Friday, August 30, 2013

திரைப்பட இயக்குனர் சேரனுக்கு ஒரு மனந்திறந்த மடல்




தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூக அக்கறையுள்ள கதையைப் படைத்து முற்போக்கு சிந்தனையை சமூகத்தில் வளரத்தெடுக்க முற்படுபவரும், சாதி மதத்தை விட உயர்வானது மனிதனின் உன்னத உணர்வு காதல் என்று காதலின் மேன்மையை தன் ஒவ்வொரு படைப்பிலும் வடித்து இயக்கி நடித்து தமிழ்ச் சமூகத்தில் நீங்கா இடம்பிடித்துள்ள இயக்குநர், நடிகர் சேரனுக்கு கனத்த மனதுடன் எழுதும் மடல் இது...




அன்பு இயக்குநர் சேரன் அவர்களே,

நீங்கள் உங்கள் இளைய மகள் தாமினி மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் தமிழ்நாட்டில் இன்று பல பெண் குழந்தைகளுக்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை... அவ்வளவு பாசத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டீர்கள்... உங்கள் குடும்பப் பிரச்சனை, தாமினி-சந்துரு காதல் விவகாரம் இப்படி ஒரு ஊடக முதன்மை செய்தியாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, நீங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.

நீங்கள் உங்களுடைய முதல் படத்திலேயே ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும், ஆதிக்க சாதி இளம்பெண்ணிற்குமான காதலையும், சமூகத்தில் அதன் தாக்கத்தையும் கதைக்களம் ஆக்கினீர்கள்... "காதல் காதல் காதல், காதல் போயின் சாதல்" என்று பாடிய பெருங்கவிஞரின் கவிக்காதலியை இணைத்து அந்த படத்திற்கு "பாரதி கண்ணம்மா" என்று சூட்டி படைத்தீர்கள்... நாங்கள் காதலின் பின்னால் உள்ள சமூகப் பிரச்சனையைப் புரிந்துகொண்டோம்... கண்டிப்பாக நீங்கள் சாதியினால் காதலை எதிப்பவர் அல்ல...

அதன்பின் "பொற்காலம்" படத்தில் கிராமத்தில் இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலித்தால் அந்த இரு குடும்பத்தில் எத்தகைய பிரச்சனைகள் வரும் என்பதை எங்களுக்கு உணர்த்தியதோடு இறுதியில் பிரச்சனையைத் தீர்க்க முடியாத அந்தக் கதாநாயகன் சமூகத்தின் மீது கொண்ட கோபத்தில், சமூகத்திற்கு பாடம் கற்பிக்க தன் காதலைத் துறந்து, ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணை மணமுடித்ததாகத் திரைக்கதை அமைத்துக் காதலைப் புனிதமாக்கினீர்கள். கண்ணீரோடு காதலையும், சமூகத்தையும் புரிந்து கொண்டு வெளியில் வந்தோம்... அவனுடைய தொழில் அவன் காதலுக்கு எதிரியாக நிற்கவில்லை, எனவே நீங்கள் தொழிலால் காதலுக்கு எதிரியில்லை...

"வெற்றிக்கொடிக்கட்டு", "பாண்டவர் பூமி" படங்களில் கிராமம் சார்ந்த நமதுத் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளான விவசாயத்தை விட்டு நகரம் நோக்கி குடும்பம் குடும்பமாக மக்கள் நகர்வதையும், கிராமத்தில் தொழில் வளர்ச்சி இல்லாததால் வெளிநாடு செல்ல வேண்டும் என்று துடித்து ஏமாறும் சம்பவங்களையும் வைத்து படமாக எடுத்தீர்கள்... ஆனால் இவ்விரு படங்களிலுமே, சாதியை இன்னமும் வாழவைக்கும்-சுயசாதிக்குள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படும் அகமணமுறையை எதிர்த்து காதல் திருமணம் செய்துவைக்க நீங்கள் தவறவில்லை... சில பிற்போக்குவாதிகள் போல, கிராம-நகர பொருளியல் வாழ்க்கை மாற்றம் சமூக-பண்பாட்டு ஒழுங்கை சீர்குலைக்கிறது என்றும், காதல் ஏதோ மேலைநாட்டு இறக்குமதி போலவும் காதல் திருமணங்கள் சமூகத்திற்கு இழுக்கு என்றும் ஒருபோதும் நீங்கள் சொல்லவில்லை...

உங்களை மிக உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் "ஆட்டோகிராப்ஃ", ஏன் என்று நாம் சொல்லி உங்களுக்குத் தெரியத்தேவையில்லை... சிறுவயதில் துய்க்கும் அறியா காதல், பதின்ம வயதில் வரும் இளமைக் காதல், பின்னர் வரும் நட்பு கலந்த காதல்... கிட்டத்தட்ட இதில் வரும் ஒரு காட்சியேனும் கடந்து வராதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சாதி மதம், மொழி, இனத்தையும் கடந்து வந்த காதலும், காதல் தோல்வியுற்றதும் கதாநாயகன் செந்தில் படும் வேதனைகளும், அவன் செல்லும் தவறான வழிகளும் எங்கள் மனதையெல்லாம் கனமடையச் செய்துவிட்டது... கதாநாயகன் செந்தில் இறுதியில் வேறொரு பெண்ணை மணந்தது யதார்த்தம் என்று எங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை, சமூகத்தில்-பெற்றோரிடத்தில் இருக்கும் காதலுக்கெதிரான இறுக்கமான மனநிலையே இதன் காரணம் என்று புரிந்தது...

அது புரிந்துதானோ என்னவோ, உங்களின் அடுத்த படைப்பான "தவமாய் தவமிருந்து" படத்தில் பதின்ம வயதில் வந்த காதலை அத்தோடு முடித்துக்கொள்ளாமல் அதற்கு அடுத்த பருவத்தில் கதாநாயகனோடு அவரின் கல்லூரிக் காதலியோடு அவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சேர்த்துவைத்தீர்கள்... அந்த கதாநாயகன் பதின்ம வயதில் கல்லூரியில் படிக்கும் போது புகைப்பிடிப்பான், மது அருந்துவான், காதலியோடு கலவி கூட செய்வான். அதனால் அவனைத் தவறானவன், காமுகன் என்று சொன்னீர்களா? இணை ஏற்பு நடந்தபின் இருவரும் வெறும் காதலர்களாக இல்லாமல் குடும்பத் தலைவியாக, தலைவனாக மாறும்போது எப்படி பொறுப்போடு வாழ்ந்தார்கள், உழைத்து முன்னேறினார்கள், பெற்றோர்களை-சமூகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தார்கள் என்பதில் தானே உள்ளது அந்த காதலின் வெற்றி இருந்தது, அதைத்தானே உங்கள் படைப்பு சொல்லிற்று... அவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையைத் துவக்க பொருளாதாரமோ, வேலையோ, சமூகத்தின் பார்வையில் உள்ள கெட்டப்பழக்கவழக்கங்களோ தடையாக இல்லையே?

உங்கள் படைப்பிற்கு ஒரு நியாயம், உங்கள் சுய வாழ்க்கைக்கு ஒரு நியாயமா? உங்கள் திரைப்படைப்பில் அந்தக் காதலியின் பெற்றோர் அவளைத் துரத்திச் சென்று வாழ விடாமல், காதலை நிரூபிக்கவிடாமல் தடுக்கவில்லை, ஆனால் காதலிக்கும் உங்கள் மகள் தாமினிக்கு ஒரு பெற்றோராய் நீங்கள் செய்து வருவது என்ன?

உங்கள் மகளின் காதலனான சந்துருவின் மீது நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன? பல பெண்களோடு தொடர்புடையவன் (womanizer), (இரு ஆண்டுகள் நேரம் கொடுத்தும்) நிலையான(?) வேலை எதுவும் தேடாமல் பொருளாதாரத்தில் தற்சார்பு நிலை பெறாதவன்... மொத்தத்தில் பணம் பறிக்கும் நோக்கோடு காதல் புரிபவன்...

பெருமதிப்பிற்குரிய திரு.சேரன் அவர்களே, உங்கள் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் போது, உங்கள் நண்பர், இயக்குநர் அமீர் சொல்வதுபோல நிரூபிக்கும் அளவிற்கு ஆதாரங்கள் இருக்கும்போது இந்த விடயம் ஊடகத்திற்கு வருமுன்னே தண்டனைச் சட்டத்தில் அவரை காவல் நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ இழுத்து அவருக்கு தண்டனையை வாங்கிக்கொடுக்க முயற்சிக்கவே இல்லையா? நியாயமும் பணமும் அதிகாரமும் இருக்கிற உங்களுக்கு ஏன் தண்டனையை வாங்கிக்கொடுக்க முடியவில்லை? ஊடகத்தில் அவரின், சாதாரண எளிய பின்புலம் கொண்ட சந்துருவின் குடும்பத்தினரின் பெயரைக் களங்கம் ஏற்படுத்தும்படி பேசக் காரணம் என்ன? நீங்கள் பேசுவதை மக்கள் நம்பி உங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதாலா? நீங்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும் சந்துருவோடுதான் வாழ விரும்புகிறேன் என்று சொல்லும் தாமினியின் மனதைக் கலைப்பதற்காகவா?

குற்றச்சாட்டு இருந்தால் காவல்நிலையத்தில், நீதிமன்றத்தில் முதலில் முறையிடாமல் ஊடகத்தின் முன்பு சந்துருவையும் அவரது குடும்பத்தாரையும் பற்றி ஏதோ தமிழ்நாட்டின் பெரிய தீயசக்தி(இயக்குநர் அமீர் ஒருபடி மேலே சென்று அரசின் உளவுத்துறை அவரைப்பற்றி விசாரிக்க ஊடகங்களில் சொல்லியிருக்கிறார்... நீங்கள் எழுதிய இந்தத் திரைக்கதையில் நகைச்சுவை பகுதி அதுதான், ஒருவேளை அவர்மேல் குற்றம் நிரூபிக்க உங்களால் முடியவில்லை என்றால் இதே ஊடகங்களைக் கூட்டி மன்னிப்புக் கேட்பீர்களா?) போல பட்டியலிடுவது சந்துரு உங்களைப் போன்று பெரிய இடம் இல்லை அதனால் குடும்பத்தோடு பயந்து ஓடிவிடுவார், தன் பலத்தை மீறி இருவரும் வாழ முடியாது என்று காட்டவா?

உங்களைக் குற்றவாளி என்று சொல்லவில்லை... உங்கள் அன்பு மகள் தாமினிக்கு அவளின் வாழ்க்கை நலமுடன் இருக்க நீங்கள் அறிவுரைகள் கூற முழு உரிமையும் உண்டு... ஆனால் முடிவாக சந்துருவுடன் தான் வாழப் போகிறேன் என்றால் அது தனிமனிதனாக அவரின் சுய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, அதில் தலையிட அப்பாவே ஆனாலும் நீங்கள் தலையிடுவது சரியன்று... நீங்கள் சொல்வது போல இது திரைப்படம் அல்ல, நீங்கள் வில்லனாக மாறி அவர்களைப் பிரித்துவைக்க... ஒருவேளை அவரின் தேர்வு நீங்கள் சொல்வது போலவே தவறாகவே இருந்தாலும், "நான் தான் அப்போதே சொன்னேனே" என்று ஒதுக்காமல் தன் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சமூக சிந்தனை கொண்ட உங்களுக்கு வந்தால் போதும்... பெற்றோரின் ஏற்பாட்டுத் திருமணங்கள் தோல்வியில் முடிந்ததே இல்லையா? அவரின் தேர்வும் தோல்வியடையலாம்... அதனால் காதலே தோற்றது என்றாகாது என்பதும் உங்களுக்கே தெரியும்.

உங்கள் நண்பர்-சமூகப் போராளி-சமரசமற்ற படைப்பாளி அமீர் கூறுகிறார் "சமூக ஆர்வலர்கள் அவசரப்பட்டு தருமபுரியில் (பாமக இராமதாசின் சாதிவெறி அரசியலால்) மாண்ட இளவரசன் - அவரின் காதலி திவ்யா காதல் சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசிவிட வேண்டாம்" என்று... உண்மையில் இதைவைத்து அரசியல் செய்வது காதலை "நாடகக் காதல்" என்று சொல்லி பெண்களின் உரிமைக்கெதிராகவும், அதுவும் குறிப்பாக தலித் இளைஞர்கள் மேல் வருவது தவறு என்று மானுடத்திற்கு, தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக பேசிவரும் சாதி அரசியல் பிழைப்புவாதி இராமதாசு அவர்கள் தான்... இந்தப்போக்கு சமூக வளர்ச்சிக்கு, சமூக மாற்றத்திற்கு எதிராய் எதிர்த்திசையில் செயலாற்றுகிறது என்பது உங்களுக்கு ஒருவேளை இதுவரைப் புரியாமல் இருந்தால் இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்...

"உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தாமினி தனது செயல்களை அலசி ஆராய்ந்து, தான் செய்த தவறுகளை உணர்ந்ததுடன், சந்துரு பற்றிய உண்மைகளையும் புரிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பெற்றோரான எங்களுடன் வருவதென்ற முடிவை அவர் சுயமாக எடுத்து, இன்று எங்களிடம் வந்து சேர்ந்துள்ளார். இது பெற்றோருக்கு கிடைத்த வெற்றி."

பத்து பதினைந்து நாட்கள் இடைவிடாத பாசப்போரட்டத்திற்கு(?) பின் உங்கள் மகளின் காதலை நீதிமன்றம் துணைகொண்டே பிரித்துவைத்துவிட்டீர்கள்... இதைவிட ஒரு தந்தையாக நீங்கள் உங்கள் மகளுக்கு ஒரு தீங்கை செய்ய முடியாது... நீதிம‌ன்ற‌ங்க‌ளும் இது போன்ற‌ வ‌ழ‌க்குக‌ளில் ஒருத‌லைப‌ட்ச‌மாக‌வே செய‌ல்ப‌ட்டு வ‌ருவ‌து நீதி அதிகார‌த்திற்கு ஆத‌ர‌வாக‌ சாய்ந்து விட்ட‌ பிம்ப‌த்தையே ஏற்ப‌டுத்துகின்ற‌து. அதே போல‌ ஊட‌க‌ங்க‌ளின் ந‌டுநிலைமை, அற‌ம் போன்ற‌வையும் இங்கே கேள்விக்குள்ளாக்க‌ப்ப‌ட‌ வேண்டும், ஒரு ம‌ணி நேர‌ம் சேர‌னின் த‌ர‌ப்பை ம‌ட்டுமே ஓளிப‌ர‌ப்பும் இவ‌ர்க‌ளுக்கு, ச‌ந்துருவின் த‌ர‌ப்பை ஒளிப‌ர‌ப்ப‌ ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் ம‌ட்டுமே கிடைக்கின்ற‌து ?????.

வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்.

Tuesday, August 27, 2013

காதல் கசக்குதய்யா


அடக் காதலே நீ படாத பாடும் உண்டா? புண்ணாக்கு விற்கிறவனெல்லாம் தொழிலதிபர் என்னும் பழைய தமிழ்ச் சினிமா காமெடி தான் நினைவுக்கு வருகிறது. கண்டவனெல்லாம் உனக்கு விளக்கம் கொடுப்பதும்; உன்னை வைத்து காசு பார்ப்பதும்; காதல் மன்னன், இளவரசன் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு தமிழ்ச் சமூகத்திற்கு உன்னைக் கற்றுக்கொடுப்பதும், நாராசத்தின் உச்சக்கட்டமல்லாமல் வேறென்ன?

உன்னில் அப்படி என்ன தான் இருக்கிறது? உன்னைக் கண்டு நடுங்குகிற கூட்டம் ஒருபுறம், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோர் மறுபுறம். அப்பப்பா, அடேயப்பா உன்னைத் தவிர்த்துவிட்டு ஒருவனும் இங்கே உயிர் வாழக் கூட முடியாது போலிருக்கிறதே! உன்னைக் கொஞ்சம் தழுவிப்பார்க்க ஆசைப்பட்டேன், வழுக்கிக் கொண்டு உனக்குள் விழுந்துவிட்டேன்.

தெய்வங்களுக்கும், ஜமீன்தார்களுக்கும், பெரிய பணக்காரர்களுக்கும், புரட்சித் தலைவர்களுக்கும் வரும் காதலை மட்டுமே காட்டி வந்த தமிழ் சினிமா, முதல் முறையாக பாரதிராஜாவால் சவரம் செய்பவனுக்கும், சப்பாணிக்கும், தலித் கிறித்தவப் பெண்ணுக்கும் வரும் என்று பற்பல படிகள் மேலேறிப்போனது. அதன் பின் நீ ஏழைப் பாட்டாளிக்கும் சொந்தம் என்றாகி, அவனால் பிழைக்கும் அரிதாரக் கூட்டம் உன்னைச் சந்தைப்படுத்தியது. தங்கள் இஷ்டம் போல் உன்னை வாட்டி வதைத்தது.


தெய்வீகக்காதல், புனிதக்காதல், ஒருவனுக்கு ஒருத்தி அது தான் காதல், காதலுக்குக் கண்ணில்லை, முதல் காதல் என்றுமே மறையாது என்று பற்பல பிதற்றல்கள். அது போதாதென்று இப்போது நாடகக் காதலென்றும் வாஞ்சையோடு அழைக்கப்படுகிறாய். கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன். நீ யார்? உனக்கேன் இவ்வளவு முக்கியத்துவம்?



நாகரிகம் தோன்றும் முன்னமே நீ இருந்திருக்க வேண்டும். நாகரிகமே உன்னைச் சுற்றித்தான் வலம் வந்திருக்க முடியும். ஆமாம், ஆமாம் அது தான் சரி. நீ இல்லாவிடில் இனப்பெருக்கம் தான் ஏது? நீ ஒரு உணர்ச்சி. உன்னைத் தொட்டுப்பார்க்க முடிவதில்லை, உணரத்தான் முடியும். நீ இன்றி இந்த உலகம் தோன்றியிருக்கவோ, இயங்கவோ கூட வாய்ப்பில்லை. அப்போ நீதான் அந்தக் ‘கடவுள்துகளா?’

நீ ஒரு சமத்துவப் பெரியார். ஆரியச் சாதிகளை வேரறுக்கப் போராடிய அண்ணல் அம்பேத்கர். உன்னிடம் கேட்கச் சில கேள்விகளோடு வந்துள்ளேன்.


காதல் – கேள்!

நான் - ‘இன்னாருக்கு இன்னாரென்று எழுதிவைத்தானே தேவன் அன்று’ ...

காதல் – நிறுத்து... நிறுத்து... யார் அந்த கம்மனாட்டி தேவன்?

நான் – நீ என்னை வம்பில் மாட்டிவிடுவாய் போலிருக்கிறதே!

காதல் – அதல்ல மச்சான்!

நான் – அடடே நீ எங்கள் பாஷை கூட பேசுகிறாயே!

காதல் – அடிங்க! நான் என்ன வேற்றுக்கிரகவாசியா? உங்களோடே அல்லும் பகலும் சுற்றித் திரிகிறேன். இதென்ன பிரமாதம், இன்னும் பேசவா கலீஜா?


போதும் போதும் உன்னை எல்லாரும் தெய்வீகக்காதல் என்கிறார்கள். நீ இப்படி.. ?

எப்படி எப்படி? உங்கள் முருகனும் கிருஷ்ணனும் செய்த காதலைப் போலவா?

அய்யய்யோ, உனக்குச் சொந்த ஊர் என்ன ஈரோட்டுப் பக்கமா? இப்படி போட்டுத்தாக்குற?

கேட்க வந்ததைக் கேள்.

உனக்குச் சாதி தெரியுமா?

அப்படினா?


சரி மதமாவது தெரியுமா?

இதென்ன புதுசா இருக்கு?

பணக்காரன், ஏழை?


ம்..ஹும்.. (உதட்டைப் பிதுக்கியவாறே)

இதென்ன, நாங்கள் பேசும் கொலோக்கியல் மொழி தெரிகிறது. சாதியும், மதமும் மட்டும் தெரியவில்லை என்கிறாயே?

உங்கள் கொலோக்கியல் மொழி போல் சாதியையும், மதத்தையும் வெளிப்படையாக வெளியில் நீங்கள் பேசுவதில்லையே. எனக்கெப்படித் தெரியும்?

அது சரி, உனக்கு நாடகக்காதல் என்று ஒருவர் பெயர் வைத்திருக்கிறார், அதுவாவது தெரியுமா?


ம். நல்லாவே தெரியுமே. என்னால் தானே அவருக்கு ஒரு அன்பு மகனும் இருக்கிறார். என்னைத் தானே சொல்கிறார் உனக்கேன் வலிக்கிறது?

அதில்லை. உலகமே புனிதமாக எண்ணிக் கொண்டாடும் உன்னைத் தமிழ்நாட்டில் ஒருவர் இப்படிப் பேசுவதா?.

அடப் பைத்தியக்காரா, என்னைப் புனிதமென்று கொண்டாடுவதும் தவறு, அசிங்கமென்று அவர் தூற்றுவதும் தவறு. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்.



அது... (நான் தலையை சொரிந்து கொண்டே..)

உனக்குப் புரிகிற மாதிரியே சொல்றேன். உன் காதைக் கொடு. நீ சொல்லும் அதே நபரும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்.


(அதிர்ச்சியில் உறைந்து போய்...) என்ன?

ஆமாம். தன் மகனுக்கான பதவியை, பணத்தை! என்று சொல்லிக் கண் சிமிட்டியது.

ஓ, அதா சங்கதி. தமிழ்நாட்டில் வாரிசுகளுக்குச் சொத்து சேர்ப்பதும், பதவி வாங்கித் தருவதும் புதியதல்லவே. அதற்காக உன்னைத் திட்ட வேண்டுமா என்ன?

அட அடி முட்டாளே. அவர் எங்கேயடா என்னைத் திட்டினார்? அவர் பேசுவதைக் கூர்ந்து கேள். அவர் சொல்ல வருவதே வேறு. ‘அந்த’ நபருக்கும், இதோ ‘இந்த’ நபருக்கும் வருகிற காதலைத் தான் சாடுகிறார்.

ஓ, நீ அப்படி வருகிறாயா? இது எல்லோருக்கும் புரிந்துவிட்டால் பிரச்சனையே இல்லையே.

சரி இதுக்கே இப்படி சொல்றியே, நேற்று நான் ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் என்னால் வரும் துன்பங்களைக் கண்ணீர் மல்கக் கசிந்திருக்கிறார் ஒரு இயக்குனர்.

அப்படியா?

படத்தின் பெயர் ‘ஆதலால் காதல் செய்வீர்’.


இதென்ன முரண் நகை. அப்படியென்ன உன்னால் துன்பமாம்?

அதில் வரும் இளம் பெண்ணொருத்தி தன் காதலனோடு இன்புற்றிருக்கிறாளாம்.

சரி. நல்லது தானே?


பொறு. முழுவதும் கேள்

சரி சொல்.

அதற்கடையாளமாக அவள் வயிற்றில் அவர்களது காதல் சின்னமாம்.

அடடே!

ஆம். அதைக் கலைத்துவிட்டு வந்தால் ஏற்றுக் கொள்வதாக ஆண் வீட்டாரும், கலைத்தால் பெண்ணின் உயிருக்கே ஆபத்து என பெண் வீட்டாரும் 80 களின் திரைக்கதையைச் சொல்லி, என்னைச் சந்தி சிரிக்க வைத்து விட்டார்கள்.

ம். அப்புறம்?

இந்தப் பஞ்சாயத்தில் நீ சொன்ன சாதி, சொந்தங்களும் அவரவர் பாணியில் களமிறங்க... இறுதியாக இருவரும் பிரிகிறார்கள். அந்தக் குழந்தையை இனிதே ஈன்றெடுத்து அதை ஒரு ஆஸ்ரமத்தில் விட்டு விடுகிறார்கள். அந்தக் குழந்தை அங்கே வளர்வது, பின்னணிப் பாடலோடு அரங்கத்தையே உச்சுக் கொட்டி அழவைக்கிறது.

அடடா, கேட்கவே பரிதாபமாக இருக்கிறதே. அனாதைகள், சமூகத்தில் இப்படித்தான் உருவாகிறார்களோ!

அட மங்குனி. இதிலென்னடா பரிதாபம். இது அந்த இயக்குனரின் அயோக்கியத்தனம், அடி முட்டாள்த்தனம். தெருவுக்குத் தெரு எய்ட்ஸ் பூச்சாண்டி காட்டி விற்கிறானே ஆணுறை; பிஞ்சிலே பழுத்துப்போன உங்கள் ஊர் சில்வண்டுகளுக்கும் தெரியும் வண்ணம், உங்கள் அரசாங்கம் மைக்செட்டு போட்டு கூவுறானே, இந்த சின்ன விஷயம் கூடவா கசமுசா செய்யும் அந்த இருவருக்கும் தெரியாமல் போனது?

அட ஆமாம். அப்புறமேன் இப்படியாம்?

அங்க தான் ட்விஸ்ட். ‘ஊருக்கு மட்டும் மது ஒழிப்பு, தன் கட்சி மாநாட்டில் மது குடித்து ஒருவருக்கொருவர் மண்டை உடைப்பு’ என விஷ ஊசி போடும் மருத்துவரை திருப்தி செய்வதற்காகக் கூட இருக்கலாம். யார் கண்டது? சேரியில் வாழ்பவன் எல்லாம் கிரிமினல் என்பது போல் காட்டிய முற்போக்குவாதி தானே அந்த அதிமேதாவி இயக்குனர். வேறென்ன எதிர்பார்க்க முடியும் அவரிடம்? தமிழ் சினிமா பிற்போக்குவாதிகளின் பிரச்சாரக் கூடாரமாக மாறி வருவதை, தற்கால சசிகுமார், சுசீந்திரன் போன்றவர்கள் உங்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லை காதலை மறந்து பெரியாரிஸ்ட்(?!) பாலா பாணியில் காசிக்கு ஓடுங்கள்.

நமக்கெதுக்கு ஊர் வம்பு? என்னை ஆளை விடு. சரி, ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்றாங்களே, அதைப்பற்றி உன் கருத்தென்ன?

ஒருவனுக்கொருத்தி, ஊதுடா மெழுகுவர்த்தி. அடப்போடா நீ வேற. என்னை ஏன்டா இப்படி படுத்துறீங்க. பிடிச்சவன்/பிடிச்சவள் கூட பிடிச்ச வரைக்கும் வாழ்ந்துட்டு போங்கடா. இனியாவது திருந்துங்கடா. இல்லன்னா ஒரு இலட்சம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. நான் கிளம்புறேன். எனக்கு சினிமா ஷுட்டிங் இருக்கு’ என்றவாறே காற்றில் பறந்து போனது என் காதல்.

விக்ரமன்
சேவ் தமிழ்சு இயக்கம்

Tuesday, August 20, 2013

இளவரசா!



இளவரசா!




உன் காதலுக்கு

வாழ்த்துப் ‘பா’ பாட நினைத்தேன்

கொடக்காரியம்மன்

குடியிருக்கும் மரத்தடியில்

காதல் வெற்றி பெற

வேண்டிக் கொண்டேன்.

வாழ்த்திப் பாட வார்த்தை கேட்ட

தமிழ்த் தாயிடம்

உன் சாவைப் பாடிட

எப்படியடா வார்த்தை கேட்பது ?




இளவரசா!

வாழ வேண்டியவனடா நீ.


காதல் கதறியழ

கருமேகம் கண்ணீர் சிந்த

பெற்றோரின் பெருந்துயரைப்

பேசுவோரும் பெருந்துயரால்

பேச்சற்று பொங்கியழ

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!

சுட்டிப் பெயர் செல்வா

அகவாழ்வின் நிலவொளியில்

அகம் மகிழ்ந்து

வாழவேண்டியவனடா நீ.

கள்ளிப்பால் மனங் கொண்டோர்.


கன்னிவலை வைத்து

காலனிட உன் உயிரைக்

காட்டிக் கொடுத்து விட்டார்.

நின்ற சொல்லன் நீ

நினைவின் வேர்களிலும்

நீடிக்கும் இனிமையை

நிலைபெற வைத்தவன்.

சந்தன மனமுடையோன்.

என்றென்றும் காதலுக்கு

இலக்கணமாய் நிற்பேனென்று

தெளிவுரை சொல்லி

திருமணம் செய்தவன்.




சாதிவெறியரின் சதி நெருப்பில் - உன்

சந்தன மனம் வெந்ததோ?




இளவரசா ! உன்

சந்தன மனம் வெந்ததோ?


காதல் கதறியழ

கருமேகம் கண்ணீர் சிந்த

பெற்றோரின் பெருந்துயரைப்

பேசுவோரும் பெருந்துயரால்

பேச்சற்று பொங்கியழ

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!




’காதலை’

நாடென்றால் வாழவைக்கும்

மொழியென்றால் வாழ்த்துப் பாடும்

மக்களென்றால் வாழ்த்துவார்கள்

என்றெண்ணி இருந்தாயோ?

மூன்றும் முடமாகி


முச்சந்தி தெருமுனையில்


முனகலுடன் நிற்கிறதே

என்றேங்கி நீ நிற்க.

எங்கிருந்து எமன் வந்தான்?




சாதிவெறியரின் பாசக்கயிற்றில்

எமனும் வீழ்ந்தானோ?


நீதி கெட்ட எமனுக்கு

நீதி சொல்வது யாரடா?

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!

முத்தமிழின் திருமகனே

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!


இந்தியாவின் அரசியல் சட்டம்

ஒருவருக்கு ஒரு ஓட்டு என்கிறது.


சாதிவெறிக் குள்ளநரி

உன் சாவில்

வெற்றி ஓட்டினைத் தேடுகின்றது.

வஞ்சனையற்றக் கவிஞன்

சாபமிட்டால்

வரலாற்றில் நடக்குமடா!




சாதிவெறி மனம்படைத்த

சாக்கடையன் பரம்பரை

காதலற்றுப் போகட்டும்.

செயற்கை முயற்சிகளும்

செயலற்றுப் போகட்டும்.

பிணம் காட்டி ஓட்டுக் கேட்போர்

பிணம் திண்ணும் கழுகுகளும்



தீண்டாத பிணமாகி

தெருவெங்கும் நாறட்டும்.

நாதியற்றப் பிணமென்று

நகராட்சி எரிக்கட்டும்.




இளவரசா!

உன் நினைவேந்தி நிற்கையிலே

சாக்கடையர் மனங்களிலும்

‘காதல்மலர்’ மலரட்டும்

என்றன்றோ நினைவலைகள்

எழுகிறது ஓயாமல்.

பிணங்காட்டி கொடியேற்ற

நினைப்போரும்

குணங்கொண்ட மனிதர்களாய்

மாறட்டும் என்றன்றோ - உன்

மனித மனம் பாடுகிறது.




வஞ்சனை அழியாமல்

வஞ்சகர் திருந்தாமல்

சமரசம் என்பதில்லை.

தலித் சாதியின் போராட்டம்

இந்தியாவின் ஏழைகள் போராட்டம்.

ஏழைகள் சாதிகளாய்

இருக்கின்ற வரையில்

எத்தர்கள் பிழைப்பார்கள்.

எழுதிடும் வரலாற்றில்

என் மகன் எங்கே?

என் மகன் எங்கே?


என்றழும் பெற்றோருக்கு

என்னடா சொல்வது?





காதல் கதறியழ

கருமேகம் கண்ணீர் சிந்த

பெற்றோரின் பெருந்துயரைப்

பேசுவோரும் பெருந்துயரால்

பேச்சற்று பொங்கியழ

மூச்சற்றுக் கிடக்கின்றாயே!




உன்னை ஏந்துகின்றோம் - உன்

உணர்வுகளை ஏந்துகின்றோம்.

எங்கள் எண்ணங்களில்

இளம் நெருப்பாய் ஏந்துகின்றோம்.

பொங்கி வரும் கண்ணீர்

பூமிதனில் வீழாமல்

போர்க்களத்தின் வீரமாய்


போராட மாற்றுகின்றோம்.

சாகாத நினைவாக

சரித்திரத்தில் நிலைத்து விட்டாய்.

நீ சாகவில்லை...

உன் மூச்சுக் காற்று

காற்றில் கலந்து

எங்கெங்கும் போர்க்குரலாய்

எதிரொலிக்கின்றது.




சாதி எதிர்ப்புப் போராட்டத்தில்

திசை காட்டும் தீப்பிழம்பாய்

திக்கெட்டும் நிற்கின்றாய்.

என் மகன் எங்கே?

என் மகன் எங்கே?


என்றேங்கும் பெற்றோரே...

திக்கெட்டும் உங்கள் மகன்

தீப்பிழம்பாய் நிற்கின்றான்.




சாதிவெறி எரிந்து

சாம்பலாய் போகும்வரை

தீப்பிழம்பாய் சுழன்றிடுவான்

தீதறியா உங்கள் மகன்.




- இறைமுதல்வன்

Monday, August 19, 2013

மக்களின் போராட்டக்களங்கள் நான்கு! இலக்கு ஒன்றே!!



தமிழகத்தில் சமூக, அரசியல் தளங்களில் மக்கள் உரிமைகளுக்கான பல்வேறு போராட்டங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தீவிரமாக நடந்து வந்திருக்கின்றன.பொருளாதார அடிப்படையிலான ஏகாதிபத்தியம் கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க நடைபெறும் போராட்டங்களான சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்புப் போராட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பதை எதிர்க்கும் போராட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்க்கும் போராட்டம் மற்றும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடந்து கொண்டிருக்கும் போராட்டம் என அரசுகளின் உதவியோடு தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களை எதிர்த்து பாதிக்கப்படும் மக்கள் போராடி வருகின்றனர். இந்தத் திட்டங்கள் அனைத்துமே இந்திய அரசின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு தமிழக மக்கள் மீது திணிக்கப்படுபவையே. இவ்வாறு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அடக்குமுறையை ஏவிக் கொண்டு வரப்படும் இந்தத் திட்டங்களால் மக்களுக்கு இம்மியளவும் பயனில்லை மாறாக தமிழக மக்களின் வாழ்வாதராத்தை அழித்தொழிப்பதே இத்திட்டங்களிடையிலான ஒற்றுமை.



சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது நம்முடைய அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் சந்தையை வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடுவது ஆகும். உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரத்தையும், தொழிலையும் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது இத்திட்டம். உற்பத்தியாளர்களுக்கும் , நுகர்வோருக்கும் இடையே உள்ள இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்பதே இத்திட்டத்திற்கு சொல்லப்படும் காரணம்.ஆனால், இத்திட்டத்தினால் முதலில் பாதிக்கப்படப்போவது நம்முடைய வீடுகளுக்கு காய்கறிகளை சுமந்து வந்து விற்கும் அடித்தட்டுப் பெண்களும், நமக்கு கொசுறுக்கு கருவேப்பிலைத் தரும் சிறு வணிகர்களும்தான். இத்தோடு நுகர்வுப் பொருட்களின் விலைவாசி குறையும் என்றொரு பிம்பம் அதிகாரவர்க்கத்தால் இத்திட்டத்திற்கு ஆதரவாக கட்டமைக்கப்படுகிறது ஆனால், லாபவெறி கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் சந்தையை கைப்பற்றச் சொல்லும் கட்டுக்கதையே இது. உதாரணமாக, வால்மார்ட் நிறுவனம் இந்த திட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றுவதற்காக தோராயமாக 100 கோடி ரூபாயை கையூட்டாக கொடுத்துள்ளது.நுகர்வோருக்கு குறைவான விலை கொடுப்பதாகக் கூறி தங்களது விற்பனையை வட்டத்தைப் பெருக்கிக் கொள்வதும் பிற்பாடு தங்களது லாபவெறிக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதும் நடக்கும். உற்பத்தியாளர்களையும், விவசாயிகளையும் பொறுத்த வரை அவர்களுக்கான சரியான விலை கொடுக்காமல், அவர்களது உற்பத்திமுறையையே மாற்றவும் நிர்பந்திக்கப்படுவார்கள்.





1990-க்குப் பிறகு நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி என்பது வேலையில்லாத வளர்ச்சி என்று அரசாங்க புள்ளிவிபரங்களே தெரிவிக்கும் நிலையில், இந்தத் திட்டத்தினால் வேலை வாய்ப்பு உருவாகும் என்பது ஒரு கானல்நீர். மாறாக சிறு, குறு வணிகர்களின் தொழில்களை நசுக்கி அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும். இந்திய அளவில் 4.4 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பும், 2 லட்சம் கோடி ரூபாய் அளவு விற்பனை உள்ள சந்தையை தன் சொந்த மக்களிடம் இருந்து பிடுங்கி சில பெருமுதலாளிகளுக்கு கையளிக்கும் திட்டம்தான் இது. "பணம் மரத்தில் காய்க்காது" என்று நாம் எவருமே அறிந்திராத பொருளாதாரக் கோட்பாட்டை உதிர்த்தார் பொருளாதார மேதையும்,இந்தியப் பிரதமருமான மன்மோகன் சிங். உண்மைதான்! நம் மரங்களைப் நம்மிடமிருந்து பிடுங்கி அதன் கனிகளையும், அதனை விற்பனை செய்து லாபமீட்டும் உரிமையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் இந்தத் திட்டத்தை நாம் அனுமதிக்கவே கூடாது.இதற்கான எதிர்ப்பு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்தும்,பொருளாதார மேதைகளிடம் இருந்தும்,சாமானிய மக்களிடம் இருந்து எழுந்துக் கொண்டிருப்பதை அரசுகள் சிறிதும் சட்டை செய்யவே இல்லை.



தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்கு எரிவாயுவை எடுத்துச் செல்வதற்காக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் 138 கிராமங்களில் விவசாய நிலங்களினூடே குழாய் பதிக்கும் பணிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறித் தொடங்கப்பட்டன . இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் போராடி வரும் விவசாய மக்களின் மீது திருப்பூர், சென்னிமலை, ஊத்துக்குளி, ஈரோடு போன்ற இடங்களில் காவல்துறை மற்றும் தமிழக வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியோடு கெயில் நிறுவன அதிகாரிகள் நிலகையகப்படுதலை வலுக்கட்டாயமாக திணிக்க முற்பட்டபோதுதான் விவசாயிகளின் போராட்டங்கள் வலுப்பெற்றது. எரிவாயுக் குழாய்களை விவசாய நிலங்களில் பதிப்பதன் மூலம் நிலங்கள் துண்டாடப்பட்டு விவசாயத்திற்கு பயனற்றதாக மாறுவதுடன், குழாய் பதிக்கும் வழிகளில் உள்ள நீராதாரங்களும், தென்னை மற்றும் மாந்தோப்புகளும் பாதிக்கப்படும். விவசாய நிலங்களின் வழியே குழாய்களை பதிக்காமல் நெடுஞ்சாலை ஓரங்களில் பதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,நெடுஞ்சாலை ஓரங்களில் பதிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதி மறுக்கும் என்று கூறுகிறது கெயில் நிர்வாகம். அப்படியானால் தனியாருக்கு எரிவாயு எடுத்துச் செல்ல கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு நெடுஞ்சாலைத் துறை அனுமதி வேண்டி நிற்கும் இவர்கள் விவசாய மக்களின் நிலங்களை மட்டும் பறித்துக் கொள்வது என்பது தமிழகத்தின் மேற்கு மண்டலப் பகுதிகளில் விவசாயத்திற்குத் தோண்டப்படும் சவக்குழியே.



நம்முடைய நாட்டில் எந்த ஒரு பிரச்சினையும் எதிர்க்க மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்ட வடிவம் "பட்டினிப் போராட்டமே" ஆனால் உண்ண உணவிருந்தால்தானே நீங்கள் போராடுவீர்கள், இதோ தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்பாசன படுகையைச் சீரழித்து பட்டினிச் சாவுகளை நோக்கி நம்மையும், நம் வருங்காலச் சந்ததியினரையும் தள்ளும் திட்டமாகவே இந்த மீத்தேன் எடுக்கும் திட்டம் உள்ளது. புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, சிறிமுஷ்ணம், ஜெயம்கொண்டம், சோழபுரம் வழியாக காவிரிப்படுகையில் மன்னார்குடியின் தெற்குப்பகுதிவரை பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் என்கிற எரிவாயுவும் உள்ளதாக கண்டறியப்பட்டு, அதனை எடுக்கும் பணி கிரேட்ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் என்ற நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முதல்கட்டப் பணியாக திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை உருவாக்கி மீத்தேன் வாயுவை எடுக்க வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. இவ்வாறு மீத்தேன் வாயுவை உறிஞ்சி எடுப்பதன் மூலம் நிலத்தடியில் இருந்து வெளிவரும் மாசடைந்த நீரானது விவசாய நிலங்களையும், ஆறுகள் மற்றும் ஓடைகளையும் நாசப்படுத்துவதுடன், நிலத்தடியில் உருவாகும் வெற்றிடத்திற்குள் கடல் நீர் புகுந்து நிலங்களை விவசாயத்திற்குப் பயனற்றதாக மாற்றிவிடும். இந்தத் உயிர்க்கொல்லி திட்டத்தினால் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 1,65,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படையும். விவசாயத்தை நம்பி வாழும் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும். தமிழகத்தின் நாளைய தலைமுறை ஒரு வேலை உணவிற்கு கையேந்தும் நிலை வரும். ஒட்டுமொத்தத் தமிழக மக்களையும் பஞ்சத்தில் தள்ளக்கூடிய இந்தத் திட்டத்தை எதிர்த்து காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் போராடி வருகின்றனர்.




இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு விதமான அரச அடக்குமுறைகளையும்,மக்கள் விரோதப் போக்கையும் எதிர்த்து, இனி வரும் காலத்தில் இந்தியாவின் எந்தப் பகுதியில் அணு உலைத் தொடங்கப்பட்டாலும் மக்களின் கேள்விகளுக்கு அரசும், இந்திய அணுசக்தி கழகமும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இன்றைய சூழலில் போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், அணு உலை வெற்றிகரமாக இயங்கி வருவதாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது அரசும் அணு உலை நிர்வாகமும்.ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு பெரும்பாலான உலக நாடுகள் அணு சக்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தியாவில் மட்டும் பல்வேறு இடங்களில் அணு உலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.இதுவரை இந்தியாவில் செயல்பட்டு வரும் அணு உலைகள் வெறும் 2 விழுக்காடு மின்தேவையையே உற்பத்தி செய்கின்றன. ஆனால், நம்முடைய மின்சாரத் தேவைகளுக்கான தீர்வு அணு உலை மின்சாரத்தில்தான் உள்ளது போன்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்சாரமும், அணு உலை திட்டமும் ஏகாதிபத்திய முதல் உலக நாடுகளின் தோல்வியடைந்த தொழில்நுட்பங்களை இந்திய மக்களின் மீது திணித்து அணுக்கழிவுக்கான குப்பைத்தொட்டியாக நாட்டை மாற்றவே இந்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.



கூடங்குளம் அணு உலைக்குத் தேவையான பாகங்களை தயாரித்த ரஷ்ய நிறுவனம் தரமற்ற இரும்பைப் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டிருப்பது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் அணு உலையை ஏதோ பொம்மையை போன்று சித்தரித்து வருகிறது அரசு. அணுக்கழிவை பாதுகாப்பதற்கான தெளிவான வழிமுறைகள் கொண்ட தொழில்நுட்பம் இன்றுவரை இறுதி செய்யப்படவில்லை. கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரை அதன் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட கழிவுகளைப் பாதுகாக்கும் இடத்தைக்கூட அரசோ, அணு உலை நிர்வாகமோ முடிவு செய்யாமல் உள்ளனர். இவற்றைப் பற்றிக் கேள்வி எழுப்பும் மக்கள் மீதுதான் அடக்குமுறைகளை ஏவிவிட்டு, தேசத்துரோகிகள் என்று குற்றம் சுமத்துகிறது அரசு. நமக்காகவும், நம் வருங்கால சந்ததிக்காகவும் போராடும் மக்கள் தேசத்துரோகிகள் என்றால், நாம் இந்த அரசையும், அதிகார வர்க்கத்தையும் என்னவென்று விளிப்பது?



இந்த நான்கு மக்கள் திரள் போராட்டங்களும் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காவுகேட்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் அரசின் செயல்திட்டங்களை எதிர்த்தே நடைபெறுகின்றன. ஆனால், ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏதுவாக உள்ள இந்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் அந்தந்த பகுதி மக்களுக்கான பிரச்சனைகளாக மட்டுமே அடையாளம் பெற்றுள்ளன. இப்படி மக்களின் சக்தி பிரிந்து நிற்பதைத்தான் அரசும், அதிகாரவர்க்கமும் விரும்புகிறது. "எங்கெங்கு காணினும் சக்தியடா !!!" என்றான் பாரதி, அனைத்து வகை அதிகாரங்களின் குவிமையமாக உள்ள அரசுகளை எதிர்த்துப் போராடும் போது, மக்களாகிய நாமும் ஒரு புள்ளியில் இணைந்து நம்முடைய வாழ்வாதார பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். இந்தப் போராட்டங்களை ஆதரிக்கும் அனைத்து சனநாயக அமைப்புகளும், மக்கள் உரிமை செயற்ப்பாட்டாளர்களும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். தலைமுறைகள் தாண்டி நம் சமூகத்தைப் பிடித்து ஆட்டும் சாதி அரக்கனைப் போன்றே நாம் மேற்கண்ட நான்கு பிரச்சனைகளும் நம்மை மட்டுமின்றி வருங்கால சந்ததியினரையும் பாதிக்கும்.


தமிழக மக்களாகிய நாம் இதுபோன்ற மக்கள் விரோதத் திட்டங்களை நம்மீது திணிக்கும் அரசையும், அதிகாரவர்க்கத்தையும் எதிர்த்து ஒன்றுபட்டு போராட வேண்டிய தருணம். நம் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஏகாதிபத்திய நலன் சார்ந்த பொருளாதார கொள்கைகள் என்கிற தளத்தில் இப்போராட்டக் களங்களை இணைத்து விரிவுப்படுத்தினால் வெற்றி நமதே!!!


" தமிழக மக்களே ஒன்றுபடுவோம் !!! தமிழக நலன் காத்திடுவோம் !!! "

Tuesday, August 6, 2013

ஆகஸ்டு 6 - அணுசக்தி எதிர்ப்பு தினம்



இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல உடனடியாக செத்து மடிந்தனர். ஹிரோஷிமா நகரமே தரை மட்டமானது. ஹிரோஷிமா குண்டு வீச்சைத் தொடர்ந்து தொடர்ந்து பல ஆண்டுகள் அணுக்கதிர் வீச்சின் கோர முகத்தால் பல லட்சம் மக்கள் புற்றுநோயினாலும் இன்னும் பல கொடிய தோல் வியாதிகளினாலும் மரணித்தனர்.



சமகாலத்தில் வல்லரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் பெரியண்ணன் நாடுகளனைத்தும் இடுப்பிலே அணுகுண்டைக் கட்டிக் கொண்டு பேட்டை ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பை விட அதிகமாகிப் போன யுரேனியத்தை விற்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தை அவர்களுக்கு தேவையாயிருக்கிறது. அணுக்கொள்முதல்,அணு வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெருமுதலாளிகள் லாபம் சம்பாதிக்கவும் அதற்கு உறுதுணையாக‌ அடிவருடி உதவவும் ஒரு அதிகார வர்க்கமே காத்திருக்கிறது. கிடைத்த‌ எலும்புத் துண்டுகளுக்கு ராஜ விசுவாசமாக‌ நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் போல அணு உலைகளை நிறுவி அம்முதலாளிகளுக்கு காணிக்கையாக்க திட்டமிடுகின்றது அரசு இயந்திரம். அணுகுண்டுகள் அணு உலைகளாக வேடமணிந்து திரண்டெழுந்து மேடையேறுகின்றன.






ஹிரோஷிமா நாகசாகியின் நினைவுகளை இன்றைய தலைமுறை மறந்திருந்தால் மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டுதல் சமூக மனிதர்களின் கடமையாயிருக்கிறது. அணுகுண்டும் அணு உலையும் வெடித்தால் ஒன்றே என்ற உண்மையை செர்னோபிலும் ஃபுகுஷிமாவும் ஏற்கனவே தலையில் அடித்து சத்தியம் செய்து விட்டன. உலகெங்கும் அணு உலைகளுக்கெதிரான கருத்தியல் தோன்ற ஆரம்பித்து விட்டது.அணுசக்தியை முற்றிலுமாக கைவிட பல நாடுகள் உறுதி மேற்கொண்டு விட்டன. ஜப்பானில் அணு உலைகளை மூட அரசு உத்தரவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடுகின்றனர். சூரிய ஒளியையும் காற்றையும் நம்பி மின்சாரம் தயாரிக்க பெருமளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வெற்றியும் கிட்டுகிறது. இந்திய அரசின் சிற்றறிவுக் கிட்டங்கி மட்டும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது ஒரு சமுதாயத்தை பலியிட்டு இன்னொரு சமுதாயத்தை வாழ வைக்க தலைப்படுகிறது.






அதற்காகத் தான் களமிறங்கினோம். மக்களிடம் பேச நினைத்தோம். ஆகஸ்டு 5, 6 சென்னையின் வெவ்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்குண்டு கிடக்கும் எந்திர மனிதர்களுக்கு அணுசக்தியின் தீங்குகளைச் சொல்வோமென்று உறுதி பூண்டோம்.





ஆகஸ்டு 5 ஞாயிற்றுக்கிழமை மாலை தாம்பரம் ரயில் நிலையம், கேம்ப் ரோடு, மேடவாக்கம் பகுதிகளில் சேவ் தமிழ்சின் 11 தோழர்களும், வேளச்சேரி பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 தோழர்களுமாக மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டன.ஹிரோஷிமா நினைவு தினமான ஆகஸ்டு 6 காலை மாலை இருவேளைகளிலும் இருகுழுக்களாக பிரிந்து களப்பணியில் இறங்கினோம். தகவல் தொழில் நுட்ப மையமான டைடல் பூங்காவில் 8 தோழர்களும், சோழிங்க நல்லூர் நாற்கர சந்திப்பில் 6 தோழர்களுமாகச் சென்று மக்களைச் சந்தித்தோம்.


மாத முதல் ஞாயிற்றுக்கிழமை.சம்பள வாரம்.பிரம்மச்சர்ய ஐ.டி ஊழியர்களின் தலைமையகமான வேளச்சேரி நடையும் கையுமாகவே இருந்தது.வார இறுதியின் உச்சகட்ட பரபரப்பில் சிலர் துண்டறிக்கைகளை வாங்கி ஆர்வமுடன் பார்த்தனர்.சற்றே இளைப்பாறிக் களைத்த சில முகங்கள் நம்மை அலட்சியப்படுத்திக் கடந்தன. மெட்ரோ ர‌யில் ப‌ணிக்காக‌வும் க‌ட்ட‌ட‌ வேலைக‌ளுக்காக‌வும் உழைத்து உழைத்து உருக்குலைந்து போன‌ வ‌ட‌ மாநிலத் தொழிலாள‌ர்க‌ள், தாமாகவே முன்வந்து அந்த துண்டறிக்கைகளைப் பெற்றனர். சில கலாமிஸ்ட்டுகள் தாம் வாங்கிய மஞ்சள் சிட்டை ராக்கெட்டாக்கி சேற்றில் விட்டு தம்மை ஒரு ப்ரோ நியூக்ளியராக பறை சாற்றினர். அணுகுண்டு வீச்சிலும் அணு உலை வெடிப்பிலும் நிராதரவாகிப் போன பச்சிளம் குழந்தைகளை, எண்ணிப்பார்க்கவோ அதைப்பற்றி பேசவோ யாரேனும் வருவார்களா என்ற‌ காத்திருப்பு நம் தோழர்களின் கண்களில் நிரந்தரமாக குடியிருந்தது. வெவ்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த தோழர்கள் அனைவரும் இரவு 7.30 மணிக்கு மேல் வேளச்சேரியில் ஒன்றிணைந்தோம். அடுத்த நாள் பரப்புரைகளுக்கான‌ திட்டமிடுதல்கள், விவாதங்கள், தேநீர் என சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்டு பிறகு கலைந்தது.








புதிய வியூகமும் புதிய மனநிலையுமாக புத்துணர்ச்சியுடன் மறுநாள் திங்கள் காலை,டைடல் பூங்காவிலும் சோழிங்க நல்லூர் பிரதான சிக்னல் அருகிலும் இரு வெவ்வேறு குழுக்களாக‌ முகாமிட்டோம். ஷாப்பிங் மால்கள், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச், பில்லா2 என வார இறுதியில் கிறங்கிக் கிடக்கும் ஐ.டி நடுத்தரவர்க்கத்தை, பேருந்துகளும் பறக்கும் ரயில்களும் திங்கட் கிழமை காலை மொத்தமாக வந்து ராஜிவ் காந்தி சாலையில் கொட்டுகின்றன‌. அவசரமாக விரையும் அந்த வேக மனிதர்களை இரண்டு நொடிகள் நிறுத்தி வைப்பதற்கு பிரத்யேக முகமூடிகளும் வித்தியாசமான பதாகைகளும் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை மாலையை போல் வெறுமை சூழாமல், பலர் தாமாகவே முன்வந்து துண்டறிக்கைகளை வாங்கி கொண்டனர்.பள்ளி செல்லும் குழந்தைகள் பதாகைகளை விட ஸ்கீரீம் முகமூடிகளை ஆர்வத்தோடு பார்த்தனர். திருவான்மியூர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. டைடல் சிக்னல் அருகே கவன ஈர்ப்பு மிகுதியாக இருந்தது. நமது தோழர் ஒருவர் அணு வெடிப்பால் மரணித்ததைப் போல சாலையில் படுத்து நடித்தது நல்ல கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தது.வழக்கம் போல ஹிரோஷிமா பற்றியோ அணு உலைகளைப் பற்றியோ யாரும் பேச முன்வரவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான்.








முதலாளித்துவ அரசுகள் கட்டமைத்த அணு எதிர்ப்பு போராட்டங்களுக்கெதிரான பொதுபுத்தி, ஊடங்களின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் என முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்ட ஒரு பொருளை ஊதி ஊதி மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் சிரத்தை நம் அனைவருக்கும் இருக்கிறது. அந்நெருப்புக்கான சிறு பொறிகளைத் தூண்டுவே இத்தகைய முகாம்களின் நோக்கமாக நாம் கருத வேண்டியிருக்கிறது. அணுசக்தி என்பது மனித சமுதாயத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வினை. அவ்வினையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு கூட்டத்தை தெளிய வைக்க வேண்டிய அவசியம் இங்கிருந்து தான் தொடங்குகிறது.

















( சென்ற ஆண்டு ஆகஸ்டு 6 மற்றும் 9 ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவின் நினைவு தினத்திற்காக எழுதிய பதிவு )

அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

**********************






Sunday, August 4, 2013

மதிப்பிழந்த பிரதமரின் விரும்பத்தகாத தமிழக வருகை





ஆகஸ்ட் 2, 2013 அன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஒரு மின் நிலைய பைப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்துவைக்க வரும் பிரதமர் வருகையை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்க்கிறது. தனது அரசு தமிழக மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் செய்கிறது என்ற தோற்றத்தை உருவாக்க அரசின் கடைசி நிமிடத்தில், தேர்தலுக்கு முன்பு நடத்தும் நாடகம்தான் இது.

விசேடமாக நேரம் ஒதுக்கி 350 கோடி ரூபாய் திட்டத்தைத் தொடங்கி வைக்க வரும் பிரதமர், பதினெட்டாயிரம் கோடி ரூபாய் செலவிலான கூடங்குளம் அணுமின் திட்டத்தை திறக்கவோ, அல்லது வந்து பார்க்கவோ விரும்பாததன் மர்மம் என்ன என்று கூடங்குளம் பகுதி மக்களும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் வியக்கிறோம். ஊழல் மிகுந்த, தரமற்ற பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ள இந்த கூடங்குளம் அணுமின் திட்டம், உலக நாடுகள் பலவற்றோடு அணுமின் ஒப்பந்தங்கள் செய்துகொண்ட பிரதமரின் விருப்பத் திட்டம்.

ஆபத்தான, கதிர்வீச்சு மிகுந்த வல்லரசு இந்தியாவை உருவாக்க முயலும் பிரதமர் கூடங்குளத்துக்கு வந்து அணுஉலையப் பார்த்து செல்வதுதானே முறை? இந்தத் திட்டம் தரமானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறது என்று இங்கே வந்து மக்களிடம் சொல்லி ஆறுதல்படுத்திச் செல்லலாமே? அவருடைய ரஷ்ய, அமெரிக்க, பிரான்சு நாட்டு எஜமானர்களின் திட்டங்கள் நிறைவேற கூடங்குளம் திட்டம் வந்தாக வேண்டும் என்று விரும்பும் பிரதமர் இந்தியாவிலேயே மிகப் பெரிய, நீண்டகாலமாகக் கட்டப்படும் இந்த கூடங்குளம் அணுஉலையை வந்துப் பார்க்க விரும்பாதது ஏன்? அவர் ஏன் வர மறுக்கிறார்? ஏன் பயப்படுகிறார்? கூடங்குளம் திட்டத்தில் நடந்திருக்கும் ஊழல்களுக்கும், மோசடிகளுக்கும், தரமற்ற பொருட்களுக்கும் தான் பொறுப்பேற்க வேண்டிவரும் என்று அஞ்சுகிறாரோ? இது தர‌ம‌ற்ற, பாதுகாப்ப‌ற்ற‌ அணு உலை என்று நினைப்ப‌து தான் கார‌ண‌மோ? அவ‌ருடைய‌ ச‌காக்க‌ள் தொட‌ர்ந்து சொல்லிக் கொண்டிருப்ப‌து போல‌, கூட‌ங்குள‌ம் அணு உலை ச‌ரியாக‌ ஓட‌வில்லையோ? இது ஒரு ம‌க்க‌ளுக்கான‌ அணுச‌க்தித் திட்ட‌ம் என்றால், ஏன் இத்த‌னை இர‌க‌சிய‌மும், மூடி ம‌றைப்பும் நட‌க்கிற‌து கூட‌ங்குள‌த்தில்?

அவரது அரசியல் வாழ்வில் எந்தப் பதவிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத‌ பிரதமர், மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், அவற்றுக்கு மதிப்பளிக்காமல் நடக்கிறார். உண்மையிலேயே இந்திய, தமிழக மக்களுக்கு உண்மையானவராக இவர் இருந்தால், அணுசக்தி அமைச்சர் என்ற முறையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தல ஆய்வறிக்கை, பாதுகாப்பு ஆய்வறிக்கை, 2008 ஆம் ஆண்டு
ரஷ்யாவோடு செய்து கொண்ட இழப்பீடு ஒப்பந்தம் போன்ற தகவல்களை உடனடியாக மக்களுக்குத் தர வேண்டும்.


தில்லியிலுள்ள மத்திய தகவல் ஆணையம் மேற்கண்ட அறிக்கைகளை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்ப்பு சொல்லியிருக்கிறது. திட்ட பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தங்கள் இழப்பீடு பற்றி அறிந்துகொள்வதற்கு முழு உரிமை பெற்றவர்கள். ஆனாலும், மன்மோகன் சிங் அரசு இந்தத் தகவல்களை மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லையென்றால், மிக மிக முக்கியமான,

நாட்டு மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் உயிருக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாத தகவல்களை மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டு மறைக்கிறது, ஒளித்து வைக்கிறது என்றுதான் பொருள். இந்தியப் பிரதமரும், அணுசக்தித் துறை அமைச்சருமான மன்மோகன் சிங் காதை செவிடாக்கும் தனது மவுனத்தைக் கலைத்து உடனடியாகப் பேசவேண்டும். தமிழக மக்களை அச்சுறுத்தும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, காவிரிப் பிரச்சினை, கெய்ல் பைப்லைன், மீதேன் திட்டம், நியூட்ரினோ திட்டம், ஈழத் தமிழர் இனப்படுகொலை போன்றவற்றில், தமிழின விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திரு. மன்மோகன் சிங்கும், அவரது அரசும், காங்கிரசு கட்சியும் கூடங்குளம் விபரீதங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிவரும்.

மக்களின் மதிப்பிழந்த பிரதமரின் விரும்பத்தகாத தமிழக வருகையை கோடிக் கணக்கான தமிழ் மக்களோடு இணைந்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்க்கிறது. நாளை (ஆகஸ்ட் 2, 2013) அன்று இடிந்தகரையில் கருப்பு தினம் அனுசரிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்.

போராட்டக் குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்