Tuesday, October 8, 2013

வெற்றி அல்லது வீரச்சாவு


இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசைக் காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும், எதிர்வரும் நவம்பரில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் அரசாங்க தலைவர்கள் கூட்டம், அங்கு நடைபெறக் கூடாது.காமன்வெல்த் மாநாடு கொழும்பில்தான் நடக்குமென்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன் வைத்து அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு ’இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தின்’ சார்பாக காலவரையற்ற உணவு மறுப்புப் போராட்டத்தில் இருக்கின்றார். ”காலவரையற்ற பட்டினி போராட்டத்தில் ஈடுபடுவதே ஒரு குற்றம் ஆகாது என்று சொல்லி இந்தப் போராட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,நேற்று, பட்டினி போராட்டத்தின் 7 ஆம் நாள் அன்று காலை முதல் வழக்கத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கபப்ட்டிருந்தனர். மதியம் 2 மணி அளவில் அரசு மருத்துவர்கள் குழு வந்து தோழர் தியாகுவைப் பரிசோதித்தது.

தோழர் தியாகுவின் உடல் நிலை சரியாக இருந்த போதும், பொது மக்கள் பார்வையில் இருந்து போராட்டத்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காரணம் சொல்லி நேற்று (07 அக்டோபர்) மதியம் 2.30 மணி அளவில் அவரை அங்கிருந்து இராயப்பேட்டை மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர். அவருக்கு இந்த நிமிடம் வரை எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டிருக்கும் நிலையிலும் தன்னுடைய உணவு மறுப்பு போராட்டத்தைத் தோழர் தியாகு தொடர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று 6 மணி அளவில் இக்கோரிக்கைகளை ஆதரிக்கும் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினோம். அக்கூட்டத்தில், “தோழர் தியாகு உயிரைக் காப்போம். இந்திய அரசே! இலங்கையில் நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!” என்ற முழக்கத்துடன் வருகின்ற 10 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தோழர் தியாகு 8 ஆவது நாளாக உணவு மறுப்பு போராட்டத்தில் இருக்கும் நிலையில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தன்னுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று அங்கீகரித்து இலங்கையில் நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் இந்த நேரத்தில் உறுதியோடு போராடி இந்திய அரசை அடி பணியச் செய்வதன் மூலம் தோழர் தியாகுவின் உயிரைப் பாதுகாத்திட வேண்டும்.

இந்த செய்தியை தங்கள் ஊடகங்களில் வெளியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


சேவ் தமிழ்சு இயக்கத்திற்காக தோழர் தியாகுவின் பிரத்யேக நேர்காணல் காணொளிகள்:






=====================

No comments:

Post a Comment