Tuesday, May 14, 2013

தொலைந்து போன‌ ஜ‌ன‌நாய‌க‌மும், தேய்ந்து போன‌ பெஞ்சுக‌ளும்






ஒரு குறிப்பிட்ட மன்னனிடமோ,நிலப்பிரபுவிடமோ அல்லது அவர் தம் குடும்பத்தினரிடமோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனக்குழுக்களிடமோ தேங்கியிருக்கும் அரசியல் அதிகாரம், இறைமை ஆகியவை முழுமையாக‌ மக்கள் கைக்கு இடமாற்றம் செய்யப்படும் போது தான் ஜனநாயகம் பிறப்பெடுக்கிறது.எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், மக்கள் கைக்கு மாற்றப்படும் அதிகாரமே ஜனநாயகம்.அது மக்களின் சுய நிர்ணய உரிமையையும் சுய மதிப்பையும் அதிகாரத்தையும் கோருகிறது.அரசியல் அதிகாரம் என்பது சாமான்ய மக்களுக்குரியது.மக்களே நாயகர்கள்.உலகின் பல்வேறு நாடுகளில் மன்னராட்சியையும் சர்வாதிகார ஆட்சியமைப்புகளையும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசியெறிந்து,மக்களாட்சியான ஜனநாயகத்தை நிறுவியதும் பெருந்திரளான மக்கள் சக்தியே.ஆகவே ஆட்சியமைப்பிலும் சரி,அல்லது எத்துணை உயர்ந்த லட்சியமாக இருந்தாலும் சரி. தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடமே இருக்க வேண்டும்.



ஒரு தனிமனிதனோ, இனமோ, குழுவோ எதேச்சதிகாரமாக முடிவுகளை தீர்மானிக்கவும் அதை மக்களின் விருப்பமும் பொருத்தமும் இல்லாமல் அம்மக்களின் மீது திணிக்கவும் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.சுருங்கக் கூற வேண்டுமானால்,அரசியலில் மக்களின் பங்களிப்பு இல்லையென்றால் அங்கு ஜனநாயகத்திற்கு இடமில்லை.பல நாடுகளில் மன்னராட்சியை தூக்கியெறிந்து மக்களே ஜனநாயகத்தை நிறுவினார்கள்.ஆனால் இந்தியாவில் மன்னராட்சிக்கு முடிவுரை எழுதியது ஆங்கிலேயர்களே.அவர்கள் தமது சுயலாபத்திற்காகவும் நிர்வாக நலன்களுக்காகவும் ஜனநாயக அரசை நிறுவ
எத்தனித்தார்கள்.வேத கால பெருமையுடைய இந்தியாவை அந்நியர் ஆள்வதா என கொதித்தெழுந்து,போராடி ஆங்கிலேயரை விரட்டியடித்த இந்திய மக்களின் மனதில், மன்னர்கள் தான் இன்னும் வரலாற்று நாயககளாகவே நீடிக்கின்றனர்.மார்க்ஸ் சொன்ன அந்த காப்பிய மனநிலையில் தான் இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் இன்னும் இருக்கின்றனர். அநீதிகளிலிருந்தும் ஊழல்களிலிருந்தும் தங்களைக் காப்பாற்ற ஒரு அவதார புருஷர் அவர்களுக்கு எப்போதும் தேவையாக இருக்கிறார்.அந்த அவதார புருஷர் சினிமாக்களில் ஒற்றை ஆளாக நின்று ரவுடிகளை பின்னியெடுத்து நாயகியைக்
காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோவாக பரிணமிக்கிறார் அல்லது இடுப்பில் கத்தியைச் சொருகி கொண்டு வர்மக்கலைக் கற்று, லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரியை ஆட்காட்டி விரலில் பதம் பார்க்கிறார். இன்னொரு ஹீரோவானவர் கடைசி பந்தில் சிக்சர் அடிப்பவராக இருத்தல் அவசியம்.இப்படியான கதாநாயக வழிபாடு,ஒரு வீழ்படிவாக நடுத்தரவர்க்க மனதில் தங்கியிருக்கிறது. இந்த கதாநாயகர்களுக்கு முன் மக்கள் பலவீனமானவர்கள்.சக்தியற்றவர்கள்.ஒரு மாபெரும் அரசை எதிர்த்து நாம் கேள்வி கேட்க முடியுமா? உடனே தூக்கி உள்ளே வைத்து விடமாட்டார்களா? அவர்களிடம் தான் இராணுவமும் போலிசும் இருக்கிறதே? அரசு சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.என்னய்யா ஜனநாயக நாடு இது? என நொந்து ஒரு கேள்வியை உதிர்த்தால் இதைச் சொல்லக் கூட உனக்கு உரிமை இருக்கிறதே..? இந்த ஜனநாயகமும் சுதந்திரமும் போதாதா என்று மறுபடியும் முதலிலிருந்து வருவார்கள்.

தமிழக மண்ணில், சாமான்ய மக்களை அரசியல் சக்தியாக உருமாற்றி மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்படுத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு காலந்தொட்டே ஒரு வரலாற்றுப் பங்கு இருக்கிறது.பெரியாரிலிருந்து அண்ணா வரையிலான அந்த‌ வரலாற்றுத் தொடரை சற்றே உள்வாங்கினால் ஒரு ஜனநாயக சுழற்சி உருக்கொண்டதை உணர முடியும்.1960-களில் "சாமான்யர்களின் யுகம்" என்ற அறைகூவலின் மூலம் அண்ணா பெருந்திரளான தமிழக மக்களை அச்சுழற்சிக்குள் இழுத்து விட்டார்.இப்படியான திராவிட அரசியல் பாரம்பரியம் கொண்ட தமிழக மண்ணை இன்று வரை இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆண்டு வருகின்றன.இவ்விரண்டு கட்சிகளில் அதிமுக‌விற்கு தொட‌க்க‌ம் முத‌லே கொள்கை என்ற வஸ்து அறிமுகம் இல்லை. திமுக‌வின் கொள்கை அரசியல் என்பது இன்று தேர்தல் அரசியலாக சுருங்கி விட்டது. வாரிசு அரசியல், நிரந்தர பொதுச் செயலாளர் போன்ற ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் நேர் எதிரான ஒரு அரசியல் போக்கு, சர்வ சாதாரணமாக புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

மக்கள் விரோத,ஜனநாயகத்துக்கு எதிரான இவ்வரசியல் போக்கில்,மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய செயல்பாடு.ஏனெனில்,சாமான்ய‌ மக்களின் அரசியல் பங்களிப்பில்,ஜனநாயக செயல்பாடுகளில்,
தேவையான ம‌க்க‌ள் பிர‌ச்சினைக‌ளை பேசுவ‌தில், விவாதிப்ப‌தில்,தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்றுவ‌தில்,ச‌ட்ட‌ங்கள் இய‌ற்றுவ‌தில் ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌திநிதிக‌ளைக் கொண்டிய‌ங்கும் ச‌ட்ட‌ம‌ன்றத்தின் பங்கு அளப்பரியது. இத்தகைய பொறுப்புகளை உணர்ந்து தான் இன்றைய ஆளும் கட்சியும் மற்ற மக்கள் பிரதிநிதிகளும் தமிழக சட்டமன்றத்தை நடத்துகின்றனரா? சிறிதளவேனும் மக்கள் பிரச்சினைகள் அலசப் படுகின்றனவா? காகிதத்தையும், பேனாவையும் கொடுத்து 'ஜனநாயகம்' என்ற சொல்லுக்கு வரையறை, விளக்கம் எழுதச் சொன்னால், இன்று எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு சரியாக விடையளிப்பார்கள்? குறிப்பாக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எத்தனை முறை "அம்மா" என்ற சொல்லைப் பயன்படுத்தி விடையளிப்பார்கள்?



முன்பெல்லாம் சட்டசபை கூடும் நாட்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்யும் நிகழ்வுகள் வழக்கமான செய்திகளாக இருக்கும்.ஆனால் இன்றைய அ.தி.மு.க ஆட்சியில் மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது வாடிக்கையாகி விட்டது.வெளிநடப்பு வேறு வெளியேற்றம் வேறு. அ.தி.மு.கவின் பேச்சுக்கு மறுபேச்சே இருக்கக் கூடாது. மாற்றுக் கருத்துடையோர், அரசின் கருத்தை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் சபாநாயகர் அவர்களை உடனடியாக அவையை விட்டு வெளியேற்றச் செய்வார்.ஆனால் இங்கே முதன் முறையாக‌ சபாநாயகரே வெளியேற்றப்பட்டுள்ளார். சபாநாயகர் ஜெயக்குமார் பதவி துறந்ததற்கு பல்வேறு பின்னணி காரணங்கள் இருந்தாலும் அ.தி.மு.க வில் ஜெயலலிதாவிற்கு இணையாக பரிவாரங்களை உருவாக்க முயல்கிறார் என்ற ஐயத்தின் அடிப்படையில் தான் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆகவே அரசியல் அதிகாரத்தில் தனக்கு போட்டியாக யாரும் உருவெடுக்கக் கூடாது என்கிற ஒற்றை மைய அதிகாரக் கூச்சல் தான் மாற்றுக் கருத்தைக் கொல்லும் எதேச்சதிகாரமாக தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலிக்கிறது. மாதா மாதம் அமைச்சர்கள் மாற்றத்திற்கான காரணமும் இதுவே. மாற்று கருத்துகளை முன்வைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவதால் ஆரோக்கியமான விவாதங்கள் என்பது முற்றிலும் சாத்தியமே இல்லாத‌ சூழல் தான் இன்று உருவாகி இருக்கிறது. முக்கியமான மக்கள் பிரச்சினைகள் எதுவுமே பேசப்படுவதில்லை. உதாரணத்திற்கு இன்று தமிழகத்தின் தலையாய பிரச்சினையான மின்வெட்டு பற்றியோ, தமிழக அரசின் மின் பகிர்மான கொள்கைகள் பற்றியோ எத்தனை விவாதங்கள் சட்டமன்றத்தில் நடந்தேறியிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடந்த வண்ணம் இருக்கிறது.சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் இந்திய அணுசக்தி கொள்கைகள் குறித்தும் மாற்று வழி மரபு சாரா மின் உற்பத்தி முறை குறித்தும் விவாதம் கூட வேண்டாம், குறைந்த பட்சம் ஒரு குரலாவது எழுப்பியிருப்பார்களா? க‌டந்த ஆண்டு தலித் மக்களுக்கு எதிராக ஒரு மாபெரும் வெறியாட்டம் சாதி வெறி கும்பல் ராமதாஸால், தருமபுரியில் நடந்தது. அரசின் சாதி குறித்த நிலைப்பாடு குறித்து பேசினார்களா? குறைந்த பட்சம் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றினார்களா ? இன்றுவரை தமிழக அரசு "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்" ராமதாஸைக் கைது செய்யாமல், உப்பு சப்பற்ற வழக்குகள் போட்டு, ராமதாஸ் கும்பலைக் கைது செய்து இன்று விடுவித்தும் விட்டது. விவசாயம் பொய்த்தது, காவிரி டெல்டா விவசாயிகள் தற்கொலை,ஸ்டெர்லைட் நச்சு ஆலை என எல்லா மக்கள் பிரச்சினைகளுக்கும் தமிழக சட்டமன்றம் செத்த பாம்பாகத் தானே இருந்தது.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் ஈழப்போராட்டங்கள் உச்சமடைந்த போது, சட்டசபையிலும் ஈழத்திற்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்தியாவில் பல மாநில சட்டசபைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டு சட்டசபை சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என திமிராக, தமிழக சட்டசபை தீர்மானங்களை நிராகரித்தார்.இந்திய அரசின் இந்த கண்டு கொள்ளாத போக்கை எதிர்த்து, சட்டப்பூர்வமாக கேள்விக் கேட்கக் கூட வழியில்லாத ஜனநாயக அமைப்பில் தான் தமிழக அரசும் சட்டசபையும் இருக்கிறது. இந்நிலையில் தான் இந்த மன்னர் புகழ் பாடிப் பரிசில் பெறும் புலவர்களை,மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசவும் விவாதிக்கவும் அழைக்கிறோம்.ஆகவே இந்திய நாடாளுமன்றத்திலும் ஜனநாயகமில்லை.தமிழக சட்டசபையிலும் ஜனநாயகமில்லை என்றால் நாம் வாழ்வது கி.பி.1700 களிலா?

இந்த நெருக்கடிகளையெல்லாம் பேசாமல் அவர்களுக்கு அங்கு என்ன வேலை? என்று பார்த்தால் அது ஜெயலலிதாவை பாராட்டிப் பேசுவதும், கை வலிக்க மேசைகளைத் தட்டுவதும் என்ற அளவில் மட்டுமே வந்து நிற்கிறது.தனது பட்ஜெட் உரையில் சரியாக முதல் அரைமணி நேரம் தங்கத் தாரகை, புரட்சித்தலைவி, பொற்பாதக் கமலம், அடியேன், தாயன்பு போன்ற சொல்லாடல்களையெல்லாம் அடி பிசகாமல் கூவுகிறார் நிதியமைச்சர் ஓ.ப மற்ற அமைச்சர்களும் இன்று வரை காவிரித்தாய், ஈழத்தாய் என்றெல்லாம் மக்கள் மன்றத்தில் தனி நபர் துதி பாதி மகிழ்கின்றனர்.அடிப்படையில் சட்டமன்றம் அதன் பொருளை இழந்து இன்று வெறும் அதிமுக பொதுக்கூட்ட மேடைகளாகவும், பாராட்டு விழாக்களாகவும் பரிணாம வளர்ச்சி பெற்று பல்லிளிக்கின்றன.ஒட்டுமொத்த அதிமுக கூடாரமே அடிமைகளின் கூடாரமாகவும்,ஜெயலலிதா என்ற சர்வ வல்லமை பொருந்திய எதேச்சதிகாரிக்கு சேவகம் செய்யும் அடிமை வம்சமாகவும் மாறிப் போயிருப்பது நமது ஜனநாயக விழுமியங்களைத் தேடும் வரலாற்றுப் பாதையில் ஒரு கொடூர நகைச்சுவைக் காட்சி.அதுவும் அடிமைகளில் யார் விஞ்சி நிற்பது என்று இன்றைய சட்டசபையில் ஒரு கடும் போட்டியே நிலவுகிறது.கூட்டணி கட்சிகள் பற்றி கேட்கவே வேண்டாம்.தன் வழியைப் பின்பற்றி அம்மாவிடம் சரணடையுங்கள் என திறந்த மனதுடன் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் கோரிக்கை வைக்கிறார். இதைக் கேட்டு அதே கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் அவரை அடிக்கப் பாய்கின்றனர்.விதிகளின் படி அடிதடி தவறு தான் என்றாலும் அதற்காக சபாநாயகர் அவர்களை(அதாவது தேமுதிகவை சேர்ந்தவர்களை மட்டும்) ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்கிறார். குற்றத்திற்கு காரணமாக இருப்பவர்கள் தான் அதிகம் தண்டிக்கப்பட வேண்டும் என கூறுகின்றது இந்திய தண்டனைச் சட்டம், ஆனால் இங்கு நடப்பது அதற்கு நேரெதிரான நடவடிக்கைகள். சபை விதி எண் 110ன் கீழ் தான் முதல்வர் ஜெயலலிதா எப்பொழுதும் பேசுகின்றார். விதி எண் 110 - முதல்வர் பேசி முடித்தவுடன் அதன் மேல் யாரும் பேசக்கூடாது, கேள்வி கேட்கக் கூடாது.வேண்டுமானால் நன்றி தெரிவித்து உரையாற்றலாம்.என்னே ஒரு உன்னதமான விதி.ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது.



நத்தம் விஸ்வநாதன் உயரமாக இருப்பதால் சட்டசபையில் மைக் முன்பு குனிந்து பேசியிருக்கிறார்.உடனே நம் தங்கத் தாரகை, புரட்சித்தலைவி,"ஆண்களுக்கு லட்சணமே நிமிர்ந்தபடி பேசுவது தான்.அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போல உயர்ந்த மனிதர்கள் பேசும்போது மைக் முன்பு குனிந்து கொண்டு பேச வேண்டியுள்ளது. இதே நிலை தான் உயரமான மற்றவர்களுக்கும் ஏற்படுகிறது.எனவே ஆண்கள் ஆண்களாகவே பேசும் வகையில் மைக்குகளை மாற்றியமைக்க வேண்டும்" என்று மிக‌வும் வ‌ர‌லாற்று முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த, இதுவ‌ரை த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் பேச‌ப்படாத மாபெரும் ஒரு ம‌க்க‌ள் பிர‌ச்சினை குறித்து திருவாய் மலர்கிறார்.மேஜை கரகோசம் விண்ணை முட்டுகிறது.

இப்படியான அரசியல் சமூக அமைப்பினூடாகத் தான் சாமான்ய மக்களின் கைகளுக்கு இடமாற வேண்டிய‌ அரசியல் அதிகாரம் மலைப்பாம்புகளின் அசுரத் தழுவலில் எலும்புடைந்து சிதைந்து கிடக்கிறது. நம்மை இரட்சிப்போரும் மீட்பரும் புதிதாக வானிலிருந்து உயிர்த்தெழப் போவதில்லை.நம் கையில் இருக்கும் போராட்ட வடிவங்கள் தான் சிதைவுகளிலிருந்து நம்மை மீட்டெடுக்கப் போகும் சர்வ வல்லமை பொருந்திய, கூர் தீட்டப்பட வேண்டிய ஆயுதங்கள்.



-அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்.

=================

1 comment:

  1. தேசிய இயக்க தலைவர்களைவிட திராவிட இயக்க தலைவர்கள் பத்தாம் பசலிகளாகாவும் ,கோழைகளாகாவும் ,குறுகிய புத்தி படைத்த பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றனர் .உதாரணம் ,வைத்தியதுறையில் பட்ட மேல்படிப்பு முடித்த வைத்தியரான திருமதி.பூங்கோதை ஆலடி அருணா கருணா மந்த்ரிசபையில் மந்த்ரியாக இருக்கும் வரை தன் பேர் முன் Dr,என்று போட்டுக்கொள்ளவில்லை

    ReplyDelete