Monday, January 27, 2014

மோடி - வெளிச்சங்களின் நிழலில்! - 2




ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டணி பேரங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய தேசிய அளவில் முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் தமது பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுக் கொண்டுள்ளன. காங்கிரசு கட்சி ராகுல் காந்தியை தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க-விற்கோ எதிர்த்து விமர்சனம் செய்ய ராகுல் மட்டுமின்றி, இப்போது சாமானியர்களின் கட்சியாக தம்மை விளித்துக் கொள்ளும் ஆம் ஆத்மியும் சேர்ந்துள்ள‌து.

மோடியின் ஆதரவு அலையால் வெற்றி பெற்றதாக பாரதிய ஜனதாவால் விமர்சிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தவுடன் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது பாரதிய ஜனதா கட்சியினரிடம் இருந்துதான். இப்படி இருக்கும் அரசியல் நடப்பில் 272 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியாக வேண்டும் என்று இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடியின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சம் பற்றிய இரண்டாவது கட்டுரை இது. நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் உத்தரப்பிரதேசத்தை முலாயம் சிங் யாதவால் ஒருநாளும் குஜராத்தாக மாற்ற முடியாது என்றும்(அமித் ஷா உத்தரப்பிரதேசம் அனுப்பப்பட காரணம் இதுதானோ!), அப்படி மாற்ற முலாயமிற்கு ஒன்றும் 56 இன்ச் உள்ள நெஞ்சம் இல்லை என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் மோடி.

நரேந்திர மோடியின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சத்தின் நிழலில் மறைக்கப்படும் விபரங்களைப் பற்றி பேச எழுதப்பட்ட இந்த கட்டுரையின் முதல் பாகத்தை வாசித்த நண்பர்கள் பலரிடமிருந்து எழும்பிய கேள்விகள் பின்வருமாறு,

1. காங்கிரசு ஆட்சிக்கு யார்தான் மாற்று?
2. காங்கிரசின் இத்தனை ஊழல்கள் பற்றி தெரிந்தும் மோடியை விமர்சிக்கிறீர்களே?
3. 2002- குஜராத் வன்முறை என்பது கடந்து போன ஒன்று. அதையே ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

இந்த கேள்விகளில் முதல் இரண்டு கேள்விகளுக்கான பதிலாவது, காங்கிரசு கட்சி மனிதப் புனிதர்களின் கட்சி என்றோ, அங்கு இருப்பவர்கள் மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான்கள் என்றோ நாம் சொல்லவரவில்லை. மாறாக, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியால் முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும், அதற்கு நடைபெற்ற விதிமுறை மீறல்களும், வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் பிம்பப்பெருக்கம் பற்றி பேசுவதே இக்கட்டுரை தொகுப்பின் நோக்கம்.

காங்கிரசின் பத்தாண்டுகால ஆட்சியைப் பார்த்து 100 விழுக்காடு வெறுப்பில், இன்னும் சொல்லப்போனால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும், ஊழல் என்கிற பிரச்சினை பற்றி மட்டுமே கவலைப்படுகிற நடுத்தரவர்க்கம், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஒளிர்ந்த லட்சணத்தை மறந்துவிட்டு மோடியை பிரதமராக்க துடித்துக் கொண்டிருக்கிறது, துடிக்க வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

பா. ஜ. க-வையும், மோடி என்கிற அதிகாரம் குவிக்கப்பட்ட தனிமனிதரையும் கொண்டாடும் நடுத்தர, புதிய நடுத்தர வர்க்கங்களைச் சார்ந்தோர் வாஜ்பாய் தலைமையிலான கடந்த பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற சவப்பெட்டி ஊழல் பற்றியோ, தங்க நாற்கரச் சாலை திட்டத்தில் வேலை பார்த்த சத்யேந்திர துபே என்கிற பொறியியலாளர் கொல்லப்பட்டதைப் பற்றியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையிலே எலிக்கறி உண்டு உயிர் வாழ முயன்ற விவசாயிகள் பற்றியோ பேச மறுக்கிறார்கள், மறக்கிறார்கள். அதே காலத்தில் ஆந்திராவில் வளர்ச்சியின் நாயகராக கொண்டாடப்பட்ட சந்திரபாபு நாயுடு மக்களால் நிராகரிக்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் இவர்கள் கொண்டுவந்ததாக சொல்லப்பட்ட வளர்ச்சி என்பது மக்களுக்கானதாக இருந்திருந்தால் "இந்திய ஒளிர்கிறது" என்கிற பிரச்சாரம் மூலம் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்கும்.ஆனால் அப்படி நடக்கவில்லை, மாறாக ஆட்சி பறிபோனது.
இவை எல்லாவற்றையும்விட ஒரு முக்கியக் காரணம், நரேந்திர மோடியால் ஊக்குவிக்கப்பட்டு குஜராத்தில் இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளே.



2000-க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கொல்லப்பட்டதும், பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதும் இதே பா.ஜ.க ஆட்சிக்காலத்தில்தான் நடத்தப்பட்டது. இந்த வன்முறையின் பிதாமகராக பின்புலத்தில் இருந்து செயல்பட்டதும், ரகசியச் சந்திப்பைக் கூட்டி இந்துக்களின் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு குறுக்கே நிற்கவேண்டாம் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதும் யார்?

குல்பர்க் சொசைட்டியில் நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலில் இசான் ஜாப்ரியிடமிருந்து வந்த பாதுகாப்புக் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி, காவல் துறை அதிகாரி சஞ்சீவ் பட்டிடம் நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிவித்தது யார்?



நரோடா பாட்டியா கொலை தாக்குதலில் வாள்களை ஆர்.எஸ்.எஸ் கர சேவகர்களுக்கு கொடுத்து, 97 பேர் கொலை செய்யப்படக் காரணமாக இருந்த மாயா கொத்னானிக்கு அமைச்சரவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக (!) பதவி வழங்கி கௌரவித்தது யார்? (இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இவருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது)

போலி என்கவுன்டர் மோதலில் இஷ்ரத் ஜஹான் என்னும் பெண் கொல்லப்பட்டதும், மோடியின் ஆட்சியில் நடைபெற்ற போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் இருந்து தொடர்புள்ள காவல்துறை அதிகாரிகள் காக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி வன்சாரா வாக்குமூலம் அளித்ததும் யாருக்கு எதிராக?

இவ்வாறு நடந்த மனிதப் படுகொலைகளுக்கும், மனித உரிமையை காலில் போட்டு நசுக்கிய செயல்களுக்கும் சூத்ரதாரியான திருவாளர்.நரேந்திர மோடிதான் நாட்டை செழிப்புறச் செய்வார் என்று நினைப்பதைவிட ஆகப்பெரிய பிற்போக்குத்தனம் ஒன்று இருக்கவே முடியாது.

வளர்ச்சி என்பது மக்களுக்கு ஆனதாக, உயிர்நேயத்துடன் இருக்க வேண்டும். 2002-ல் குஜராத் படுகொலையில் கொல்லப்பட்ட நம் சகமனிதர்களின் மீது ஏறி நின்றுதான் வளர்ச்சி என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால், குஜராத் படுகொலைகளை புறந்தள்ளிவிட்டு மோடியின் வளர்ச்சி மாயைப் பற்றி நாம் பேசவே முடியாது.

2002 குஜராத் வன்முறை என்பது கடந்த கால நிகழ்வு என்றும், வன்முறையில் கொல்லப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்களின் மீது ஏறி நின்று வளர்ச்சி என்று மோடி போடும் கூச்சலைக் கேட்க வேண்டும் என்றும் சொல்பவர்கள் கண்டிப்பாக குஜராத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தர்யபூர் மற்றும் சுஹுபுரா பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.


குஜராத்தின் இந்த பகுதிகளில் இசுலாமியர்கள் வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக 2012-ல் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி தலைமையிலான குஜராத் பாரதிய ஜனதா அங்கு பிரச்சாரமே மேற்கொள்ளவில்லை. 2002 வன்முறைக்குப் பிறகு சுஹுபுரா பகுதியில் இருந்து இந்துக்கள் வெளியேறிய பிறகு அங்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த குடிநீர், கழிவுநீர் வடிகால் மற்றும் பேருந்து போன்ற அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றன. 2012 தேர்தலுக்கு முன் அமித் ஷாவின் தொகுதிக்கு உட்பட்டிருந்த இந்த பகுதிக்கு அவர் ஒருமுறை கூட வந்ததேயில்லை. அவர் இந்த குறிப்பிட்ட தொகுதிக்கு நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

"பாரதிய ஜனதா கட்சி குஜராத்தில் வெற்றி பெறவில்லை என்றால் உங்கள் வீட்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது" என்ற எண்ணத்தை சாமானிய இந்து மக்களின் மனதில் பரப்பியுள்ளதாக 75 வயதுடைய மதீனா.எம்.மன்சூரி என்னும் மூதாட்டி கூறியுள்ளார். அவர் குஜராத்தில் இது போன்ற பல வன்முறைகளை நடந்திருந்தாலும் 2002-க்குப் பிறகு விஷம் அப்படியே மக்கள் மனதில் தங்கிவிட்டதாக பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.



மூதாட்டி கூறிய இதே கருத்தைத்தான் நந்திதா தாஸ் தான் இயக்கிய " ஃபிராக் (FIRAAQ)" திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்.

அந்தப்படத்தில் தன்னுடைய வீட்டை எரிக்கக் காரணமான இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த தன்னுடைய பக்கத்துக்கு வீட்டுக்கரனைப் பழிவாங்க துப்பாக்கி வாங்கச் செல்லும் இசுலாமிய இளைஞன் தன்னுடைய நண்பர் ஒருவர் வைத்திருந்த பழைய கலை பொருட்கள் விற்கும் கடையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுக்கிறான். அப்போது தன்னோடு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நண்பனின் செயலால் துப்பாக்கியில் இருந்த ஒரு குண்டும் வெடித்துவிடுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டு காவல்துறையினர் அவர்களைச் சூழ்ந்து கொள்வர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடும் அந்த இசுலாமிய இளைஞனை தன்னுடைய வீட்டின் முதல் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பான் ஒரு இந்து. அப்போது அந்த பக்கம் வரும் காவல்துறை அதிகாரி அந்த இந்துவிடம் இங்கு ஒருவன் வந்தானா? என்று விசாரிப்பார். அதற்கு அவன் யார் என்று திருப்பிக் கேட்கும் இந்து ஆணிடம் அவன் ஒரு இசுலாமிய சமூக விரோதி என்று சொல்லிச் செல்வார். சில நொடிகளுக்குப் பிறகு, போலீசிடமிருந்து தப்பி இந்துவின் வீட்டின் கீழ் மூச்சிறைக்க வந்து உட்காரும் இசுலாமிய இளைஞனின் தலையில் ஒரு ஜாடியை போட்டு கொன்றுவிடுவான் அந்த இந்து. இவ்வாறாக, சாமானிய இந்து மக்களின் மனதில் 2002-க்குப் பிறகு விதிக்கப்பட்டுள்ள இசுலாமியருக்கு எதிரான வன்ம நஞ்சைப் பற்றி பேசும் இந்த காட்சி.

இன்று வளர்ச்சி என்னும் அரிதாரத்தைப் பூசிக் கொண்டு, இசுலாமிய மக்களின் வாக்குகளுக்காக தன்னை அனைவருக்கும் ஆனவராக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.



வியட்நாம் போரை நமக்கு நினைவூட்டும் "ஓடி வரும் சிறுமியின் புகைப்படத்திற்கும்", ஈழ இனப்படுகொலையை நினைவூட்டும் "பாலச்சந்திரனின் புகைப்படத்திற்கும்", சற்றும் குறையாத முக்கியத்துவம் உடையது "தன்னுயிரை காத்துக்கொள்ள கையேந்தி நிற்கும் குத்புதின் அன்சாரியின் புகைப்படம்". யாரவது எங்களை காப்பாற்றுங்கள் என்கிற
அந்த பார்வையே குஜராத் வன்முறையின் கோரத்தை இன்னும் பல ஆண்டுகள் கடந்தும் பேசும்.

பெஸ்ட் பேக்கரி வழக்கில், குழந்தைகளும், பெண்களும் எரித்துக் கொல்லப்படும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த "நவீனயுக நீரோ" என்று நரேந்திர மோடியை விமர்சித்தது உச்ச நீதிமன்றம்.ரோம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோவைவிட மோசமானவர்கள் அதைக் கேட்டு கொண்டிருந்த அவரது விருந்தினர்கள்.
வளர்ச்சி என்னும் பிரச்சாரத்திற்காக நரேந்திர மோடியை நாம் ஆதரிப்போமானால், நமக்கும், நீரோ-வின் விருந்தினர்களுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை.
முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் ஒரு பத்திரிக்கை செய்தியில் பின்வருமாறு கூறியிருந்தார், " குஜராத் கலவரத்திற்குப் பிறகு வாஜ்பாய் திறம்பட எதையும் செய்யவில்லை. குஜராத் வன்முறையை ராணுவத்தை அனுப்பியாவது நிறுத்துங்கள் என்று நான் சொன்னதற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகள் செவி மடுக்கவில்லை. நான் மீண்டும் ஜனாதிபதி ஆகவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் விரும்பிய போது, பாரதிய ஜனதா ஆட்சியின் மறைமுகத் திட்டங்களுக்கு நான் குறுக்கே இருந்ததால் அவர்கள் அதை விரும்பவில்லை. அப்போதைய பா.ஜ.க. அரசு அரசு கல்வி துறையில் பல்வேறு மறைமுக மாற்றங்களை கொண்டுவர நினைத்தது. அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்பதற்காகவே அவர்கள் என்னை ஆதரிக்கவில்லை."

இன்று இந்துத்துவ அடிப்படைவாதத்தையும், ராமர் கோவில் பிரச்சனை பற்றியும் பேசாமல் வாக்குகளுக்காக வளர்ச்சி பற்றி பேசும் மோடிக்கு ஆதரவாக பேசுவோரை எண்ணும் போது, நான் அண்மையில் வாசித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது,

" உங்கள் வீட்டின் ஓர் அறை பற்றி எரியும் போது
அடுத்த அறையில் உங்களால் தூங்க முடியுமா?

உங்கள் வீட்டில் ஓர் அறையில் பிணங்கள் அழுகிக்கொண்டிருக்கையில்
அடுத்த அறையில் உங்களால் பிரார்த்தனை செய்ய முடியுமா ?

உங்களால் முடியும் என்றால் உங்களிடம் சொல்வதற்கு
என்னிடம் ஏதுமில்லை...."


- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!

க‌திர‌வ‌ன்
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

பாகம் -1 - http://save-tamils.blogspot.in/2013/09/1.html



புகைப்படங்கள் ரெய்ட்டர்ஸிலிருந்தும், மற்ற வலைதளங்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. நன்றி...

4 comments:

  1. உண்மையை உண்மையாகவே உரைத்திருக்கிறார் தோழர் கதிரவன்.தாமதமான இரண்டாம் பாகம் சரியான நேரத்தில் வந்திருக்கிறது . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ok accepted then what about 1984 sheik murders by congress are they not living being? are they not Indians is Punjab not ur next room ?

    ReplyDelete
  3. @Baskaran...கட்டுரையிலிருந்து..// காங்கிரசு கட்சி மனிதப் புனிதர்களின் கட்சி என்றோ, அங்கு இருப்பவர்கள் மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான்கள் என்றோ நாம் சொல்லவரவில்லை//...மக்கள் என்றும் மாற்றத்தை விரும்பிகிறார்கள், அந்த மாற்றம் காங்கிரசால் எப்படி சாத்தியம் இல்லையோ அதேபோல், பா.ஜ.க-வாலும்,
    மோடியாலும் சாத்தியமில்லை!

    ReplyDelete
  4. @Anto Sir... வாழ்த்துகளுக்கு நன்றி!

    ReplyDelete