Wednesday, February 26, 2014

சிங்கள ராஜபக்சேவும்! இந்துத்துவ மோடியும்! (மோடி - வெளிச்சங்களின் நிழலில் ! - 4)





கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்ச் மாதம் என்றாலே,இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத்தப்பட்ட போர்க்குற்ற, இனப்படுகொலை பன்னாட்டு விசாரணை வேண்டி ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதுதான் நம் நினைவுக்கு வரும். இந்த ஆண்டும் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா கூட்டத் தொடரில் எப்படிப்பட்ட தீர்மானத்திற்கு வலியுறுத்த வேண்டும் என்பது சனநாயக இயக்கங்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.


வருகின்ற 2014 மார்ச் மாதம் முந்தைய ஆண்டுகளின் மார்ச் மாதங்களைவிட சற்று வேறுபட்டு இருக்கப் போகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மும்மரம் அடையத் தொடங்கியிருக்கும். நாம் இந்த முறை இரண்டு இனப்படுகொலையாளர்களை எதிர்கொள்ளப் போகிறோம். ஒருபக்கம் சிங்கள ராஜபக்சே; மறுபக்கம் இந்துத்துவ மோடி. இவர்களின் நிலையும்,இவர்கள் செய்த இனப்படுகொலையும் அளவினால் மட்டுமே மாறுபடுபவை; நோக்கத்தால் அல்ல.



2004-ல் பிரதமராகப் பதவியேற்று கொண்ட ராஜபக்சே, அப்போதைய சனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கவின் பிரதான ஆதரவு அமைச்சராக இருந்த மங்கள சமரவீராவை தன் பக்கம் இழுத்து சந்திரிகாவை ஓரம்கட்டி 2005 சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராகி, வெற்றியும் பெற்றார். இவ்வாறு பண்டாரநாயக குடும்பத்திடம் இருந்த இலங்கையின் ஆட்சி ராஜபக்சேவிடம் வந்து, போருக்குப் பிறகான சூழலில் விழுதுகள்விட்டு படர்ந்துள்ளது.



இதே பாணியில்தான், 2013-ல் ஆர். எஸ். எஸ் ஆதரவைப் பெற்று, ராஜ்நாத் சிங்கின் உதவியுடன் நரேந்திர மோடி 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பண்டாரநாயகா குடும்பத்தை ஓரங்கட்டிவிட்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்சேவைப் போலவே அத்வானியை குப்புறத் தள்ளிவிட்டு பிரதமர் வேட்பாளராகியுள்ளார் மோடி.


2010- ஆம் ஆண்டு இந்து நாளிதழுக்கு ராஜபக்சே அளித்த நேர்காணலில் பின்வருமாறு கூறியிருந்தார், " வளர்ச்சி மிக முக்கியமானது. வளர்ச்சியும், அமைதியும்தான் சனநாயகத்திற்கு வழிவகுக்கும்". போரின் போது நடைபெற்ற போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள ராஜபக்சே எடுத்தப் பாதை வளர்ச்சி என்கிற நிலைப்பாட்டை முன்வைத்தே. 2012-ல் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இந்திய அளவிலான அரசியலில் கால்பதிக்க நரேந்திர மோடி எடுத்த நிலைப்பாடும் வளர்ச்சி என்கிற போலிப் பிரச்சாரத்தின் மூலமே.



2002-ல் நடந்த குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் இந்துத்துவ நிலைப்பாட்டை முன்னிறுத்தியும், மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட மனக் காழ்ப்புணர்வையும் பயன்படுத்தி நரேந்திர மோடி வெற்றி பெற்றார். குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலானது ஆட்சிக் காலம் முடிவதற்கு எட்டு மாதங்கள் முன்னதாகவே நடத்தப்பட்டது. 2009 போருக்குப் பின்னர் ராஜபக்சே தனக்கு பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி சனாதிபதிக்கான பதவிக்கால வரம்பை நீக்கினார்.



இலங்கையில் ராஜபக்சேவிற்கு எதிராகவும், போர்க் குற்றங்கள், மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராகவும் பேசுபவர்கள் பிரிவினைவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர். குஜராத் இசுலாமியப் படுகொலை குறித்து, மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த பா.ஜ.க அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை செய்யப்பட்டதும், காவல் அதிகாரி சஞ்சீவ் பட் மீது வழக்குகள் பாய்ந்ததையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.



துப்பாக்கிகளுக்கு பூசை செய்யும் திருவாளர்.மோடி

குஜராத் இசுலாமியப் படுகொலைக்கு பிறகு தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை எல்லாம் குஜராத் மற்றும் குஜராத்திகள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களாக பிரச்சாரம் செய்தார் மோடி. 2013-ல் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் " இந்தியாவே முக்கியம்" என்று தேசிய உணர்வை முன்னிறுத்தி பேசினார் மோடி. 2009 போருக்குப் பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ராஜபக்சே, " இலங்கையில் இரண்டே தரப்பினர்தான் இருக்கிறார்கள்; நாட்டை நேசிப்பவர்கள் ஒருசாரர், பிறந்த நாட்டை நேசிக்காத இன்னொரு சிறு பிரிவினர்" என்று குறிப்பிட்டார்.


இதே பாராளுமன்ற உரையில், " நாங்கள் சிறுபான்மையினர் என்கிற வார்த்தையை இலங்கையின் அகராதியில் இருந்தே நீக்கிவிட்டோம்" என்று கூறியிருந்தார் ராஜபக்சே. இதே கருத்தைத்தான், ஆர். எஸ். எஸ் -சின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான, மோகன் பகவத் டெல்லியில் நடைபெற்ற ஒருக்கூட்டதில், " இந்தியாவில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது, இந்துத்துவக் கொள்கையை மறுஆய்வு செய்யும் பேச்சுக்கே இடமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.


நடந்து முடிந்த இனப்படுகொலைகளை வளர்ச்சி என்ற பிரச்சாரத்தின் மூலம் மூடி மறைக்கும் புள்ளியில் மட்டும் மோடியும், ராஜபக்சேவும் ஒன்றிணைவதில்லை. இந்தியாவிலும்,இலங்கையிலும் நிலவும் பெரும்பான்மைவாதப் போக்கான இந்துத்துவ தேசியவாதமும், சிங்கள பௌத்த தேசியவாதமும் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் தொடக்கப் புள்ளி.


2012 குஜராத் சட்டசபைத் தேர்தல் வெற்றியைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்-ன் இணை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத், இந்துத்துவ கொள்கையே மோடியின் வெற்றிக்கு காரணம் என்று கூறியதுடன், 180 தொகுதிகள் கொண்ட மாநிலத்தில் ஒரு இசுலாமிய வேட்பாளரைக் கூட மோடியின் பா.ஜ.க நிறுத்தாதை சுட்டிக் காட்டியது. இதற்கு ஒருபடி மேலும் சென்று, மோடியின் 7 அமைச்சர்கள் அந்தத் தேர்தலில் தோல்வியுற்றதையும், நானோ நகரமான சனந்தில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெறாததையும் சான்றுகளாக கொடுத்திருந்தது.


பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்கிற மோடியினுடைய பா.ஜ.க-வின் நிலைப்பாட்டையும், ஈழப் பகுதிகளிலுள்ள தமிழர் கோவில்களை இடித்துவிட்டு புத்த விகாரைகள் அமைத்துவரும் ராஜபக்சே அரசின் போக்கையும் சேர்த்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


" இந்துத்துவக் கொள்கை என்பது தேசியத்துடன் தொடர்புடையது, தேசியவாதம்தான் வளர்ச்சிக்கான வழி" என்று நிதின் கட்கரி கூறுவதும், " இந்துத்துவக் கொள்கைதான் வளர்ச்சி; வளர்ச்சிதான் இந்துத்துவக் கொள்கை" என்று பிரவீன் தொகடியா கூறுவதும், எப்படி சிங்கள புத்த தேசியவாதப் போக்குடன் பொருந்துகிறது என்பதற்கான் சான்று பின்வருமாறு. ராஜபக்சேவின் கூட்டணிக் கட்சியான, ஜாதிக ஹெல உறுமய (JATHIKA HELE URUMAYA) என்னும் சிங்கள புத்த கட்சியின் மூத்த தலைவர் கூறியதாவது, " சூழலியல், சமூக மற்றும் பொருளாதாரம் என இன்றைய அனைத்து பிரச்சினைகளுக்கும் சிங்கள பௌத்தமே தத்துவார்த்த அடிப்படையிலான தீர்வு" என்று கூறியிருப்பதை நாம் உற்றுக் கவனிக்க வேண்டும்.




சிங்கள பௌத்தமே எனது கொள்கை என முழங்கும் இராஜபக்சே


ஈழத் தமிழர்களை அழித்தொழித்து, ஒடுக்கிவிட்டு அண்மைக்காலமாக இசுலாமியர்களின் மீது தாக்குதல் தொடுத்து வரும் சிங்கள புத்த பேரினவாதம் போலவே, இசுலாமிய வெறுப்பு என்பதில் இருந்து கொள்கையை வகுத்துள்ள இந்துத்துவமும் செயல்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மற்ற தேசிய இனங்கள், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் சார்ந்த பிரச்சினைகளில் மோடி மற்றும் ஆர்.எஸ். எஸ்.-சின் நிலைப்பாடுகளே இதற்கு சான்று.


இந்துத்துவ பெரும்பான்மைவாதம் இந்தியாவில் இருந்து இசுலாமியர்களை அப்புறப்படுத்துவதும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுப்பதும் எளிதாக நிகழ்த்தக் கூடியது என்றும் நம்புகிறது. இதன் பொருட்டே தன்னுடைய பெரும்பான்மைவாதக் கொள்கையை நிலைநிறுத்திக் கொள்வதற்கான செயல்களை இசுலாமியர்கள் மீதான தாக்குதல்களில் இருந்து தொடங்குகிறது இந்துத்துவம்.



2012 குஜராத் சட்டசபை தேர்தலின் போது மோடியின் தேர்தல் அறிக்கையில், துறவிகளுக்கான நகரம் அமைத்தல், பசுவதைத் தடுப்பு, சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்துதல் மற்றும் விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதும் உறுதி மொழிகளாக அளிக்கப்பட்டிருந்தது.


2010-ல் மஹா சங்க நிகழ்வில் பேசிய ராஜபக்சே, புத்தசாசன காரிய சாதக மண்டல்யா, புத்தர் ஞானம் பெற்ற 2600-வது ஆண்டை கொண்டாடும் பொருட்டு, புத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான 20 வழிகள் கொண்ட செயல்திட்டத்தை கொடுத்துள்ளதாகக் கூறியதோடு,இதன் துணை கொண்டு சிங்கள புத்த கலாசார அடையாளத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


ராஜபக்சேவின் இந்த உரையும், மேற்சொன்ன மோடியின் தேர்தல் உறுதி மொழிகளும் இவர்கள் எதன் அடிப்படையில், எதைக் காப்பாற்றுவதற்காக இயங்குகிறார்கள் என்பதைப் புலப்படுத்தும். அவையாவது சிங்கள புத்த தேசியவாதமும், இந்துத்துவ தேசியமுமே.


2002 குஜராத் படுகொலை குற்றங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், இந்திய அரசியலில் கால் வைக்கவும் வளர்ச்சி என்னும் அரிதாரம் பூசிய மோடியும், இனியும் இந்துத்துவக் கொள்கைகளை கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியாது என்று நினைத்த பா.ஜ.க-வும் இணைந்து மோடியின் வளர்சிக்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.இந்துத்துவ கொள்கைகளை செயல்படுத்த அதிகாரத்திற்கு வர நினைக்கும் மோடியும், பா.ஜ.க-வும் கையில் எடுத்துள்ள துருப்புச் சீட்டே வளர்ச்சி.


சிங்கள புத்த தேசியவாதத்தைக் கைகொண்டு போரை நடத்தி இன அழிப்பையும் போர்க்குற்றங்களையும் செய்த ராஜபக்சே பன்னாட்டு அழுத்தங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே வளர்ச்சி அரிதாரத்தை பூசியுள்ளார்.


மோடியும், ராஜபக்சேவும் வளர்ச்சி என்று கூறுவது மக்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால், இந்த போலிப் பிரச்சாரத்தின் மூலம் மோடியும், ராஜபக்சேவும் வளர்கின்றனர் என்பதே உண்மை. இவர்களைப் பொறுத்த வரை வளர்ச்சி என்பது வெறும் அரசியல் காய் நகர்த்தலும், பெருமுதலாளிகளுக்கும் மட்டுமே. மற்றபடி, அவர்களின் அடிப்படைவாத கொள்கைகளில் இருந்து அவர்களோ அல்லது அவர்களது அரசோ விலகி நிற்பதில்லை.


இலங்கை அரச நிர்வாகத்தின் ஒவ்வொரு இடுக்கிலும் தன்னுடைய குடும்பத்தவரை அமர்த்தி சர்வதிகார ஆட்சி நடத்தி வரும் ராஜபக்சேவும், "பாசிசத்தின் மொத்தவடிவம்" என்று ஆஷிஷ் நந்தியால் விளிக்கப்பட்ட நரேந்திர மோடியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ஆவர்.



ராஜபக்சே சனாதிபதியாக ஆதரவளித்து இலங்கை முழுக்க பிரச்சாரம் செய்த மங்கள சமரவீ ராவையும், ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக ஜே.வி.பி போன்ற சிங்கள புத்த தேசியவாத அமைப்புகளையும் பயன்படுத்திக் கொண்ட ராஜபக்சே, காரியம் முடிந்ததும் அவர்களை கைகழுவிவிட்டார்.அது போலவே, மோடியும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை தேர்தலுக்குப் பின் கைகழுவுவார் என்பது திண்ணம்.



இந்திய, இலங்கை நாடுகளின் சித்தாந்தப் போக்கு என்பது பெரும்பான்மை அடிப்படைவாதங்களான இந்துத்துவ தேசியம் மற்றும் சிங்கள புத்த தேசியவாதம் என்கிற கருத்தியல்களைக் கொண்டே சுழல்கிறது. இவையிரண்டும் மற்ற தேசிய இன மக்களையும், சிறும்பான்மையினரையும் காவு வாங்குவதிலேயே குறியாக இருந்ததும், இருப்பதும் நாம் அறிந்ததே. உற்பத்தியை விரைவுபடுத்துவதே கருவிகளின் நோக்கம். அதே போல, மோடியும், ராஜபக்சேவும் இந்துத்துவ, சிங்கள புத்த தேசியவாதங்களின் ஆதிக்கத்தை விரைவுபடுத்தும் நாசகாரக் கருவிகளே.


கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்


- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!

பாகம் -1 - http://save-tamils.blogspot.in/2013/09/1.html
பாகம் -2 - http://save-tamils.blogspot.in/2014/01/2.html
பாகம் -3 - http://save-tamils.blogspot.in/2014/02/3.html

No comments:

Post a Comment