Tuesday, May 21, 2013

போதைக்கு மதுபானக்கடை, தண்ணீர் தாகத்துக்கு?





மதுபான கடைகளைத் தானே ஏற்று வெற்றிகரமாக நடத்தும் தமிழக அரசு, மக்கள் தங்களின் குடிநீர் பிரச்சினைகளை தாங்களே பார்த்து கொள்ளட்டும் என விட்டு விட்டது. சிறு நகரங்களுக்கும் , கிராமங்களுக்கும் கூட கேன்களில் அடைக்கப்பட்ட குடி நீர் விற்பனை வந்து விட்டது.

ஆற்று மணல் முறையற்று அடியோடு அள்ளப்பட்டது, ஏரிகளும், ஓடைகளும் அதிகாரம் உள்ளவர்களால் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டது, போதாக்குறைக்கு வழிகாட்ட வேண்டிய அரசாங்கமே கடந்த 40 ஆண்டு காலமாக‌ நீர் சேகரிக்க பயன்படும் ஏரிகளிலும், குளங்களிலும் புதியதாக அமைக்கும் பேருந்து நிலையம், நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் என அமைத்து நீர் நிலைகளை ஆக்கிரமித்து வருவது என உள்ளுக்குள் தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட, மறுபுறம் அண்டை மாநிலங்ககளான கர்நாடக, கேரளா, ஆந்திர என மூன்றுமே தமிழகத்திற்கு வரும் முக்கிய நதிகளில் அணைகளை கட்டி தமிழகத்தின் நீர்பங்கைத் தர மறுக்கின்றன.

இவையெல்லாம் போதாது என்று 90 களுக்கு பிறகு அறிமுகபடுத்தபட்ட உலகமயமாக்கல் மூலம் புகுந்துள்ள தனியார் பெரு நிறுவனங்கள் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி ஆறுகளை கழிவு நீர் வெளியேறும் சாக்கடைகளாக மாற்றிவிட்டன, எஞ்சிய நிலத்தடி நீரையும் உறிஞ்சி எடுக்கும் நிறுவனங்கள் அவற்றை விற்பனை பொருட்களாக மாற்றிவிட்டன.






இப்படி அனைத்து வழிகளிலும் முறையற்று தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் சுரண்டப்பட, நீர் மட்டம் ஆண்டு தோறும் கீழே இறங்கி கொண்டே போகின்றது , கிடைக்கும் நீரும் குளோரைடு, புளோரைடு போன்றவை அதிக அளவில் கலந்திருப்பதால் குடிக்க உகந்ததாய் இல்லாமல் மக்கள் குடிநீருக்கு திண்டாடுகின்றனர், மறுபுறம் வெளிநாட்டு பெருநிறுவனங்கள் இங்கிருந்து நீர் எடுத்து சுத்தபடுத்தி நமக்கே அதிக விலையில் விற்கின்றன.


இன்றைக்கு விற்கும் விலையில் கால்நடைகளுக்கு தீவனம், புண்ணாக்கு என வாங்கி போட்டு நாளெல்லாம் தனது உழைப்பை செலவு செய்து விவசாயி கொண்டு வரும் பாலை லிட்டர் 26 ரூபாய் என விலை வைத்து கொள்முதல் செய்கிறது அரசு. விவசாயிகள் விலை கட்டுபடியாகவில்லை என போராடினால், பால் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை என விலையை ஏற்ற மறுக்கிறது அரசு, மறு புறம் குடிக்கும் தண்ணீரை தனியார் நிறுவனங்கள் லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பதை கேள்வி கேட்பதில்லை.


தங்கள் பங்குக்கு மணலையும், குடிக்கும் நீரையும் அரசியல்வாதிகள் தங்களின் ஏக போக விற்பனை சொத்தாக்கி கொண்டதினால் தமிழன் குடிக்கும் நீர் அவனின் கையை விட்டு போய்கொண்டு இருக்கிறது, பொது குழாய்களில் வரும் நீர் குடிக்க கூடாததாகி, முடியாததாகி, யாரோ? எப்படியோ? எங்கேயோ நீரை எடுத்து, எந்தவித விதி முறைகளையும் பின்பற்றி சுத்தம் செய்யாமல், கேன்களில் அடைத்து வரும் நீரை குடித்து வாழ வேண்டிய நிலைக்கு நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை எந்த விதத்திலும் கேள்வி கேட்காமல் முறைபடுத்தாமல் விட்டு விட்ட அரசு எந்திரங்கள், இன்று ஒப்புக்காக இந்த கேன் தண்ணீர் நிறுவனங்களின் சுத்திகரிப்பு பற்றி கேள்வி கேட்டு 130 நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியவுடன், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தண்ணீர் விநியோகிக்கும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் விநியோகத்தை நிறுத்தி விட்டன. மேலும் தமிழகம் முழுக்க உள்ள தண்ணீர் நிறுவனங்களும் சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்களை மிரட்டுகின்றன.



வழக்கம் போல அரசை எதிர்த்து கேள்வி கேட்காமல் தண்ணீர் எப்படி இருந்தாலும் பிரச்சினையில்லை, விலையும் ஒரு பொருட்டள்ள, தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர் . இதுதான் தருணம் என 25 ரூபாய்க்கு விற்ற கேன் தண்ணீரை 120 ,150 என விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர் தனியார் தண்ணீர் நிறுவனங்கள்.

வரும் மே 27 ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தனியார் குடிநீர் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை கொடுக்க உள்ளன அதற்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்று விடலாம் என கேன் தண்ணீர் விநியோகிக்கும் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன, ஒருவேளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எதிர்ப்பான உத்தரவு வரும் பட்சத்தில் கேன் தண்ணீர் நிறுவனங்களின் போராட்டம் தீவிரம் அடையாளம்.

இயற்கையாக நிலவும் இந்த தண்ணீர் பஞ்சத்தில் கேன் நிறுவனங்கள் செயற்கையாக உருவாக்கும் குடிநீர் பஞ்சத்தையும் சேர்த்து பொது மக்கள் அனுபவிக்க வேண்டி இருக்கும்.
அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயம் வரைமுறைகளை கடுமையாக்கும் பட்சத்தில் அதையே காரணம் காட்டி, கேன் தண்ணீர் விற்கும் நிறுவனங்கள் விலையை உயர்த்த கூடும். எப்படி இருந்தாலும் பொது மக்கள் பாதிக்க பட போவது நிச்சயம்.



இப்போதே இப்படி தங்களுக்குள் கூட்டணி அமைத்து கொண்டு மக்களை குடிநீருக்கு அலையவிட்டு கொள்ளை லாபம் பார்க்கின்றன கேன் தண்ணீர் நிறுவனங்கள். இந்த லட்சணத்தில் “தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012' ல் மத்திய அரசானது மாநில அரசுகளை தண்ணீர் விநியோகிக்கும் உரிமையை தனியாரிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி கொள்ள வேண்டும் என கோருகிறது.



அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவாசியமான, பொதுவான தண்ணீரை தனியாரிடம் கொடுத்து விட்டு, விலை கொடுத்து விவசாயத்திற்கும், மக்கள் பயன்பாட்டிற்கும் வாங்கும் செயல் திட்டத்தை நோக்கி செல்கிறது மன்மோகன் அரசு. இப்பொழுதே நாம் குடிநீருக்கு இந்த பாடுபடுகிறோம் என்றால் நீர் நிர்வாகம் முழுவதும் தனியார் கைக்கு சென்றால் எப்படி இருக்கும்?

ஆனால் மத்திய அரசுடன் எப்பொழுதும் மோதும் ஜெயலலிதா அரசு இதுபோன்ற மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தனியாரின் கைகளுக்கு செல்வதை கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. ஓட்டுக்காக இலவசமாக அரிசி, 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாப்பாடு என கொடுப்பதில்தான் ஜெயலலிதாவோ ஆர்வமாக இருக்கிறார், இதைக் காட்டிலும் தனியார் பிடியில் இருந்து குடி தண்ணீரை பறித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கொடுப்பது முக்கியம் என ஜெயலலிதா உணரவில்லை.

தனியார்மயம் தனது கோரமுகத்தை காட்டிய இன்றைய நாளிலாவது, பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொண்டு, அரசு பாதுகாப்பான குடிநீரை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து பொது மக்கள் போராட வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் குடிக்கும் நீருக்கும், விவசாயத்திற்கும் தனியார் முதலாளிகளின் தயவை எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.



வெ. தனஞ்செயன்
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

பின் குறிப்பு: அடிப்படை தேவையான குடிநீரை நாம் எப்படி விலைகொடுத்து வாங்க பழகினோம் என எளிமையாக விளக்குகின்றது இக்குறும்படம்.


http://www.youtube.com/watch?v=Se12y9hSOM0


1 comment:

  1. ஏற்கெனவே டாடா முதல் உள்ளூர் அண்ணாச்சி வரை கேன்களில் குடிநீரை அடைத்து விற்குமளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

    இன்னும் சில காலங்களில் குடிநீரின் விலை கோக் பெப்சியை விட அதிகமானாலும் ஆச்சரியமில்லை.

    முதலாளித்துவமோநமஹா....தனியார்மயமோஸ்வாஹா...

    ============

    அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரை. வாழ்த்துக்கள் தோழர் தனஞ்செயன்.

    குறும்படமும் சிறப்பு...

    ReplyDelete