதி என்று கூவிவருகின்றார்கள்....... 23 ஆண்டுகள் கொடுந்தண்டனை அனுபவித்த மூவரும் தூக்கில் கொல்லப்படுவதுதான் சரி என ரத்தக்கரையோடு மனித தன்மையற்று எல்லா ஊடகங்களிலும் பொது தளத்திலும் பேசிவருகிறார்கள். கார்பரேட் ஊடகங்களும் இதே பொய்யை, பொய் என்பதைவிட நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தேசப்பற்று, நாட்டு மக்களின் கூட்டு மனநிலை என கூவிவருகிறார்கள்.

கூட்டுமனசாட்சியின் திருப்திக்காக பலியிடப்பட்ட காசுமீரத்து சகோதரன் அப்சல் குரு


'தேசத்தந்தை' 'மகாத்மா' காந்தி கொலைக் குற்றவாளி பத்தாண்டில் விடுதலை!

நாட்டின் 'தேசத் தந்தை' என சொல்லப்ப‌டும் காந்தியை கொன்ற கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கோபால் கோட்சேவுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்த்தால் அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு 10 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டபோது "தேசத்தந்தை கொலைக்குற்றவாளி விடுதலை செய்யப்படுவதா?" என 'கூட்டுமனசாட்சி' கேள்வி எழுப்பவில்லை.... ஆனால் ராஜீவ் வழக்கை பொறுத்தவரை நீதிமன்றமே இது பழிவாங்கும் செயல்தான் பயங்கரவாத செயல் அல்ல என்ற சொன்னபின்னும் கொடுமையான 23 ஆண்டுகள் தண்டனை கழித்து விடுதலை ஆகப்போகும் ஏழுபேரை மீண்டும் மீண்டும் தீவிரவாதிகள், அது பயங்கரவாத செயல் என்று கட்டமைக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன? என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.



உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற, அவர்களை காப்பாற்றும் இந்த ஊடகங்களை மக்கள் தூக்கி எரியாமல் இருக்க, இத்தனைக்கும் திரைமறைவில் இருக்கும் மத்திய அரசின் மீது பாயாமல் இருக்க மீண்டும் மீண்டும் இறையாண்மை, தீவிரவாதிகள், பயங்கரவாதம் போன்ற வார்த்தைகள் சிறப்பாக சிலரால் கையாளப்படுகின்றன. காசுமீர் மாநிலத்தின் மீது மத்திய அரசின் அத்துமீறலைக் கண்டித்து கிளர்ந்தெழும் மக்களை எல்லாம் பயங்கரவாதிகள் போல் நாட்டின் பிற பகுதி மக்களிடம் மீண்டும் மீண்டும் சித்தரிப்பதற்காக அப்சல் குருவின் தூக்கு எப்படித் தேவைப்படுகிறதோ, அதைப்போலவே மூவர் தூக்கிற்காக ஒன்றுபட்டுள்ள தமிழக மக்களை பயங்கரவாதத்திற்கு துணை போகிறவர்கள் போல் ஒரு பிம்பத்தை பிற பகுதி மக்களுக்கு காண்பிப்பதற்காக இந்த மூவரின் தூக்கும் ஏழ்வர் விடுதலை மறுப்பும் அடிப்படையில் தேவையாக அமைந்துள்ளது. அதனால் தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் மட்டுமன்றி இந்திய தேசிய மாயையை வைத்து மத்தியில் ஆட்சியில் இருந்த, இருக்கும், வரத்துடிக்கும் மூன்று கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு, "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி தமிழக அரசு அறிவித்த ஏழ்வர் விடுதலை"யை அரசியல் உள்நோக்கம் உடையது என மாநில அரசின் அதிகாரத்தின் மேல் தங்களுக்கிருக்கும் ஆதிக்கத்தை வைத்து அரசியல் செய்கின்றன. மேலும் பத்தாண்டுகால ஊழலாட்சியினால் சரிந்து போயுள்ள தனது பிம்பத்தை இராஜீவ் ஆவி மூலம் சரி செய்து கொள்ள நினைக்கின்றது காங்கிரசு, இந்த அரசியலுக்காகத் தான் "Nation wants to Know" என்று அர்னாப்புகளும், சர்தேசாய்களும் மக்களின் மனதை தூண்டிவிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்...


மூவர் உயிர்காக்க தன்னுயிர் ஈந்த செங்கொடியும், மூன்று தமிழர்களும்...


முகத்தின் சாயமே வெளுத்தபின் எதற்கு உனக்கு முக்காடு?

உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சமூக நீதிக்கான இந்த தீர்ப்பு "சட்டத்திற்கு புறம்பானது" என நீதிமன்றத்தை அவமதித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவே பொறுமும் இந்திய தேசிய கட்சிகள், ஊடகங்கள் உண்மையிலேயே இனிமேல் செய்யவேண்டியது என்னவென்றால், "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்று மக்களை திசைதிருப்ப அரசியலமைப்பு சட்டத்தில் எழுதி வைத்திருந்தோம், உண்மையில் அது அப்படி இயங்கியதில்லை, ஆகவே அரசியலமைப்புச் சட்டம் இனிமேலும் அப்படி நீடிக்க முடியாது, இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரத்தை மக்களிடத்தில் இருந்து பறித்து குவித்து வைத்துள்ள "உயர் குழாமாகிய நாங்களும் சாமானிய மக்களும் சட்டத்தின் முன் சமமல்ல" என்று இதுகாறும் எழுதப்படாமல் அமலில் இருக்கும் மனுநீதியை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தி எழுதுவதுதான். அதாவது "உங்கள் குப்பன் சுப்பன் என்றால் ஒரு நீதி எங்கள் ராஜீவ் என்றால் ஒரு நீதி" என்பதை தெளிவாக எழுதுகின்றோம். இன்று வந்த தீர்ப்பும், சும்மா வந்துவிடவில்லை, இதற்கு பின்னால் அற்புதம் அம்மாளின் 23 ஆண்டு கால போராட்டமும், செங்கொடியின் உயிர் தியாகமும், பல்வேறு தரப்பட்ட மக்களின் போராட்டமும், மாயவேண்டும் மரண தண்டனை என்ற மாந்தனேயமும் அடங்கியுள்ளது. இன்று இந்த தீர்ப்பை தடைப் போட்டு தடுத்திட மத்திய அரசிற்கு எந்த தகுதியுமில்லை, சட்ட வழியுமில்லை.



மாநில அரசை ஒரு அரசு என்று அழைப்பது சரியா?

டெல்லி மக்கள் தங்கள் சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றக் கூட வழியில்லை என்பதை ஆம் ஆத்மி கட்சியின் போராட்டங்கள் மூலமாக அறிந்துள்ளார்கள். அதே வரிசையில் தமிழக சட்டசபையின் அதிகாரமும் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாகியுள்ளது. தமிழக அரசால் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் மத்திய அரசின் குப்பைத்தொட்டியில் எரியபட்டுள்ள நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று தமிழக அரசின் மேற்பார்வையில் 23 ஆண்டுகள் தமிழக சிறையில் வாடும் மூவரின் தூக்கை நீக்கி தண்டனையைக் குறைத்து விடுவிக்க உச்சநீதிமன்றம் அரசிற்கு வழிகாட்டிய பின்பும் குறுக்கு வழியில் தடுக்க நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு உறுதுணையாக இந்திய தேசிய கட்சிகளும், ஊடகங்களும் இருக்கின்றன. கூட்டாட்சி(Federal System), இந்திய யூனியன் அரசு(Indian Union Government) என்ற அமைப்புக்கு மாறாக ஒற்றையாட்சி, இந்திய மத்திய அரசு என மாநில அரசின் உரிமைகளை முற்றாக பறிப்பது மாநில மக்களின் நலன்களுக்கு, உரிமைகளுக்கு எதிரானது.



ஒரு மாநில நிர்வாகத்தை அரசு என்று சொல்கிற அளவிற்கு உண்மையில் அதிகாரத்தை அது பெறவில்லை. அல்லது பெற மத்திய அரசு விடுவதில்லை. எல்லா மாநிலங்களின் கூட்டு இறையாண்மையே இந்தியாவின் இறையாண்மை என்ற புரிதல் இங்கில்லை. மத்திய அரசிசிடம் அதிகாரத்தை முழுமையாக குவிக்காமல் மாநிலங்களுக்கான, மாநில சட்டசபைக்கான, மாநில மக்களுக்கான அதிகாரமும், உரிமைக்கான போராட்டம் நடைபெறாமல், எல்லா மாநிலங்களும் மாநில மக்களும் சமமாக நடத்தப்படும் உண்மையான கூட்டாட்சி இங்கு மலர சாத்தியமில்லை. அதுவரை இந்தியா முழுமைக்குமான அதிகாரம் ஒருசாரருக்கே குவிந்து இருக்கும். தமிழகம் போல எல்லா மாநில மக்களின் குரல் வளையும் நசுக்கப்படும். இதைத்தான் மூவர் தூக்கு நீக்கி ஏழ்வர் விடுதலை அறிவித்தபின்னும் சுற்றி நிகழும் அரசியல் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.


ஸ்நாபக் வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment