Tuesday, July 30, 2013

பெண் இயங்கியலின் மீதான வன்முறையே ஆணாதிக்கம்



பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சமூகக் கட்டுப்பாடுகள், உளவியல் பாதிப்புகள் மற்றும் சட்ட உரிமைகள் - பற்றிய அரங்கக் கூட்டம் சேவ் தமிழ்சு இயக்கத்தின் பெண் உறுப்பினர்களால் ஒருங்கிணைக்கப் பட்டு, கடந்த வாரம் சனிக்கிழமை, சென்னை தியாகராய நகரில் நடந்து முடிந்தது. கூட்டத்தின் தொடக்கமாக, ”உங்களுள் ஒருத்தி” என்ற ஆவணப்படம் திரையிடப் பட்டது. அப்படத்தின் இயக்குனரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான தோழர் ரேவதியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.


தோழர் பரிமளா :

சேவ் தமிழ்சு இயக்கத்தின் தோற்றம் பற்றிய அறிமுக உரையுடன் தொடங்கிய தோழர் பரிமளா, பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான களச் செயல்பாடுகளில் சேவ் தமிழ்சு இயக்கத்தின் பங்கிணை குறிப்பிட்டார். சில மாதங்களுக்கு முன்பு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னை சோலிங்க நல்லூரில் ஒருங்கிணைக்கப் பட்ட மனித சங்கிலி பற்றி நினைவு கூர்ந்தார். பெண்கள் வேலைக்கு போகிறார்கள்.ஆணுக்கு நிகராக எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்னுமா பெண்ணுரிமை பற்றி பேச வேண்டும் என்ற பொதுபுத்தியில் உறைந்திருக்கும் ஒரு தவறான கருத்தியல் பற்றி பேசும் போது, திருப்பூர் போன்ற நகரங்களில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பெண்களை படிக்க வைத்து, சுமங்கலி திட்டத்தில் கொத்தடிமைகளாகவும், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களின் நிலை பற்றியும் குறிப்பிட்டார். நவீன துறைகளான தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் கூட இந்த பாலின பாகுபாடு அதிகமாக இருக்கிறது. மேலும் ஒரு பெண் தன் மீது நிகழ்த்தப் படும் பாலியல் வன்கொடுமை பற்றி பொது வெளியில் சொல்ல முடியாதவளாகவே இன்னும் இருக்கிறாள். அப்படியே அவள் தனக்கு இழைக்கப் பட்ட கொடுமை பற்றி பேசும் போது,ஆணாதிக்க சமூகம் எத்தகையதொரு உளவியல் தாக்குதலை அவள் மீது தொடுக்கிறது ? மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட மற்ற அனைத்து தொடர் நிகழ்வுகளும் ஆணாதிக்க சமூகத்தின் துணையோடு தான் நடக்கிறது. ஒருமுறை ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, பல்வேறு இன்னல்களைத் தாண்டி நீதித்துறையை அணுகும் போது, மீண்டும் பலமுறை அவளை சொற்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்குகிறது இச்சமூகம்.



நடைமுறையில் இருக்கும் நீதித்துறை வழிமுறைகளில், தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கான நீதியைப் பெற, ஒரு பெண் என்பதனாலேயே பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படியான சூழலில் ஒரு பெண் வெளியில் உண்மைகளைச் சொல்வதற்கே முடியாத நிலை தான் எஞ்சுகிறது. மேலும் தனது உடல் ரீதியான விஷயங்களைக் கூட அவள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் சூழலும் இங்கு இருக்கிறது. மாதவிடாய் ஏற்பட்டாலோ, சிறுநீர் கழிக்க வேண்டுமென்றாலும் கூட, நவீன அலுவலக‌ங்களில் கூட தன் உடன் பணி புரியும் ஆண் நண்பர்களிடமோ, மேலாளரிடமோ கூட சொல்ல முடியாமல் தவிக்கிறாள் பெண்.


அண்மையில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் சென்னைக்கு வரும் பேருந்தில் இரண்டு ஆண்களால் சீண்டப் பட்ட போது, அவர் எதிர்த்து போராடிய நிகழ்வையும், அதனால் அவர் எதிர்கொண்ட வசவுகளையும் பற்றி குறிப்பிட்டார். பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு நிகழும் கொடுமைகளை எதிர்த்து, மற்ற பெண்களும் குரல் கொடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அத்தகையதொரு சமூக மாற்றத்தையும் வளர்ச்சியையும் சேவ் தமிழ்சு இயக்கம் விரும்புகிறது. அதன் தொடர் முயற்சியாகத் தான் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக தனது தொடக்க உரையை பதிவு செய்த தோழர் பரிமளா, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பேராசிரியையும், பெண்ணிய செயற்பாட்டாளருமான தோழர் அ.மங்கையை பேச அழைத்தார்.


தோழர் அ.மங்கை :

திரையிடப்பட்ட ஆவணப்படம் ஆற்றாமையையும் கோபத்தையும் துயரத்தையும் தனக்குள் ஏற்படுத்தியதாக தெரிவித்தார் தோழர் மங்கை, தந்தைமை ஆதிக்க உணர்வுப் பற்றி தனது கருத்துகளை பதிவு செய்தார். அவரின் உரையில் இருந்த சில முக்கிய கருத்துகளை மட்டும் இங்கே தருகிறோம்.


தந்தைமை ஆதிக்க உணர்வு சிக்கல்களில் முதன்மையானதாக, ஒரு பெண் ஆணிலை நோக்கோடு ( Male Gaze) பார்க்கப் படுவதே. உதாரணமாக, ஒரு பெண் ஒரு உடையை தேர்ந்தெடுக்கும் போது கூட, ஆண்கள் இதை எப்படி பார்ப்பார்கள், எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தான் முதலில் சிந்திக்கிறாள். ஒரு பெண்ணுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நிகழும் போது, அவள் ஏன் அந்த மாதிரியான உடையை உடுத்தினாள் அதனால் தான் அப்படி நடந்தது? என்ற கேள்விகள் வரும் போது நாமும் நியாயந்தானே என்று கடந்து செல்கிறோம்.


நகரத்தின் மையத்தில் இருக்கக் கூடிய ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் கூட, மாணவிகள் இரவு தாமதமாகும் கல்லூரி விழாக்களுக்கு தனது சகோதரர் அல்லது தந்தை துணையோடு தான் வருகின்றனர். இதற்கு காரணம் ஒரு பெண் பாதுக்காக்கப் பட வேண்டியவள் என்ற கருத்தியல் தான். ”ஒரு பெண் பாதுகாக்கப் பட வேண்டியவள்” என்ற கருத்தியல் இருக்கும் வரை, பெண் விடுதலை சாத்தியமில்லை.

காதலனாக இருப்பவர்கள் கூட பெண்களிடன் வரதட்சணை கேட்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பதே, அவளை முழுமையாக்குகிறது ( complete women) என்று தான் எல்லா பெற்றோர்களும் நினைக்கின்றனர்.அதனால் நிச்சயம் ஆன பெண்ணை, மூளைச் சலவை செய்து, அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல், பாதுக்காக்கப் பட வேண்டிய பொருளாக மறைத்து வைக்கிறது இச்சமூகம். சமூக நியதி என்பது, ஒரு பெண்ணின் புனிதத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.பெண்ணின் புனிதத்தில் தான் அவர்களின் குடும்ப அஸ்திவாரமே இருக்கிறது. திருவள்ளுவரின் பெய்யென பெய்யும் மழை திருக்குறள் இதே கருத்தை வலியுறுத்துவதையும் குறிப்பிட்டார் தோழர் மங்கை.



சமூக மாற்றம் (Social Mobility) நிகழ்ந்து, பெண்கள் வேலைக்கு போய் ஒரு இயங்கியல் உருவானாலும் கூட, கட்டப்பட்ட மூக்கணாங்கயிற்றின் நீளம் அதிகரித்திருக்கிறதே தவிர, அது வெட்டப்படவில்லை. பெண்ணின் புனிதத்தின் மீது கட்டப்பட்ட சாதியத்திலிருந்து தான், “எங்கள் பெண்ணை அந்நிய ஆண்கள் தொடுவதை அனுமதிக்க மாட்டோம்” என்ற ஆணாதிக்க பேச்சுகள் வெளி வருகின்றன.

ஆவணப் படத்தில் இருந்த ரீட்டா மேரி துவண்டு போயிருந்த நிலையில், அவரோடு போராட ஒரு பெண்கள் இயக்கமே நட்பாக இருந்த நிலைமை, ஏன் இளவரசனுக்கும், திவ்யாவுக்கும் கிடைக்க வில்லை? பெண்கள் தமக்கான சட்ட உரிமைகளைப் பெற ஒரு பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது. குடும்ப வன்முறை பற்றி நாம் என்ன புரிந்து வைத்திருக்கிறோம்? பக்கத்து வீட்டில் அதிக சத்தம் கேட்டாலும், குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம் நாம் புகார் கொடுக்கலாம் என்ற சட்டத் திருத்தமும் இருக்கிறது.


இறுக்கமான சாதிய கட்டமைப்புகளை நிலை நிறுத்துவதற்கு, பெண்ணின் புனிதம் தேவைப்படுகிறது. தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும் ஒரு பெண் தான், தான் பெண்மையோடு இருப்பதாக நம்புகிறாள். உதாரணமாக, ஒரு பெட்டியை என்னால் தூக்க முடியாது. காரணம் நான் பெண் என்று தன்னையே கட்டுப் படுத்திக் கொள்ளும் பெண் தான், தன் பெண்மையை நம்புவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் முற்போக்கு வட்டாரங்களிலேயே ஆணாதிக்கம் என்பது இலை மறை காயாக மறைந்திருக்கிறது. “நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்டு தோழர். ஆனா நீங்க அப்படி கத்தியிருக்கக் கூடாது” என்று சமயங்களில் தங்கள ஆணாதிக்கத்தை வெளிப்படும் முற்போக்கு வாதிகளும் இருக்கின்றனர். ஆக எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது, பரஸ்பர மரியாதை கொடுப்பதிலிருந்து தான் கிடைக்க முடியும் என்று தனது கருத்துகளை பதிவு செய்தார் தோழர் அ.மங்கை.


உளவியல் மருத்துவர் தோழர் ருத்ரன்:

பெண்கள் தெய்வமாக இருந்தாலும் கூட அப் பெண் தெய்வங்களுக்கு ஆண் துணை தேவைப் படுகிறது என்பதை சித்தரிக்கும் மாமல்லபுர துர்கை சிலையை பற்றி குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார் ருத்ரன். ஆகவே ஒரு பெண் எத்தனை துறைகளில் முன்னேற்றமடைந்தாலும், ஆண் தன் பார்வையில் தனக்கு கீழ் தான் பெண் என்று நினைக்கிறான். தற்போதுள்ள சமூகத்தில் திரைப்படம் சார்ந்த அறிவு தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.பொறுக்கித்தனம் தான் இங்கு ஹீரோயிசமாக போற்றப் படுகிறது.


மேலும் சில உளவியல் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் தோழர் ருத்ரன். தனக்கெதிராக ஒரு கொடுமை நடக்கும் போது மனித மனம் அதை எப்படி எதிர்கொள்கிறது. ஒன்று பின்வாங்குகிறது அல்லது மோதிப்பார்க்க தலைப்படுகிறது. பின்வாங்கும் மனம் தாம் எங்கே தோற்றுப் போய் அவமானப் படுத்தப் படுவோமோ என்று பயந்து, பின்வாங்குகிறது. மோதிப் பார்க்க நினைக்கும் மனம், அச்சவாலை ஏற்றுக் கொண்டு, சம்பந்தப் பட்டவரோடு வாக்கு வாதத்திலோ, எதிர்த்து போராடுவதிலோ இறங்குகிறது.

பெண்கள் தமக்கு எதிராக ஒருவர் மோசமாக நடந்து கொள்ளும் போது, சற்றே பின்வாங்கி, நிலைமையை ஊகித்து , அடுத்த அடியை எடுத்து வைத்தலே சிறந்த வழிமுறை. எடுத்துக்காட்டாக, அலுவலகத்தில் ஒருவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் போது முதன் முறையே கடுமையாக எதிர்க்காமல், அவனது அடுத்தடுத்த செய்கைகளை அவதானித்தலும், தன்னிடம் மட்டுமே இப்படி நடந்து கொள்கிறானா அல்லது எல்லோரிடமும் இப்படி நடந்து கொள்கிறானா? என்று கணக்கிட்டு மோதுதல்.

அலுவலங்களில் எப்படியான ஒடுக்குமுறைகளை ஒரு மேலாளர் தன்னை எதிர்க்கும் ஒரு பெண்ணிடம் காட்டுவார் ? திறனாய்வில் குறைவான மதிப்பெண்களைத் தருதல், பதவி உயர்வை மறுத்தல், அணிச் சந்திப்புகளின் போது தனிமைப்படுத்துதல், அல்லது கூட்டத்தில் அப்பெண்ணைப் பற்றி தவறாக பேசி, நல்லெண்ணத்தை சிதைக்க முற்படுதல் ( Image carnation )


பாலியல் வன்முறையால் பாதிக்கப் பட்ட பெண்களிடம் இருக்கும் மாற்றங்கள் எப்படி இருக்கும் ? காரணமின்றி நிறைய விடுப்புகள் எடுத்தல், பணித்திறன் குறைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்லுதல், உடன் பணிபுரிவோருடன் தேநீர் அருந்தவோ, மதிய உணவு சாப்பிடச் செல்லவோ மறுத்தல், தனிமையில் அழுதல்,தான் அடிக்கடி விரும்பிச் செய்யும் செயல்களின் மீது நாட்டமின்றி இருத்தல். மனச்சோர்வு (Depression) அடைந்த பெண்ணிடம் காணப்படும் மாற்றங்கள் குறித்து அவர் பேசும் போது, தூக்கமின்மை, கவனக் குறைவு, நாட்டமின்மை, தனது உடலழகின் மீது ஆடைகளின் மீதோ அதிக கவனமின்றி இருத்தல், சாப்பாட்டின் அளவு குறைதல், இறுதியில் அந்த மனச்சோர்வே அவரை மரணம் வரை இழுத்துச் செல்லும் ஆகவே பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப் பட்ட எந்த ஒரு பெண்ணும் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாய மனநிலை இருக்கிறது என்று தோழர் ருத்ரன் தனது உரையில் குறிப்பிட்டார்.



தோழர் ரேவதி:

திரையிடப்பட்ட “உங்களில் ஒருத்தி” ஆவணப் பட இயக்குனரான தோழர் ரேவதி, மருத்துவர் ருத்ரன் கேட்ட கேள்விக்கான ஒரு விடையை தனது உரையில் தெரிவித்தார். அதாவது ஒவ்வொரு பெரு நிறுவனங்களிலும் “பாலியல் வன்கொடுமைக்கான புகார் அமைப்பு” ( Sexual harassment Complaiane Cell ) எனும் ஒரு அமைப்பு, பிரத்யேகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை விசாரிக்க அமைக்கப் பட வேண்டும் என்ற விகாஷ் கமிஷனின் பரிந்துரை பற்றி குறிப்பிட்டார்.


பாலியல் வன்கொடுமைகளை வெளியே சொல்வதற்கு அப்பெண் மட்டுமின்றி, அப்பெண்ணின் குடும்பத்தாரே வெளியில் சொல்ல தயங்கும் சூழலில் தான் இச்சமூகம் இருக்கிறது. இந்நிலைமைகளை மாற்றத் தான், மகளிர் காவல் நிலையங்களும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு பெண் வரவேற்பாளரும் அமைக்கப் பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் 2013ல் ஏற்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத் திருத்தங்களைப் பற்றியும் பேசினார் தோழர் ரேவதி.


2013 ஆம் ஆண்டுக்கு முன் இருந்த சட்டங்களில், இருவிரல் சோதனை ( Two finger Test ) எத்தனை அபத்தமானது என்றும், கன்னித்திரை சேதமடைந்திருந்தாலோ, ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் இரு விரல்களையும் நுழைக்க முடிந்தாலோ அப்பெண் ஏற்கெனவே பலமுறை உறவு கொண்டவள் என்ற அபத்தமான தீர்ப்புகள் வரலாற்றில் பிறப்பிக்கப் பட்டிருக்கின்றன என்று கூறினார். ஒரு பெண் அதிகமான உடலுழைப்பில் ஈடுபடும் போதும், அப்பெண் ஒரு தடகள வீராங்கனையாகவோ அல்லது விளையாட்டு வீராங்கனையாகவோ, அதிக சூட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணாகவோ இருப்பின் விரைவில் அவளது கன்னித் திரை கிழிய வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் ஒரு சாதாரண சவ்வின் மாற்றங்களை வைத்து பெண்ணின் பாலியல் உறவுகளை கேள்விக்குள்ளாக்குதல் எத்தகையதொரு ஆணாதிக்க சமூகத்தின் முட்டாள்தனமாக இருக்கும்?ஆகவே பாலியல் வன்முறை என்பது பெண் இருத்தலியன் மீது, பெண் இயங்கியலின் மீது ஏற்படும் ஆதிக்கமே என்று தனது அழுத்தமான கருத்துகளை பதிவு செய்தார் தோழர் ரேவதி.


உடல் நல குறைபாடுகளால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத வழக்கறிஞர் தோழர் அஜிதா, எழுத்து மூலமாக தனதுசட்டக் குறிப்புகளை நம்முடையே பகிர்ந்து கொண்டிருந்தார். பெண்களுக்கு எதிராக‌ இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை சட்டங்களையும் அதன் முக்கிய குறிப்புகளையும் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் மேரி வாசித்தார்.

இடம்: தியாகராய நகர் வெங்கடேசுவரா மண்டபம், சென்னை
நாள்: 20 யூலை 2013



அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்


=========

No comments:

Post a Comment