Tuesday, April 16, 2013

அணு உலையில் ஊழல் !!!!



இந்திய சனாதிபதி உள்ளிட்டோர் பயணம் செய்வதற்காக வாங்க திட்டமிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நடத்திய இந்திய இராணுவம் ஊழலில் ஈடுபட்டதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பி கொண்டிருந்த அதே நேரத்தில் அதே இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இந்திய அணுசக்தி துறை தொடர்பான ஒரு ஊழல் தொடர்பான செய்தியும் இரசியாவில் வெளியானது. ஆனால் முதல் ஊழலில் காட்டிய அக்கறையை இரண்டாவது ஊழலில் எந்த ஒரு ஊடகமும் காட்டவில்லை. வழமை போல ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருந்த முதல் ஊழலைப் பற்றி மட்டுமே பொது மக்களும், பாராளுமன்றமும் பேசியது, விவாதம் செய்தது.... இரண்டாவது ஊழல் மெல்ல, மெல்ல இப்பொழுது தான், அதுவும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர். திரு. கோபால கிருஷ்ணன் பேசிய பின்னர் தான் இந்தியாவில் உள்ள சில இணைய ஊடகங்கள் எழுதத் தொடங்கியுள்ளன(1). ஆனால் இன்னமும் எந்த ஒரு 24x7 செய்தி ஊடகமோ, அச்சு ஊடகமோ இந்த ஊழல் பற்றிய செய்தியை வெளியிடவில்லை(சில நாளிதழ்கள் மட்டும் திரு.கோபால கிருஷ்ணன் பேட்டியை மட்டும் வெளியிட்டுள்ளது(2)). அது என்ன ஊழல், ஏன் இதுவரை எந்த ஒரு ஊடகமும் அந்த ஊழல் செய்தியை வெளியிடவில்லை என நாம் பார்ப்போம்.....



கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் முதலிரண்டு அணு உலைகளும் இரசியாவினால் கட்டப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த அணு உலையை கட்டிவரும் இரசிய நிறுவனம் "ரோசாடாம்"(Rosatom) பல பாகங்களை தனது துணை நிறுவனமான சியோ-பொடல்ஸ்க்(Zio-Podalsk) என்ற நிறுவனத்தில் இருந்து வாங்குகின்றது. இந்த நிறுவனம் தான் தயாரிக்கும் பாகங்களுக்காக தரக்குறைவான இரும்பை வாங்கி பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் அதிக இலாபம் பார்க்க முயன்றுள்ளது. இதனை கண்டுபிடித்துள்ள இரசிய தேசிய ஊழல் தடுப்பாணையம் இந்த சியோ-பொடல்ஸ்க் நிறுவனத்தின் இயக்குநரை கைது செய்து விசாரித்து வருகின்றது.(3) இந்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இந்தியா, சீனா, பல்கேரியா, இரான் நாடுகளில் கட்டப்படும் அணு உலையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என இதுவரை நடந்துள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி முதன்மை நிறுவனமான "ரோசாடாமும்" பல ஊழல்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்து, அந்த நிறுவனத்தின் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.(4)



இந்த ஊழல் செய்தியைத் தொடர்ந்து சீனா தன்நாட்டில் இரசியாவால் கட்டப்பட்டுவரும் அணு உலைகளின் தரத்தையும் பாதுகாப்பையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய அணு உலை ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் நிர்வாக தலைவரான திரு.கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்(2). அதே போல இந்தியாவும் கூடங்குளம் அணு உலையை ஒரு சுயாதீன குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். நம் வாசகர்களுக்கு ஒரு கேள்வி மனதில் எழலாம். "இப்பொழுது தான் ஊழல் என்பது எல்லாவற்றிலும் நடக்குதே, இதை மட்டும் ஏன் நீங்கள் இவ்வளவு பெரிதாக சொல்கின்றீர்கள்". இந்தியாவில் ஊழல் என்பது எல்லாவற்றிலும் நடந்தாலும், பாதுகாப்பு துறையில், மக்களுக்கான பாதுகாப்பில் ஊழல் என்பது மிகப்பெரிய விளைவை உண்டாக்கும். வாகனம் ஓட்டும் பொழுது நாம் போடும் தலை கவசம் தரமற்றதாக இருந்தால் நம் உயிரையே காவு வாங்கக்கூடியது. அதுவே அணு உலையில் உள்ள பாகங்கள் தரமற்ற இரும்பினால் தயாரிக்கப்பட்டவையாக இருந்தால், அது அணு உலை வெடிப்பு வரை இட்டுச்செல்லக் கூடியது. அது சிறுவெடிப்பாயினும் அதன் விளைவுகள் வாகன விபத்து போலன்று, சொல்லிலடங்கா....



(செர்னோபில் அணு உலை விபத்தினால் மனிதர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட அதை சுற்றியுள்ள பகுதிகள்)


இங்கே பலர் அணு உலை விபத்துகளை தினமும் நிகழும் கார், பேருந்து விபத்துடன் ஒப்பிடுகின்றார்கள். ஒரு சிறு அணு உலை வெடிப்பினால் உண்டாகும் அணுக் கசிவு அணு உலை, அதனை சுற்றியிருக்கும் பகுதியையும் சேர்த்து குறைந்தது 20 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை மனிதர்களால் பயன்படுத்த முடியா நிலைக்கு ஆளாக்கும். இந்தியா போன்ற சன நெருக்கடி மிகுந்த நாட்டில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதி என்பது மிகப்பெரியது. அது மட்டுமின்றி அணு உலை வெடிப்பு மூலம் ஏற்படும் கதிர்வீச்சு அப்பொழுது வாழும் உயிர்களை மட்டுமில்லாமல், தலைமுறை தாண்டி அதற்கு பின்னால் பிறக்கும் தலைமுறைகளையும் பாதிக்கும். இவை எதுவும் தினமும் நிகழும் பேருந்து அல்லது கார் விபத்தினால் ஏற்படாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஏற்படும் அணு உலை வெடிப்பு இந்திய ஒன்றியத்தின் தென் தமிழக,கேரள பகுதி மட்டுமன்றி அண்டை தேசமான இலங்கையின் வட பகுதி வரை வாழும் மக்களை பேரழிவிற்குள்ளாக்கும். மேலும் சென்னையில் குப்பைகள் சேகரிக்கும் இடமான பள்ளிக்கருணையில் ஏற்பட்ட தீயை அணைக்கவோ, சிவகாசி வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கவோ தொழில்நுட்பம் இல்லாமல் மழை வந்தால் தான் தீ அணையும் என்று சொன்ன நம் அரசின் அதிகாரிகளிடம் அணு உலை வெடித்தால் எடுக்க வேண்டிய பேரழிவு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வோ, தொழில்நுட்பமோ இருக்காது என்பது தான் உண்மை(6), போபாலில் நச்சு வாயு கசிந்த பொழுது அதன் இயக்குநர். ஆண்டர்சன் அமெரிக்காவிற்கு அரச விமானத்தில் பறந்தது போலவே, அணு உலையில் ஏதாவது வெடிப்பு ஏற்பட்டால் இரசிய அணு விஞ்ஞானிகளும் பறந்து விடுவார்கள். சில மாதங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழிபேரலை(T-Sunami)எச்சரிக்கை விடப்பட்ட போது கூடங்குளம் அணு உலையில் இருந்து இரசிய விஞ்ஞானிகள் முதல் ஆளாக வெளியேறியதை அன்றைய நாளிதழ்களில் நாம் எல்லோரும் படித்தோம். இந்த நிலையில் இன்னமும் அணு உலை பேரழிவு பாதுகாப்பு சட்டத்தில் இந்த இரண்டு அணு உலைகளையும் சேர்க்கக்கூடாது என்றும், இனி வரும் அணு உலைகளும் இந்த சட்டத்தில் சேர்க்கப்படாது என்றும் இரசிய அரசு தெளிவாக கூறியுள்ளது. அதாவது இலாபம் வந்தால் அவர்களுக்கு, இழப்பு என்று ஏதாவது வந்தால் அது மக்களுக்கு. அதாவது "வெல்லம் திங்கறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தன்" என்பது போல...






இனி ஊடகங்கள் இந்த ஊழல் பிரச்சனையை ஏன் மற்ற ஊழல்களைப் போல பெரிது படுத்தவில்லை என பார்போம். சில நேரங்களில் ஹாலிவுட் திரைப்படங்களில் சில உண்மைகளும் வரும், அது போல "2012" என்ற அறிவியல் அடிப்படை சார்ந்த ஹாலிவுட் திரைப்படத்தை பெரும்பாலானோர் பார்த்திருப்போம், அந்த படத்தில் வரவிருக்கும் இயற்கை பேரழிவுகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் எல்லாம் வரிசையாக அமெரிக்க ஐக்கிய அரச நிர்வாகத்தால் திட்டமிட்டு கொல்லப்படுவார்கள். இவையெல்லாம் விபத்துகளாக நாளிதழ்களில் செய்தியாக வரும். அதே போல இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல அணு விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துவருகின்றார்கள்(5). இதையும் கூட சூழியல் ஆதரவாளர்களும், அணு உலை எதிர்ப்பாளர்களும் தான் வெளிக்கொண்டு வர வேண்டியிருக்கின்றது. அணு உலை மேல் காதல் கொண்டுள்ள எந்த ஊடகமும் இதுவரை இந்த விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக எந்த ஒரு பெரிய ஊடகமும் கேள்வியையோ, ஒரு விவாதமாகவோ எழுப்பவில்லை. ஒரு வேளை காதல் அணு உலை மீது மட்டும்தானோ, அணு விஞ்ஞானிகள் மீது இல்லையோ ? இந்த விஞ்ஞானிகளும் "2012" திரைப்படத்தில் காட்டப்பட்டது போல வரவிருக்கும் பிரச்சனைகளை முன்னுணர்ந்து வெளியில் கொண்டு வர எண்ணியிருக்கலாம் ?. அதுமட்டுமின்றி இந்திய அளவில் கடந்த 600 நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்து நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை பற்றியும், அணு உலை தொடர்பாக அவர்கள் எழுப்பிவரும் கேள்விகளை மையமாக வைத்தும் எந்த செய்தி ஊடகமும் விவாதத்தை நடத்தவில்லை (சில செய்தி நாளிதழ்கள் தவிர). இவர்கள் செய்வது எல்லாம் அரச நிர்வாகத்தை இயக்கி வரும் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பது மட்டுமே . இந்தியாவில் இதுவரை கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.ஆறு இலட்சம் கோடி என்பதையும், அந்த சந்தைக்காக அணு உலை மாஃபியாவும், முதலாளிகளும் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், இதனது தொடர்ச்சியாகவே இந்திய, தமிழக ஊடகங்களும், ஆளும், எதிர் கட்சிகளும் இந்த அணு உலை ஊழலில் கள்ள மௌனத்தை கடைபிடிக்கின்றன. ஊடகங்கள் சனநாயகத்தின் நான்காவது தூண் என்பதிலிருந்து விலகி அரசு செய்யும் தவறுகளை மறைப்பதில் முதலாவது தூணாக இருக்கின்றது.


மீண்டும் இந்த அணு உலை ஊழல் பிரச்சனைக்கு திரும்புவோம். ஊழலில் சிக்கியுள்ள இரசிய நிறுவனங்களால் கட்டிமுடிக்கப்பட்ட கூடங்குளம் அணு உலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய "ஒரு இந்திய சுயாதீன குழு"(Indipendant Indian Team) (இந்த குழுவில் முன்னாள் அணு உலை ஒழுங்காற்று ஆணையத்தின் இயக்குநர் திரு.கோபால கிருஷ்ணன் போன்றோர்களையும் சேர்த்தால் அந்த குழுவின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். ஏனென்றால் இதற்கு முன்னர் அரசு அமைத்த குழுக்களில் இருந்தவர்கள் எல்லாம் இந்திய அணு உலை நிர்வாகத்தை சேர்ந்தவர்களாகவும், அணு உலைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களுமாக இருந்தார்கள்) அமைத்து, அணு உலையை முழுமையாக ஆய்வு செய்து, அதன் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அணு உலையை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், இந்த கட்சி, அந்த கட்சி என்ற பேதமின்றி எல்லோரும் முன்வைக்க வேண்டும், அதே போல ஏன் ஊடகங்கள் அனைத்தும் இந்த ஊழலை மறைத்தன என்ற கேள்வியை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், இல்லையெனில் இலங்கை அரசு 2009ல் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் பொழுது எப்படி கண்மூடி, வாய் பொத்தி, செவி கேளாமல் இருந்தார்களோ அதே போல, நாளை இந்த ஊழலினால் அணு உலை வெடித்து ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தாலும் அதையும் இவர்கள் நிலநடுக்கம் அல்லது புவியதிர்ச்சி ஏற்பட்டே விபத்து நடந்தது என மறைக்கக்கூடும். ஊழல் புரிந்தவர்களுக்கு துணை போகின்றவர்களும் ஊழல் குற்றவாளிகளே...



மக்கள் போராட்டம், மனித நேயம் ஓங்குக...


ப.நற்றமிழன்

சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)

தரவுகள்:

1)http://www.theweekendleader.com/Causes/1582/Nuclear-muddle.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+theweekendleader+%28The+Weekend+Leader%29

2)http://newindianexpress.com/states/tamil_nadu/article1534269.ece

3)http://www.bellona.org/articles/articles_2012/podolsk_corruption

4)http://www.bellona.org/articles/articles_2011/corruption_rosatom

5)http://www.kalpakkam.net/2011/05/nuclear-scientists-are-dying-under.html

6)http://articles.timesofindia.indiatimes.com/2012-06-12/chennai/32193833_1_dump-yard-pallikaranai-strong-winds





No comments:

Post a Comment