Thursday, April 25, 2013

தேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமில்லை




சிங்களவர்களும் வடஇந்தியர்களும் ஒன்றல்ல,

கட்டுரை ஆசிரியரின் குறிப்பு:

இலங்கை அரசு வழமையாக தொடுக்கும் இராசதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்களவர்களை ‘வட இந்தியர்’ களின் உறவுகள் என்று வரலாற்றுக்கு புறம்பான கருத்தைப் பரப்ப முயலும் செயலுக்கும் அதைத் தொடர்ந்து அக்கருத்து சரியே என்று தமிழகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் சிங்கள, தமிழீழத், தமிழ்த் தேசிய இனங்கள் குறித்த வரலாற்று தரவுகளை கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

----


ஹோமோசப்பியன்ஸ் என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஏறத்தாழ இற்றைக்கு 1,90,000 ஆண்டுகள் முதல் 1,60,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றி கடந்த 75,000 ஆண்டுகளாக இந்த பூமி பந்தின் எல்லா இடங்களுக்கும் தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் M168 எனப்படும் மரபுயிரியல் குறியீட்டை தங்கள் Y குரோமோசோமில் கொண்டிருந்தனர் (Y குரோமோசோம் எனப்படுவது மனித இனத்தில் ஆண்களை அடையாளங்கானச் செய்யும் மரபுக் கூறுகளைக் கொண்டதாகும்). இவர்களின் இடப் பெயர்தலின் ஒரு கட்டமாக ஏறத்தாழ 85,000 - 75,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து நீக்ரோய்ட் இனக் குழு ஆதி மனிதர்கள் செங்கடல், அரேபிய குடா நாடுகள், பாரசீக வளைகுடா கடற்கரைகள் வழியாக தற்கால தமிழக - இலங்கைப் பகுதிக்கு இடம் பெயர்கின்றனர். இந்த பரம்பலின் மூலம் M130 என்ற புதிய மரபுயிரியல் குறியீடு இம்மககளிடையே உருவாகின்றது.



இவர்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் இருந்து ஏறத்தாழ 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் M20 என்ற மரபுயிரியல் குறியீட்டை கொண்ட திராவிடர்களின் மூதாதையர்கள் என்று கூறிக்கப்படும் மனிதர்கள் தற்கால தமிழக இலங்கை பகுதிக்கு புலம் பெயர்ந்திருக்கின்றனர். இங்கு ’திராவிடர்’ என்று வழங்கப்படும் சொல் ஒரு மொழிக் குடும்பத்தை குறிக்கும் சொல்லாக வழங்கப்பட்டு பிற்காலத்தில் இனக்குழுவைக் குறிக்கும் பெயராக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்ததாக ஏறத்தாழ 11,000 ஆண்டுகளுக்கு முன்னர் மெசப்படோமியாவின் இலம் பாகத்திலிருந்து M172 என்ற மரபுயிரியல் குறியீட்டைக் கொண்ட இலம்-திராவிடர்கள் என்ற இனக் குழுவினர் பலுச்சிசுதான் வழியாக இந்திய துணைக் கண்டத்திற்குள் வருகின்றனர். மெகார், சிந்து சமவெளி, கங்கைச் சமவெளி, கிருட்ணா - கோதாவரி என்று இந்த மரபுயிரியல் குறியீடு கொண்டவர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் விரவி வாழ்கின்றனர். தமிழகத்தில் வேளாண் தொழில் புரியும் மக்களிடம் இந்த மரபுயிரியல் குறியீடு 20 சதவிகிதத்திற்கு காணப்படுகிறது.

இவர்களைத் தொடர்ந்து ஏறத்தாழ 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஆசிய பகுதிகளில் மந்தை மேய்க்கும் நாடோடிகளாக இருந்த இனக் குழுக்கள் ஈரான் வழியாக தற்கால இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடைய ஆண் பரம்பரையினரின் Y குரோமோசோமில் M17 எனும் மரபுயிரியல் குறியீடு காணப்படுவதை வைத்து இந்த மக்கள் அடையாளங் காணப்படுகின்றனர். இக்குறியீடு ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், வடமேற்கு இந்தியாவிலும் உள்ள ஆண்களிடையே 55 சதவிகிதமும், தில்லிப் பகுதியில் இந்தி மொழி பேசும் ஆண்களிடையே 35 சதவிகிதமும் இருப்பது அடையாளாங் காணப்பட்டுள்ளது. அதேவேளை வட இந்தியா முழுவதும் இந்த இந்தோ –ஆரிய இனக்குழு மக்களின் பரம்பல் நடைபெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் தென்னிந்தியாவில் வாழும் ஆண்களில் 10 சதவிகித மக்களே இந்தோ -ஆரியர்களின் M17 குறியீட்டைக் கொண்டிருக்கின்றனர்.இப்பகுதியில் இக்குறியீட்டின் பரம்பல் பார்ப்பனர்களிடம் மட்டுமே முதன்மையாக பரிமாறப்படுகிறது.

தற்கால இலங்கைத் தீவில் சில சிங்களவர்களிடம் வங்காளத்தைச் சேர்ந்தவர்களின் மரபுயிரியல் சாயல் காணப்படுகிறதே அன்றி M17 குறியீட்டைக் கொண்ட மக்கள் இலங்கைத் தீவில் காணப்படுவதற்கான சான்றுகள் இல்லை.

தொல்லியல் ஆய்வுகளின் படி தொடர்ச்சியான கடல் மட்ட உயர்வால் தற்கால இலங்கைத் தீவிற்கும் இந்தியத் துணைக் கண்டத்திற்கும் இருந்த நிலத் தொடர்பானது ஏறக்குறைய 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே பிளவு படுத்தப்பட்டு தற்கால இலங்கை நிலப்பரப்பு தனி தீவாக உருமாறுகிறது.

இந்த தீவின் உருவாக்கம் வரை இந்த நிலப்பகுதியில் நீக்ரோய்ட் - ஓசுரோலாயிட் இனக் குழுவினர், திராவிடர்களின் மூதாதையர்கள், இலம்-திராவிடர்கள் என பல காலகட்டங்களில் இடம்பெயர்ந்த தொல்குடி மக்களே வசித்து வந்துள்ளனர். பிற்காலத்தில் 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த இந்தோ – ஆரியர்களின் பரம்பல் தற்கால தமிழகப் பகுதிகளில் கூட ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அளவிலேயே நிகழ்ந்துள்ளது. இந்த வரலாறு படி, இவர்கள் வருகைக்கு முன்னரே பிளவு பட்டு தனித் தீவாகிப் போன தற்கால இலங்கைத் தீவிற்கு பெருந்தொகையானவர்களாக இவர்கள் புலம் பெயர்ந்து மக்கள் பரம்பலை நடந்திருப்பதற்கான வரலாற்று சாத்தியங்கள் மிக அரிதாகும்.

கலிங்கப் போரின் வெற்றியைத் தொடர்ந்து பெளத்த மதத்தைத் தழுவிய அசோகப் பேரரசன் பெளத்த மதத்தை தனது அரச மதமாக அறிவித்து அதனை உலகம் முழுவதும் பரப்புதல் மூலம் பெளத்த ஆதிக்கத்தை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டான். இதன் ஒரு கட்டமாக கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் பூர்வ குடி மக்களாக வாழ்ந்து வந்த மக்களிடம் பெளத்த மதத்தை பரப்பும் பொருட்டு தனது மகன் மகிந்தனையும், தனது மகள் சங்கமித்ராவையும் அனுப்பி இலங்கைத் தீவின் தென் பகுதி அரசுகள் வழியாக பெளத்த மதத்தைப் பரப்புகிறான். அசோகப் பேரரசின் சார்பாக சென்ற இவர்கள் அங்கிருந்த தென்பகுதி மக்களிடம் பெளத்த மதத்தைப் பரப்பினார்களே அன்றி அது ஒரு இனக் கலப்பிற்கான நடவடிக்கையாக நடைபெறவில்லை.

அசோகப் பேரரசின் அழுத்ததிற்கு அடிபணிந்து பெளத்தத்தை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்ட இலங்கைத் தீவின் தென் பகுதி மக்கள் தமிழகப் பகுதியில் இருந்து தொடர்ச்சியாக சோழ, பாண்டிய அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளாலும் ஒடுக்குமுறைகளாலும் இயற்கையான அச்ச உணர்வில் தங்களின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். வணிக மொழியாக பிராகிருத மொழி பரவலாக பயன்படுத்தப்பட்ட காலத்தை தொடர்ந்து, இலங்கைத் தீவின் தென்பகுதி மக்களிடம் பாலி, தமிழ், சமஸ்கிருத, பிராகிருத மொழிகளின் கலப்பில் இருந்து சிங்கள மொழி புதிய மொழியாக தோற்றம் பெறுகிறது.இந்த சிங்கள மொழி இவ்வுலகில் இலங்கைத் தீவில் தேரவாத பெளத்தத்தை தழுவி வாழும் மக்களின் மொழியாக மட்டுமே விளங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கள இனத்தின் வரலாற்று ரீதியான உருவாக்கம் இப்படி இருக்க கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்தமிழினம் மீது இனஅழிப்பை நடத்திவரும் சிங்கள இனம் வட இந்தியர்களுடன் எவ்வித மரபியல் தொடர்பும் இல்லாத பொழுதும் தமிழகத்தின் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்தியாவில் உள்ள தமிழர்கள் தவிர்த்த பிற தேசிய இன மக்களிடம் இருந்து ஈழத் தமிழர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு முற்றிலும் வரலாற்றுக்கு புறம்பான ‘சிங்களவர்களும் வட இந்தியர்களும் ஒன்றே’ என்ற கருத்தைப் பரப்புகின்றது.

வரலாற்றுத் தரவுகளுக்கு புறம்பான இக்கருத்தை ஆதரிப்பதோ அல்லது உண்மை என்று சொல்வதோ ஈழத்திற்கான போராட்டத்தில் தமிழர்களைத் தனிமைப்படுத்த விழையும் சிங்களவரின் பேரினவாத செயல் திட்டத்திற்குள் நாம் வீழ்ந்துவிடுவதாகவே அமையும்.

தமிழர்களைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு சிங்களப் பேரினவாதம் மேற்கொள்ளும் இந்த பொய்ப் பரப்புரையை ஆதரித்து நிற்பதால் சிங்கள அரசிற்கு இந்திய துணைக் கண்டத்தில் உள்ள தமிழர்கள் தவிர்த்த மற்ற தேசிய இனங்களுடன் ஒரு அணி சேர்க்கைக்கு வழியமைத்துக் கொடுக்கின்றோம். விடுதலைப் போராட்ட அரசியலின் அடிப்படையே எதிரியைத் தனிமைப்படுத்துவது தான். அதற்கு மாறாக நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது அல்ல.

உலகில் உள்ள எந்தவொரு ஏகாதிபத்ய நாடும் தேசிய இனவிடுதலை என்ற அரசியல் புள்ளியில் நாடற்ற, நாடுகளுக்காக போராடும் தேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாகவே இருக்கின்றன. இதன் வெளிப்பாடே உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இன்றும் அரசற்ற தேசிய இனங்களாக வாழ்வதும் வெகு சில தேசிய இனங்களே தங்களின் இன விடுதலைக்காக போராடி வருவதும் பல இனங்கள் தங்கள் உரிமைகளை இழந்து மறந்து ஏகாதிபத்ய நாடுகளின் புதிய-காலனிய நாடுகளாக தொடர்வதுமாகும்.ஈழத்திற்கும் – பாலஸ்தினத்திற்கும் இடையே ஒருங்கிணைவு இல்லாதது மட்டுமல்ல தமிழகத்திற்கும் காஷ்மீருக்கும் இடையேயும் இத்தகைய ஒருங்கிணைவு இல்லை என்பதை நாம் கவனிக்க தவறும் சூழலே நிலவுகின்றது. நாம் ஒரு தனித்த தேசிய இனம் என்று உணர்கின்ற அதே வேளை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் ஏனைய தேசிய இனங்களை அணி திரட்டி முன்செல்வதே ஒடுக்குமுறையை செலுத்தும் இலங்கை அரசை எதிர்கொள்ள நாடற்ற தேசங்களாகிய நமக்கு இருக்கும் முதன்மைக் கடமையாகும்.

தமிழகத்தைப் பொறுத்த வரை இங்கு நிலவும் அரசியல் உரிமை சிக்கல்களுக்கு காரணம் மக்களிடம் அரசியல் அதிகாரம் இல்லை என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. மொழி, இனம், பண்பாடு, நிலப்பரப்பு என்று குறியீடுகளின் அடிப்படையிலும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் தேசியத்தின் வளர்ச்சி கட்டங்களை தமிழகம் கடந்து கொண்டிருகின்ற சூழலில், தேசியத்தின் அடிப்படை கூறான அரசியல் உரிமைகளை பெற மக்கள் சனநாயகப்படுதலும், நாம் என்ற உணர்வு பெறுதலும் இல்லாது வட்டார, சாதிய மனநிலையும் நடைமுறையும் நீடித்து நிற்பது தமிழகத்தில் தேசியத்திற்கான போராட்டத்தை அதன் உள் அர்த்ததில் முன்னெடுக்க வேண்டிய தேவையை உணர்த்துகின்றது. தமிழகத்தின் அரசியல் இயக்கங்கள், அமைப்புகள், ஆற்றல்களுக்கு நம் மக்களை சனநாயகப்படுத்துதல் அதன் மூலமாக அரசியல் அதிகாரத்தை அடைதல் என்ற தேசியத்திற்கான வளர்ச்சி நிலைகளை நோக்கி மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய வரலாற்றுக் கடமையும் பொறுப்புமிருக்கின்றது.

இறுதியாக, தேசியவாதம் எங்கு ஆதிக்க வாதம் ஆகின்றதோ, எங்கு இனவாதம் ஆகின்றதோ அப்பொழுது அது சனநாயகத்திற்கு எதிர்வாதமாக மாறி சனநாயக விரோதப் பாத்திரத்தை வகித்து பேரினவாதமாக மாறிவிடுகின்றது. எடுத்துக்காட்டாக யூத எதிர்ப்பில் வளர்த்தெடுக்கப்பட்ட ஜெர்மானிய தேசியம் பாசிசமாகிப் போனது.கிறுத்துவ மிஷினரிகளுக்கு எதிராகவும் அதை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள தேசியம் பெளத்த சிங்கள பேரினவாதமாகி இன்று ஈழத் தமிழர்களை இனக்கொலை செய்து கொண்டிருக்கின்றது. மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளில் யூதர்களும், தமிழர்களும் மட்டும் வஞ்சிக்கப்பட வில்லை ஜெர்மானியர்களுக்கும் சிங்களர்களுக்கும் சேர்ந்தே அவர் தம் தேசியம் தீங்கு இழைத்து, வரலாற்றில் தான் பெற்றிருக்க வேண்டிய முற்போக்கானப் பாத்திரத்தைத் அத்தேசியங்கள் இழந்துவிட்டன.

ஆதலால் தேசியம் என்பது மன்னராட்சிக் காலத்திற்கும், கற்காலத்திற்கும், இனக்குழுக்களாய் வாழ்ந்த காலத்திற்கும் திரும்பச் செல்லும் ஒரு பழமைவாதமல்ல. தேசியம் என்பது இன்றைய காலகட்டத்தை விடவும் முன்னோக்கிச் செல்ல வல்ல ஒரு புதுமையான அரசியல் வடிவமாகும். அது மென்மேலும் பரந்த சனநாயக விருப்பங்களை முன்னெடுத்துச் செல்லும் முற்போக்கான ஒரு கோட்பாடும் நடைமுறையும் ஆகும். இந்த புரிதலில் இருந்து நடைமுறையை முன்னெடுப்பதே 21 ஆம் நூற்றாண்டில் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு உதவும்.


நூல் குறிப்புகள்:
================

1.சுப்ரமணியன் விசாகன், இலங்கையில் மனிதக் குடியமைவு (Peopling of SriLanka)
2.விடியல் பதிப்பகம், தேசியமும் ஜனநாயகமும்




- ச.இளங்கோவன், சேவ் தமிழ்சு இயக்கம் ( elango.yuvan@gmail.com )




நன்றி : பொங்குதமிழ் இணைய இதழ்


========================================================================================

Monday, April 22, 2013

ஷாபாக் சதுக்கம்: புதைக்கப்பட்ட நினைவுகளைத் தேடும் வங்கதேச எழுச்சி



விடுதலையும்,இரத்தமும்,அழுகையும், கண்ணீரும்,ஏழ்மையும்,கோபமும் என ஒன்றுக்கொன்று தொடர்புடைய அல்லது தொடர்பில்லா கலவையான உணர்வுகளுடன் நடந்தேறிய போராட்டம் அது.முப்பதாண்டுகளுக்கும் மேலான வங்க தேசத்தின் ஒடுக்கப்பட்ட குரல்கள் காற்றைக் கிழித்து விண்ணை எட்டிய வரலாற்று தருணமது.பிப்ரவரி 5, வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் ஒரு மாலைப் பொழுதில் தொட‌ங்கிய‌ ம‌க்க‌ள் திர‌ள் எழுச்சி பெரும்பாலான வெகுசன ஊட‌க‌ங்க‌ளால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன.ஆங்காங்கே ஒரு சில‌ செய்திக‌ள், க‌ட்டுரைக‌ள் என‌ க‌ட‌ந்து போகும் ஒரு நிக‌ழ்வாக‌ ஷாபாக் போராட்ட‌த்தை கருதி விட முடியாது.மூன்று லட்சம் மக்களின் இரத்தக் கறைகளோடு கூடிய‌ ஒரு தேசிய விடுத‌லைப் போராட்ட நினைவுகளையும் எந்த நீதியாலும் திரும்பப் பெற்றுத் தர இயலாத கோரமானதொரு இனப்படுகொலையையும் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா என்ன?



ஷாபாக் சதுக்கத்தின் போராட்ட பின்னணியை ஆய்வு செய்தால்,வரலாற்று அடுக்குகளிலிருந்து பல்வேறு நிகழ்வுகளை தூசு தட்ட வேண்டியிருக்கிறது.அதிக உயரத்திற்குச் செல்லாமல், கைக்கு எட்டிய தூரம் 1971 ஆம் ஆண்டு வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்திலிருந்து தொடங்குவோம்.குழப்பத்தைத் தவிர்க்க‌ முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன்.கிழக்கு வங்காளம்,கிழக்கு பாகிஸ்தான் ஆகிய இரண்டு பழைய‌ பெயர்களும் தற்போதைய பங்களாதேஷ் என்றழைக்கப்படும் வங்க தேசத்தையே குறிக்கின்றன.1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாவுடன் மேற்கு வங்காளமும், பாகிஸ்தானோடு கிழக்கு வங்காளமும் மத அடிப்படையில் இணைக்கப்பட்டன.

அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தானிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த கிழக்கு வங்காள மக்கள் பாகிஸ்தானிய அரசின் மீது பெருங்கோபத்தில் இருந்தனர்.1948 பாகிஸ்தான் அரசு, உருது மொழியே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அறிவித்த போது, கிழக்கு வங்காளத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஏறத்தாழ தமிழகத்தில் நடந்த‌ இந்தி திணிப்பு போராட்டத்திற்கு நிகரான ஒரு போராட்டம் கிழக்கு வங்காளத்திலும் நடந்தது.அந்த மொழிப்போராட்டத்தையும் முன்னெடுத்தவர்கள் மாணவர்களே. அப்போராட்டத்தை ஒடுக்க‌ 1952ல் டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்ப‌வ‌மே, பாகிஸ்தான் என்ற‌ ஒரு ஆதிக்க‌த்தின் கீழ் நாம் ஒடுக்க‌ப்ப‌டுகிறோம் என்ற‌ வ‌ங்காள மக்களின் தேசிய விடுதலை உண‌ர்வு துளிர் விட‌க் கார‌ண‌மாக‌ அமைந்த‌து.அது மட்டுமின்றி பாகிஸ்தானுக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட கிழக்கு வங்காள மக்கள் வறுமையிலும் வேலையின்மையிலும் தத்தளித்தனர்.1970 ஆம் ஆண்டு கிழ‌க்கு வ‌ங்காள‌த்தில் ம‌க்க‌ள் செல்வாக்கை பெற்றிருந்த‌ அவாமி லீக் க‌ட்சி நாடாளும‌ன்ற‌த்தில் பெரும்பான்மை பெற்றிருந்த‌ போதும்,அக்க‌ட்சியின் த‌லைவ‌ரை பாகிஸ்தான் ஆட்சியமைக்க மறுத்துவிட்டது.அதே ஆண்டில், போலா எனும் சூறாவ‌ளி வங்க‌ தேச‌த்தை தாக்கி பெரும் சேத‌த்தை விளைவித்த‌து.மூன்று ல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் உயிரிழ‌ந்த‌ன‌ர். எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தால் மிகப்பெரும் இழப்பைச் சந்தித்த வங்காள தேசத்திற்கு நிதியுதவி அளிப்பதிலும் மறுசீரமைப்பு பணிகளிலும் பாகிஸ்தான் அரசு மெத்தனமாகவே நடந்து கொண்டது.ஒன்றன் பின் ஒன்றாக நடந்த‌ எல்லா நிகழ்வுகளும் இராணுவ பலம் கொண்ட பாகிஸ்தானை எதிர்த்து, வங்காளத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டெழக் காரணமாக அமைந்தன.

1970ல் நடந்த தேர்தலில் கிழக்கு வங்காளத்தின் அவாமி லீக் 162ல் 160 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.இரண்டு இடங்களைத் தவிர நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த பெரும்பான்மையைப் பெற்ற அவாமி லீக் கட்சியை அரசமைக்க பாகிஸ்தானின் மக்கள் கட்சியின் தலைவர் ஜுல்ஃபிகார் அலி பூட்டோவும் ராணுவ ஆட்சியாளருமான யாஹியா கானும் மறுத்துவிட்டனர்.இதனையடுத்து அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1971 மார்ச் 7 ஆம் திகதி கிழக்கு வங்காள மக்களை பாகிஸ்தானிய அரசை எதிர்த்து சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுத்தார்.மார்ச் 25 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக, கிழக்கு வங்காளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச விடுதலைப்போர் தொடங்குகின்றது.

டிக்கா கான் என்ற பாகிஸ்தானிய இராணுவ தளபதி, கிழக்கு வங்காளத்தின் கவர்னராக பொறுப்பேற்க‌ கிழக்கு வங்காளத்திற்கு வருகின்றார். அங்குள்ள நீதிபதிகள் அவரை நுழையவிடாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.இந்நிகழ்வையடுத்து, மார்ச் 25 ஆம் திகதி நள்ளிரவில் கிழக்கு வங்காள மண்ணின் விடுதலை போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாகிஸ்தானிய இராணுவம் தரையிறக்கப்படுகிறது.மார்ச் 26 ஆம் தேதி ஷேக் முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்படுகிறார்.அதே நாளில் ஷேக் ஆல் எழுதிக் கொடுக்கப்பட்ட அறிக்கையை கலூர்கட் வானொலி நிலையத்தில் அவரது அவாமி லீக் கட்சியின் சக உறுப்பினர் எம்.ஏ.ஹன்னான் முதன் முறையாக வாசிக்கிறார். பங்களாதேஷ் சுதந்திரம் அடைந்து விட்டதாக அறிவிக்கிறார். விடுதலைப் போராட்டம் தீவிரமடைகிறது. பாகிஸ்தானிய ராணுவத்துடன் உள்ளூர் ரஜாக்கர்கள் என்றழைக்கப்படும் பாகிஸ்தானிய ஆதரவு இஸ்லாமிய அடிப்படை வாதிகள் ( இவர்கள் வங்க தேச விடுதலைக்கு எதிரானவர்கள் ) கூட்டு சேர்கின்றனர். இதனையடுத்து கோரமான காட்சிகள் அரங்கேறுகின்றன.பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.



ரஜாக்கர்கள் என்றழைக்கப் படுபவர்கள் வங்கதேசத்தில் பாகிஸ்தானிய ஆதரவு ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியால் ஊற்றி வளர்க்கப்பட்டவர்கள்.இவர்கள் உருது மொழி பேசுபவர்கள், வங்கதேசத்தில் பெரும்பான்மை மக்கள் வங்காள மொழியை தாய்மொழியாக கொண்ட இசுலாமியர்களும், இந்துக்களுமாவர்.பாகிஸ்தானிய இராணுவத்தோடு கூட்டு சேர்ந்து வரலாற்றின் மிகப்பெரிய, மிகக்கோரமான‌, திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்ததில் ரஜாக்கர்கள் இன்று ஒட்டுமொத்த வங்க தேசத்தின துரோகிகளாக மாறி இருக்கின்றனர்.'திட்டமிடப்பட்ட' என்ற வார்த்தை வெறும் இடைச்செருகல் அல்ல.மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் என ஒரு அறிவுச் சமூகத்தையே அழிக்கும் மிகப்பெரிய திட்டமிடலும் சூழ்ச்சியும் அவர்களிடமிருந்தது.வங்காள இன அடையாளத்தை அழிப்பதே அவர்களின் இலக்காக இருந்தாலும், மாணவர்களையும் நுண்ணறிவுச் சமூகத்தையுமே குறி வைத்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.1952ல் உருது மயமாக்கத்துக்கு எதிரான கிழக்கு வங்க மாணவர்களின் போராட்டமே இதற்கு காரணமாக அமைந்தது.தேடல்விளக்கு Operation Searchlight)என்று பெயரிடப்பட்ட அந்த இனப்படுகொலையில் மூன்று லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.சிறுபான்மை இந்துக்களும்,இந்து கோவில்களும் இத்தாக்குதல்களின் முக்கிய இலக்காக அமைந்தன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொதுவில் வெளிப்படுத்த விரும்பாததால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை கூட இதுவரை பதிவு செய்யப்படவில்லை. ஒட்டுமொத்தமாக 25000 பெண்கள் கர்ப்பிணியாக்கப்பட்டார்கள் என்ற கணக்கு மட்டும் இறுதியாக்கப்பட்டது.பத்து லட்சம் வங்காள மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் தஞ்சம் அடைந்தனர்.



எப்படியேனும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முனைப்புடன் இருந்த இந்திய அரசுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது.வங்க தேசத்தின் ’முக்தி பாஹினி’ என்றழைக்கப்பட்ட வங்க தேச இராணுவத்துடன் கூட்டு சேர்ந்த மக்கள் ஆயுதப்படை ஒன்பது மாதங்களாக தனித்து பாகிஸ்தானை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தது.பல லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்ததும், வட கிழக்கு இந்திய வான்பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய விமான‌ தாக்குதல்களும், இந்திய இராணுவம் டிசம்பர் 3ல் வங்க தேசத்துக்குள் நுழைந்து முக்தி பாஹினியோடு கை கோர்த்து, பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து போரைத் தொடங்கக் காரணமாக அமைந்தது.பத்து நாட்களே நீடித்த இந்த நடவடிக்கையின் மூலம் டிசம்பர் 16 ஆம் தேதி பாகிஸ்தான் இந்திய வங்கதேச ராணுவத்திடம் சரணடைந்தது.பங்களாதேஷ் சுதந்திர நாடானது."பங்க பந்து" வங்கத்தின் தந்தை என்றழைக்கப்பட்ட அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது.



1975 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மான் இராணுவ தளபதிகளால் கொல்லப்பட்டார். இராணுவ தளபதி ஜியாவுர் ரஹ்மான் பொறுப்பேற்று தற்போது (Bangladesh National Party) BNP என்றழைக்கப்படும் பங்களாதேஷ் தேசியக் கட்சியை உருவாக்கினார்.அவரும் இராணுவ தளபதிகளால் கொல்லப்பட்டு 1982ல் ஹூசைன் முகமது எர்ஷாத் என்ற இராணுவ தளபதி இராணுவ ஆட்சியை ஏற்படுத்துகிறார். இவ்வாறாக இரத்தம் தோய்ந்த வரலாறு வங்கதேசத்தில் தொடர்ந்தது. 1991ல் முற்றிலுமாக இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டு, முஜிபூர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா பேகம் தலைமையில் அவாமி லீக் கட்சியும்,ஜியா உர் ரஹ்மானின் மனைவி பேகம் கலீடா ஜியா தலைமையில் பங்களாதேஷ் தேசியக் கட்சியும் (BNP) மாறி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்று கடந்த இருபதாண்டுகளுக்கும் மேல் வங்க தேசத்தில் ஆட்சி செய்து வருகின்றனர்.

2008ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது,1971ல் போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் மீதான போர்க்குற்ற சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க விருப்பதாக உறுதியளித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசினா பேகம். அதன்படி 2010ம் ஆண்டு 3 உறுப்பினர்கள் கொண்ட பன்னாட்டு போர்க்குற்ற தீர்ப்பாயம் (ICT) 7 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழு,12 உறுப்பினர்கள் கொண்ட வழக்கறிஞர்கள் குழு ஆகியவை உருவாக்கப்பட்டன.

கட்டுரையில் ஆறாம் பத்தியில் முன்பே குறிப்பிட்டது போல,1971ல் போர்க்குற்றவாளிகளான 'ரஜாக்கர்கள்' பாகிஸ்தானில் உருவான ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய அடிப்படை வாத கட்சியின் மூலம் வளர்க்கப்பட்டவர்கள்.வங்க தேசம் விடுதலையடைந்த சில ஆண்டுகளில் இவர்கள் மீதான போர்க்குற்ற விசாரணை, ஷேக் முஜிபுர் ரகுமான் முயற்சியால் தொடங்கப்பட்டது.1975ல் ஷேக் படுகொலை செய்யப்பட்ட போதே இவ்வழக்கின் நீதியும் சேர்த்து புதைக்கப்பட்டது. அதன்பின், 1977ல் பதவியேற்ற இராணுவ தளபதியான ஜியா வுர் ரஹ்மான் பங்களாதேஷ் தேசிய கட்சியை உருவாக்கிய போது, இந்த போர்க்குற்றவாளிகள் மீண்டும் புத்துணர்வு பெற்றனர். 1981 ஜியா வுர் ரஹ்மான் படுகொலை செய்யப்படும் வரை, ஜமாத் கட்சியின் உதவியோடும் ஜியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சியின் ஆசியோடும் ரஜாக்கர்கள் உண்டு களித்து செழித்து வளர்ந்தனர். அது மட்டுமின்றி 2001 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் தேசிய கட்சியின் மிகப்பெரிய கூட்டணிக் கட்சியாக ஜமாத்-இ-இஸ்லாமி வளர்ந்தது.அங்கிருந்து தான் ஜமாத் இ இஸ்லாமி கட்சி பொருளாதார ஏறுமுகத்தை கண்டது.மதம் அரசியல் மட்டுமின்றி இன்று வங்கிகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், கலாச்சார மையங்கள் என்று ஜமாத் இ இஸ்லாமி பணம் சம்பாதிக்காத துறைகளே இல்லையென்னுமளவுக்கு வங்க தேசம் முழுதும் நீக்கமற பரந்து விரிந்திருக்கிறது ஜமாத்-இ-இஸ்லாமி என்னும் போர்க்குற்ற, இனப்படுகொலை குற்றவாளிகளின் கட்சி. "இஸ்லாமி வங்கி" என்றழைக்கப்படும் ஜமாத்- இ-இஸ்லாமி வங்கியில் ஜேபி மோர்கன் போன்ற மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் கூட முதலீடு செய்கின்றன.ஜேபி மோர்கன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் தங்களுக்கு இலாபம் கிடைப்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு எல்லா நாடுகளிலும் முதலீடு செய்கின்றன. அது இனப்படுகொலை நாடா, இராணுவதிகாரமா, மக்களாட்சியா என்றெல்லாம் பார்ப்பதில்லை.“வணிகம் அறம் பார்ப்பதில்லை” என்ற கூற்று மெய்ப்பிக்கப்படுகிறது.

இப்படி பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்த வங்க தேச போர்க்குற்றவாளிகள் கடந்த மூன்று மாதங்களாக, ஷேக் ஹசீனா நியமித்த பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்ற தீர்ப்புகளால் நிலை குலைந்து போயிருக்கின்றனர்.போர்க்குற்ற நீதிமன்றத்தின் முதல் அடி,பாகிஸ்தானுக்கு ஓடிப்போன அப்துல் கலாம் ஆசாத் என்ற போர்க்குற்றவாளிக்கு தூக்கு தண்டனைத் தீர்ப்பாக விழுந்தது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட வங்க தேசத்தின் ஒவ்வொரு குடும்பமும்,அடுத்த முக்கியமான தீர்ப்பான அப்துல் காதர் முல்லாவின் தீர்ப்புக்காக காத்திருந்தது.'மீர்பூரின் கசாப்பு கடைக்காரர்' என்றழைக்கப்படும் அப்துல் காதர் முல்லா இப்போது ஜமாத்-இ-இஸ்லாமியின் துணை பொதுச் செயலாளர்.பிப்ரவரி 5ம் தேதி அப்துல் காதர் முல்லாவின் குற்றங்களை உறுதி செய்து மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக முல்லாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். தனக்கு தூக்கு தண்டனையே கிடைக்கும் என அச்சத்தில் இருந்த அப்துல் காதர் நீதிமன்றத்திலிருந்து வெளி வரும் போது ஆணவமாக சிரித்துக் கொண்டே வெற்றிக் குறியீடாக இரண்டு விரல்களைக் காட்டினார்.‘அவர் செய்த குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை மிகவும் குறைவானது' என்று பெரும்பான்மையான மக்கள் கொந்தளித்தனர்.மதியம் 12.08 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது. நீதிமன்றத்தில் இருக்கும் அனைவரும் தீர்ப்பைக் கேட்டு அதிர்ந்து போகின்றனர்.அப்துல் காதர் முல்லா நீதிமன்றத்திற்கு வெளியே வெற்றிக் களிப்போடு பேட்டி கொடுக்கிறார்.இந்த ஆயுள் தண்டனை தீரப்பும் முல்லாவின் ஆணவப் பேச்சும் வங்க தேசம் முழுதும் காட்டுத் தீயென பரவுகிறது. மக்களின் கோபம் தலைக்கேறுகிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் ஒரு கூட்டம் டாக்கா நகரின் முக்கிய சந்திப்பான ஷாபாக் சதுக்கத்தில் ஒன்று கூடுகிறது.



எகிப்து துனிஷியாவைப் போல் ஒரு இணையப் புரட்சி ஒன்று மலர‌ ஆரம்பித்தது அந்நாளில் தான்.இம்ரான் சர்கார், மஹ்மூதுல் ஹக் முன்ஷி, மரூஃப் ரசுல்,அமித் பிக்ராம் திரிபுரா ஆகிய‌ நான்கு இள‌ம் வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் முக‌நூலில் ஒரு பக்க‌த்தை உருவாக்கி,அவ‌ர்க‌ள‌து ந‌ண்ப‌ர்க‌ளையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளையும் போராட்ட‌த்திற்கு வ‌ருமாறு அழைப்பு விடுக்கின்ற‌ன‌ர்.ஷாபாக் ச‌துக்க‌த்தின் மிக‌ அருகில் உள்ள‌ ரேஸ் கோர்ஸ் மைதான‌த்தில் அனைவ‌ரும் ஒன்று கூடி, நீதிம‌ன்ற‌ தீர்ப்புக்கெதிரான‌ த‌ங்க‌ள் எதிர்ப்பை தெரிவிக்கின்ற‌ன‌ர்.அநீதிக்கெதிராக கோப‌த்தின் உச்ச‌த்தில் இருந்த‌ பெரிவாரியான வங்க தேச ம‌க்க‌ளை இந்த‌ போராட்ட‌ம் கவர்ந்திழுக்கிறது.தொட‌ர்ந்து ம‌ணிக்க‌ண‌க்காக‌ ஷாபாக் ச‌துக்க‌ம் முழுமையும் பெருந்திர‌ளான‌ ம‌க்க‌ள் அலை ஆக்கிர‌மிக்க‌த் தொட‌ங்குகிற‌து. பெண்க‌ள், குழந்தைக‌ள், இளைஞ‌ர்க‌ள், மாண‌வ‌ர்கள், எழுத்தாளர்கள் என கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு ஷாபாக் சதுக்கத்தில் குழுமத் தொடங்கியிருந்தனர்.ஷாபாக் சதுக்கம் மட்டுமின்றி வங்க தேசத்தின் பல பகுதிகளில் போராட்டத் தீ பரவுகிறது.

முல்லா உள்ளிட்ட 11 போர்க்குற்றவாளிகளான ரஜாக்கர்களுக்கு மரண தண்டனை வழங்கு, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியையும் அதன் இளைஞர் அணியையும் தடை செய், ஜமாத்தின் நிறுவனங்களையும் அவர்களின் வியாபாரத்தையும் தடை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர்.போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான இஸ்லாமியர்கள், தினமும் மாலை தொழுகைக்கு பின் போராட்டத்தில் இணைந்து கொள்வதும் அங்கு வெகு இயல்பாக நடந்து வருகின்றது.போராட்டங்க‌ளுக்கு ஆத‌ர‌வாக எழுதிய‌ ர‌ஜிப் ஹைத‌ர் என்ற‌ வலைப்ப‌திவர் பிப்ரவரி 15ஆம் நாள் போராட்ட‌ம் முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த‌ போது, ஜ‌மாத்-இ-இஸ்லாமி குண்ட‌ர்க‌ளால் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார்.இச்ச‌ம்ப‌வ‌ம் போராட்ட‌த்தின் உக்கிர‌த்தை இன்னும் அதிக‌மாக்கிய‌து. ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் ர‌ஜ‌ப்பின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்து கொண்டு, ஜமாத்-இ-இஸ்லாமி க‌ட்சிக்கு தங்களின் கடும் எதிர்ப்பையும்,கண்டனங்களையும் பதிவு செய்தனர்.



40 ஆண்டுகளுக்கும் மேலாக அழுத்தப்பட்டிருந்த மக்களின் நீதிக்கான, இனப்படுகொலைக்கு எதிரான‌ போராட்ட எரிமலை கடந்த பிப்ரவரி 5ல் வெடித்ததில் இருந்து இன்று வரை போராட்ட சாம்பலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்ற‌து.பிப்ரவரி 28ம் தேதி 3வது குற்றவாளியான டெல்வார் உசைன் சய்யீதிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, ஜமாத் இ இஸ்லாமி தொண்டர்கள் நாடு முழுதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.மீண்டும் இந்து கோவில்கள் தாக்கப்பட்டன. இந்த கலவரங்களில் 6 போலீஸ் உட்பட 76 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டோர் அதிகம்.அதிலும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்காரர்கள் அதிகம். தொடர்ந்து போராட்டங்களுக்கு எதிரான வன்முறையும் அடக்குமுறைகளும் நிகழ்ந்த வண்ணம் இருந்தாலும், அவற்றையெல்லாம் எதிர்த்து நிற்க துணிந்து விட்டனர் வங்க தேச மக்கள்.பாகிஸ்தானைப் போல வங்க தேசம் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அரசாக்கப்படுவதை அவர்கள் முற்றாக நிராகரிக்கின்றனர்.வங்க தேசத்தின் அரசியல் கட்டமைப்பில் மத அடையாளங்களை அவர்கள் விரும்பவில்லை. ஜனநாயகமும் நீதியும் தான் தங்களின் ஒரே இலக்கு என்பதை வலியுறுத்த, மாதக்கணக்காக ஷாபாக் சதுக்கப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.வங்க தேசத்தில் முதன்முறையாக மக்களே பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து, தொடர்ந்து அற வழியிலான போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.



மரண தண்டனையை நாம் முழுமையாக எதிர்த்தாலும்,பெருந்திரளான மக்கள் எழுச்சி வரலாற்றின் மிகப்பெரிய அநீதியான ஒரு இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணையின் அடிப்படை நீதியை வென்றெடுத்திருக்கிறது.போராடும் இளைஞர்களிடையே மையப்படுத்தப்பட்ட அரசியல் இலக்கு மற்றும் அவற்றை கண்டடைவதற்கான நீண்ட கால செயல் திட்டம் பலவீனமாக இருந்தாலும், அவர்களுடைய விருப்பங்களும் குறிக்கோள்களும் தெளிவாகவே இருக்கின்றன.உலகின் நான்காவது மிகப் பெரிய இஸ்லாமிய நாடான வங்க தேசத்தில், இஸ்லாமிய மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஜனநாயக விழுமியங்களை நோக்கி முன்னகரும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் ஏகாதிபத்திய நாடுகளை எச்சில் விழுங்க வைக்கின்றன.எனவே தான் இப்போராட்டங்கள் குறித்த செய்திகள் பெரும்பாலும் மேற்குலக மற்றும் இந்திய ஊடகங்களால் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

இன‌ப்ப‌டுகொலை ம‌ற்றும் போர்க்குற்ற‌ங்க‌ளுக்கெதிராக‌ எழுச்சிமிகு போராட்டங்க‌ளை ந‌ட‌த்திக் கொண்டிருக்கும் நம் த‌மிழின‌ம்,வ‌ங்க‌தேச‌த்தின் அன்றாட‌ நிக‌ழ்வுக‌ளை தொட‌ர்ந்து க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ தேவையிருக்கிற‌து.த‌மிழீழ‌ விடுத‌லைக்கான‌ ந‌ம் மாண‌வ‌ர் போராட்ட‌ங்க‌ளைப் போல‌வே,எந்த‌வொரு அர‌சிய‌ல் க‌ட்சியின் பின்புலமும் இல்லாம‌ல் பிற‌ப்பெடுத்த‌ த‌ன்னெழுச்சியான‌ வ‌ங்க‌தேச‌ ம‌க்க‌ளின் போராட்ட‌ங்க‌ளை ஆத‌ரிப்பதோடு நின்றுவிடாமல்,அவ‌ர்க‌ளின் முன்ன‌க‌ர்வுக‌ளையும் தொட‌ர்புடைய‌ செய்திக‌ளையும் பல்வேறு த‌ள‌ங்க‌ளில் ப‌ர‌ப்புரை செய்த‌லும் அவ‌சிய‌மாகிற‌து.இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி வேண்டி களமிறங்கியிருக்கும் வங்கதேசத்தைப் போல, இது போன்ற போர்க்குற்ற,இனப்படுகொலை குற்றவாளிகளை தண்டிக்கக் கோருகின்ற, பெரும்பான்மை மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் இலங்கை மண்ணில் தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமில்லை.காரணம் பெரும்பான்மையான சிங்கள மக்கள் போர் வெற்றி பெருமிதத்தில் தான் இன்னும் உள்ளனர்.மேலும்,இன அழிப்பு போரை முடித்த கையோடு,தமிழர்களின் வாழ்நிலமான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களும் தமிழின அடையாளங்களைச் சிதைக்கும் பண்பாட்டு படையெடுப்பும் இராணுவ மயமாக்கலும் தான் அங்கே அன்றாட வாடிக்கையாக இருக்கின்றன.அது மட்டுமின்றி இலங்கை வாழ் இசுலாமியர்கள் மீதான வெறுப்பும் அங்கே உருக்கொண்டு, அம்மக்களின் மீதான வன்முறை கட்டவிழ்ப்புகளையும் கடந்த சில மாதங்களாக‌ அரங்கேற்றி பின்னின்று நடத்தி வருகிறது சிங்கள பேரினவாத அரசு. ஆக தமிழினப் படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்குமான மறுக்க முடியாத நீதியைக் கோரியும், ஜனநாயக மீட்சிக்கான போராட்டங்களையும் தன்னளவில் இன்று தாய் தமிழக மக்களும் புலம்பெயர் வாழ் தமிழர்களுமே தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருவதை சிங்கள அரசு பெருத்த அச்சத்தோடு அவதானிக்க வேண்டியிருக்கிறது.மாபெரும் மனித குல பேரவலத்தை நிகழ்த்திய கடைசி போர்க்குற்றவாளி தண்டிக்கப்படும் வரை,நீதிக்கான இப்போராட்டங்கள் வரலாற்றின் பக்கங்களை நிரப்பியபடியே இருக்கும்.


வங்கதேச மக்களின் போராட்டங்களை ஆதரிப்போம்.
வெல்க மக்கள் போராட்டங்கள் !


செய்ய‌து
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் (Save Tamils Movement).


தரவுகள்:
=========

http://tehelka.com/in-concert-for-bangladesh/
http://timesofindia.indiatimes.com/world/south-asia/Bangla-seeks-justice-for-a-better-tomorrow/articleshow/18585045.cms?
http://www.thehindu.com/opinion/op-ed/at-shahbagh-bangladeshs-fourth-awakening/article4419445.ece
http://tehelka.com/jamaat-faces-a-crisis-of-faith/
http://www.kean.edu/~bgsg/Conference09/Papers_and_Presentations/Anis%20Ahmed_Paper_OperationSearchlight.pdf
http://en.wikipedia.org/wiki/1970_Bhola_cyclone
http://www.vinavu.com/2013/03/04/bangladesh-against-islamic-fundamendalists/
http://www.bangla2000.com/bangladesh/war.shtm
http://www.bangla2000.com/Photo_Gallery/Liberation%20War/
http://en.wikipedia.org/wiki/Bengali_Language_Movement
http://www.astronomy.ohio-state.edu/~nahar/cv/bdliberation-essay8.pdf
http://kafila.org/2013/04/08/what-a-time-to-be-in-dhaka-kalyani-menon-sen/



===============

Tuesday, April 16, 2013

அணு உலையில் ஊழல் !!!!



இந்திய சனாதிபதி உள்ளிட்டோர் பயணம் செய்வதற்காக வாங்க திட்டமிடப்பட்ட ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை நடத்திய இந்திய இராணுவம் ஊழலில் ஈடுபட்டதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பி கொண்டிருந்த அதே நேரத்தில் அதே இந்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் இந்திய அணுசக்தி துறை தொடர்பான ஒரு ஊழல் தொடர்பான செய்தியும் இரசியாவில் வெளியானது. ஆனால் முதல் ஊழலில் காட்டிய அக்கறையை இரண்டாவது ஊழலில் எந்த ஒரு ஊடகமும் காட்டவில்லை. வழமை போல ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருந்த முதல் ஊழலைப் பற்றி மட்டுமே பொது மக்களும், பாராளுமன்றமும் பேசியது, விவாதம் செய்தது.... இரண்டாவது ஊழல் மெல்ல, மெல்ல இப்பொழுது தான், அதுவும் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர். திரு. கோபால கிருஷ்ணன் பேசிய பின்னர் தான் இந்தியாவில் உள்ள சில இணைய ஊடகங்கள் எழுதத் தொடங்கியுள்ளன(1). ஆனால் இன்னமும் எந்த ஒரு 24x7 செய்தி ஊடகமோ, அச்சு ஊடகமோ இந்த ஊழல் பற்றிய செய்தியை வெளியிடவில்லை(சில நாளிதழ்கள் மட்டும் திரு.கோபால கிருஷ்ணன் பேட்டியை மட்டும் வெளியிட்டுள்ளது(2)). அது என்ன ஊழல், ஏன் இதுவரை எந்த ஒரு ஊடகமும் அந்த ஊழல் செய்தியை வெளியிடவில்லை என நாம் பார்ப்போம்.....



கூடங்குளத்தில் கட்டப்பட்டு வரும் முதலிரண்டு அணு உலைகளும் இரசியாவினால் கட்டப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த அணு உலையை கட்டிவரும் இரசிய நிறுவனம் "ரோசாடாம்"(Rosatom) பல பாகங்களை தனது துணை நிறுவனமான சியோ-பொடல்ஸ்க்(Zio-Podalsk) என்ற நிறுவனத்தில் இருந்து வாங்குகின்றது. இந்த நிறுவனம் தான் தயாரிக்கும் பாகங்களுக்காக தரக்குறைவான இரும்பை வாங்கி பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் அதிக இலாபம் பார்க்க முயன்றுள்ளது. இதனை கண்டுபிடித்துள்ள இரசிய தேசிய ஊழல் தடுப்பாணையம் இந்த சியோ-பொடல்ஸ்க் நிறுவனத்தின் இயக்குநரை கைது செய்து விசாரித்து வருகின்றது.(3) இந்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இந்தியா, சீனா, பல்கேரியா, இரான் நாடுகளில் கட்டப்படும் அணு உலையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என இதுவரை நடந்துள்ள விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி முதன்மை நிறுவனமான "ரோசாடாமும்" பல ஊழல்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்து, அந்த நிறுவனத்தின் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.(4)



இந்த ஊழல் செய்தியைத் தொடர்ந்து சீனா தன்நாட்டில் இரசியாவால் கட்டப்பட்டுவரும் அணு உலைகளின் தரத்தையும் பாதுகாப்பையும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய அணு உலை ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் நிர்வாக தலைவரான திரு.கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்(2). அதே போல இந்தியாவும் கூடங்குளம் அணு உலையை ஒரு சுயாதீன குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார். நம் வாசகர்களுக்கு ஒரு கேள்வி மனதில் எழலாம். "இப்பொழுது தான் ஊழல் என்பது எல்லாவற்றிலும் நடக்குதே, இதை மட்டும் ஏன் நீங்கள் இவ்வளவு பெரிதாக சொல்கின்றீர்கள்". இந்தியாவில் ஊழல் என்பது எல்லாவற்றிலும் நடந்தாலும், பாதுகாப்பு துறையில், மக்களுக்கான பாதுகாப்பில் ஊழல் என்பது மிகப்பெரிய விளைவை உண்டாக்கும். வாகனம் ஓட்டும் பொழுது நாம் போடும் தலை கவசம் தரமற்றதாக இருந்தால் நம் உயிரையே காவு வாங்கக்கூடியது. அதுவே அணு உலையில் உள்ள பாகங்கள் தரமற்ற இரும்பினால் தயாரிக்கப்பட்டவையாக இருந்தால், அது அணு உலை வெடிப்பு வரை இட்டுச்செல்லக் கூடியது. அது சிறுவெடிப்பாயினும் அதன் விளைவுகள் வாகன விபத்து போலன்று, சொல்லிலடங்கா....



(செர்னோபில் அணு உலை விபத்தினால் மனிதர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட அதை சுற்றியுள்ள பகுதிகள்)


இங்கே பலர் அணு உலை விபத்துகளை தினமும் நிகழும் கார், பேருந்து விபத்துடன் ஒப்பிடுகின்றார்கள். ஒரு சிறு அணு உலை வெடிப்பினால் உண்டாகும் அணுக் கசிவு அணு உலை, அதனை சுற்றியிருக்கும் பகுதியையும் சேர்த்து குறைந்தது 20 கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதியை மனிதர்களால் பயன்படுத்த முடியா நிலைக்கு ஆளாக்கும். இந்தியா போன்ற சன நெருக்கடி மிகுந்த நாட்டில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதி என்பது மிகப்பெரியது. அது மட்டுமின்றி அணு உலை வெடிப்பு மூலம் ஏற்படும் கதிர்வீச்சு அப்பொழுது வாழும் உயிர்களை மட்டுமில்லாமல், தலைமுறை தாண்டி அதற்கு பின்னால் பிறக்கும் தலைமுறைகளையும் பாதிக்கும். இவை எதுவும் தினமும் நிகழும் பேருந்து அல்லது கார் விபத்தினால் ஏற்படாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஏற்படும் அணு உலை வெடிப்பு இந்திய ஒன்றியத்தின் தென் தமிழக,கேரள பகுதி மட்டுமன்றி அண்டை தேசமான இலங்கையின் வட பகுதி வரை வாழும் மக்களை பேரழிவிற்குள்ளாக்கும். மேலும் சென்னையில் குப்பைகள் சேகரிக்கும் இடமான பள்ளிக்கருணையில் ஏற்பட்ட தீயை அணைக்கவோ, சிவகாசி வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கவோ தொழில்நுட்பம் இல்லாமல் மழை வந்தால் தான் தீ அணையும் என்று சொன்ன நம் அரசின் அதிகாரிகளிடம் அணு உலை வெடித்தால் எடுக்க வேண்டிய பேரழிவு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வோ, தொழில்நுட்பமோ இருக்காது என்பது தான் உண்மை(6), போபாலில் நச்சு வாயு கசிந்த பொழுது அதன் இயக்குநர். ஆண்டர்சன் அமெரிக்காவிற்கு அரச விமானத்தில் பறந்தது போலவே, அணு உலையில் ஏதாவது வெடிப்பு ஏற்பட்டால் இரசிய அணு விஞ்ஞானிகளும் பறந்து விடுவார்கள். சில மாதங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட ஆழிபேரலை(T-Sunami)எச்சரிக்கை விடப்பட்ட போது கூடங்குளம் அணு உலையில் இருந்து இரசிய விஞ்ஞானிகள் முதல் ஆளாக வெளியேறியதை அன்றைய நாளிதழ்களில் நாம் எல்லோரும் படித்தோம். இந்த நிலையில் இன்னமும் அணு உலை பேரழிவு பாதுகாப்பு சட்டத்தில் இந்த இரண்டு அணு உலைகளையும் சேர்க்கக்கூடாது என்றும், இனி வரும் அணு உலைகளும் இந்த சட்டத்தில் சேர்க்கப்படாது என்றும் இரசிய அரசு தெளிவாக கூறியுள்ளது. அதாவது இலாபம் வந்தால் அவர்களுக்கு, இழப்பு என்று ஏதாவது வந்தால் அது மக்களுக்கு. அதாவது "வெல்லம் திங்கறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தன்" என்பது போல...






இனி ஊடகங்கள் இந்த ஊழல் பிரச்சனையை ஏன் மற்ற ஊழல்களைப் போல பெரிது படுத்தவில்லை என பார்போம். சில நேரங்களில் ஹாலிவுட் திரைப்படங்களில் சில உண்மைகளும் வரும், அது போல "2012" என்ற அறிவியல் அடிப்படை சார்ந்த ஹாலிவுட் திரைப்படத்தை பெரும்பாலானோர் பார்த்திருப்போம், அந்த படத்தில் வரவிருக்கும் இயற்கை பேரழிவுகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் எல்லாம் வரிசையாக அமெரிக்க ஐக்கிய அரச நிர்வாகத்தால் திட்டமிட்டு கொல்லப்படுவார்கள். இவையெல்லாம் விபத்துகளாக நாளிதழ்களில் செய்தியாக வரும். அதே போல இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல அணு விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துவருகின்றார்கள்(5). இதையும் கூட சூழியல் ஆதரவாளர்களும், அணு உலை எதிர்ப்பாளர்களும் தான் வெளிக்கொண்டு வர வேண்டியிருக்கின்றது. அணு உலை மேல் காதல் கொண்டுள்ள எந்த ஊடகமும் இதுவரை இந்த விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக எந்த ஒரு பெரிய ஊடகமும் கேள்வியையோ, ஒரு விவாதமாகவோ எழுப்பவில்லை. ஒரு வேளை காதல் அணு உலை மீது மட்டும்தானோ, அணு விஞ்ஞானிகள் மீது இல்லையோ ? இந்த விஞ்ஞானிகளும் "2012" திரைப்படத்தில் காட்டப்பட்டது போல வரவிருக்கும் பிரச்சனைகளை முன்னுணர்ந்து வெளியில் கொண்டு வர எண்ணியிருக்கலாம் ?. அதுமட்டுமின்றி இந்திய அளவில் கடந்த 600 நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்து நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை பற்றியும், அணு உலை தொடர்பாக அவர்கள் எழுப்பிவரும் கேள்விகளை மையமாக வைத்தும் எந்த செய்தி ஊடகமும் விவாதத்தை நடத்தவில்லை (சில செய்தி நாளிதழ்கள் தவிர). இவர்கள் செய்வது எல்லாம் அரச நிர்வாகத்தை இயக்கி வரும் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பது மட்டுமே . இந்தியாவில் இதுவரை கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.ஆறு இலட்சம் கோடி என்பதையும், அந்த சந்தைக்காக அணு உலை மாஃபியாவும், முதலாளிகளும் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், இதனது தொடர்ச்சியாகவே இந்திய, தமிழக ஊடகங்களும், ஆளும், எதிர் கட்சிகளும் இந்த அணு உலை ஊழலில் கள்ள மௌனத்தை கடைபிடிக்கின்றன. ஊடகங்கள் சனநாயகத்தின் நான்காவது தூண் என்பதிலிருந்து விலகி அரசு செய்யும் தவறுகளை மறைப்பதில் முதலாவது தூணாக இருக்கின்றது.


மீண்டும் இந்த அணு உலை ஊழல் பிரச்சனைக்கு திரும்புவோம். ஊழலில் சிக்கியுள்ள இரசிய நிறுவனங்களால் கட்டிமுடிக்கப்பட்ட கூடங்குளம் அணு உலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய "ஒரு இந்திய சுயாதீன குழு"(Indipendant Indian Team) (இந்த குழுவில் முன்னாள் அணு உலை ஒழுங்காற்று ஆணையத்தின் இயக்குநர் திரு.கோபால கிருஷ்ணன் போன்றோர்களையும் சேர்த்தால் அந்த குழுவின் நம்பகத்தன்மை அதிகரிக்கும். ஏனென்றால் இதற்கு முன்னர் அரசு அமைத்த குழுக்களில் இருந்தவர்கள் எல்லாம் இந்திய அணு உலை நிர்வாகத்தை சேர்ந்தவர்களாகவும், அணு உலைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களுமாக இருந்தார்கள்) அமைத்து, அணு உலையை முழுமையாக ஆய்வு செய்து, அதன் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அணு உலையை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், இந்த கட்சி, அந்த கட்சி என்ற பேதமின்றி எல்லோரும் முன்வைக்க வேண்டும், அதே போல ஏன் ஊடகங்கள் அனைத்தும் இந்த ஊழலை மறைத்தன என்ற கேள்வியை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், இல்லையெனில் இலங்கை அரசு 2009ல் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்யும் பொழுது எப்படி கண்மூடி, வாய் பொத்தி, செவி கேளாமல் இருந்தார்களோ அதே போல, நாளை இந்த ஊழலினால் அணு உலை வெடித்து ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தாலும் அதையும் இவர்கள் நிலநடுக்கம் அல்லது புவியதிர்ச்சி ஏற்பட்டே விபத்து நடந்தது என மறைக்கக்கூடும். ஊழல் புரிந்தவர்களுக்கு துணை போகின்றவர்களும் ஊழல் குற்றவாளிகளே...



மக்கள் போராட்டம், மனித நேயம் ஓங்குக...


ப.நற்றமிழன்

சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)

தரவுகள்:

1)http://www.theweekendleader.com/Causes/1582/Nuclear-muddle.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+theweekendleader+%28The+Weekend+Leader%29

2)http://newindianexpress.com/states/tamil_nadu/article1534269.ece

3)http://www.bellona.org/articles/articles_2012/podolsk_corruption

4)http://www.bellona.org/articles/articles_2011/corruption_rosatom

5)http://www.kalpakkam.net/2011/05/nuclear-scientists-are-dying-under.html

6)http://articles.timesofindia.indiatimes.com/2012-06-12/chennai/32193833_1_dump-yard-pallikaranai-strong-winds





Wednesday, April 10, 2013

ம‌னு சாஸ்திர‌ எரிப்புப் போராட்ட‌ம்




ஜாதியின் அடித்தளத்தை உலுக்கும் முயற்சியாக - ஏப்ரல் 14 ல் மனுசாஸ்திரத்தை எரிக்கும் போராட்டம் - ஒத்த சிந்தனை கொண்ட இயக்கங்கள், அமைப்புகள், சிந்தனையாளர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் அழைப்பு

அன்பு தோழருக்கு, வணக்கம்.

உலகில் எங்கும் இல்லாத ஜாதிப் பிரிவினைகள் இந்திய ‘புண்ணிய’ (?) பூமியில் மட்டுமே உள்ளது ; ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள ஜாதி வரிசையின் உச்சியில் உள்ள பார்ப்பனர்கள், தாம் தடையில்லாமல் அனுபவித்துவரும் அதிகாரம், மேலாண்மை குறையாமல் இருக்க செய்த -– செய்துவரும் சூழ்ச்சிகள் ஏராளம்.

பார்ப்பனர்களுக்கு, அவர்களைத் தவிர அனைவருமே கீழானவர்கள் தான்; தீண்டத்தகாதவர்கள் தான். இது புரியாத பெரும்பாலோர் மனதில் தனக்குக் கீழ் உள்ளவர்களைக் காட்டி மகிழ்ச்சியுறச் செய்வதும், மிகக் கீழ்ப் படியில் உள்ள ஆணும் தங்களுக்கு அடிமையாய் பெண்கள் இருப்பதைக் கண்டு மன நிறைவடையச் செய்வதுமான உளவியலை, இந்து மதம் உண்டாக்கி வைத்துள்ளது.

மெல்ல, மெல்ல - ஜாதிப்பிரிவினை, மேல்கீழ் மனநிலை உருவாகியிருந்திருந்தாலும் அதை கறார்ப்படுத்தி, கோட்பாடாக்கி நிலைக்கச் செய்த பெருங்கொடுமைக்கு மூலமாக விளங்குவதே மனுசாஸ்திரம். மேல்கீழ் படிநிலை, சூத்திர, பஞ்சம இழிவுகள், பெண்ணடிமை ஆகியவற்றுக்கு எதிராக - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சிந்தனை கொண்ட யாரும் மனுசாஸ்திரம், அதையொத்த சாஸ்திரங்களை வெறுக்கவே செய்வார்கள்.

பல சமூகப் புரட்சிகளின் காரணமாக ஏற்பட்டு வரும் சமத்துவம் நோக்கிய முன்னேற்றத்தைக் குலைப்பதோடு, பின்னிழுக்கும் கீழ்ச் செயல்களும் இப்போது நிகழ்ந்து வருகின்றன. ஆனால், இப்படிப்பட்ட பிற்போக்கு நிகழ்வுகளுக்கு பல ஆண்டுகாலம் முன்பிருந்தே திராவிடர் விடுதலைக் கழகம் ( முன்பு பெரியார் திராவிடர் கழகம் ) தன்னாலான பரப்புரை - போராட்டங்கள் வழியாக சமத்துவ சமுதாயப் படைப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியே வந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஜாதியின் அடித்தளத்தை உலுக்கும் முயற்சியாக, 2012 டிசம்பர் –24 பெரியார் நினைவு நாளில் ஈரோட்டில் நடைபெற்ற எமது மாநில மாநாட்டில் எடுத்த முடிவின்படி, எதிர் வரும் ஏப்ரல் – 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில்,



- ஜாதி படிநிலை அமைப்பின் மீதும்

- பெண்ணடிமைத் தனத்தின் மீதும்

- ஜாதிக்குள்ளேயே திருமணம், ஜாதித்தொழிலையே செய்யவேண்டும் எனும் மானுட சுதந்திரத்தைப் பறிக்கும் அகங்கார சிந்தனை மீதும்

நமக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் நோக்கத்தோடும், சமத்துவ சமுதாயத்தைப் படைக்கும் ஆவலோடும் .....………

மேற்காணும் கொடுமைகளின் மூல ஊற்றான மனுசாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தைத் தமிழ்நாடெங்கும், குறிப்பாக மாவட்டத் தலைநகர்களில், ஒத்த சிந்தனை கொண்ட இயக்கங்கள், அமைப்புகள், சிந்தனையாளர்களின் பேராதரவோடு நடத்த தீர்மானித்தோம் ; அதை விளக்கும் வகையில் பல பரப்புரைப் பயணங்களையும் நடத்தியுள்ளோம்.

இதன் முத்தாய்ப்பாக 14.04.2013 அன்று நடைபெற உள்ள மனுசாஸ்திர எரிப்புக் கிளர்ச்சியில் தாங்களும், தங்கள் இயக்கமும் கலந்து கொண்டு ஜாதி ஒழிப்பு , பெண்ணடிமை ஒழிப்பு எழுச்சியை வெளிப்படுத்தி அக்கிளர்ச்சியின் நோக்கங்கள் நிறைவேற உதவ வேண்டுமாறு மிகுந்த தோழமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

எங்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்ளும்போது கிளர்ச்சிக்கான திட்டமிடுதல், செயல்படுத்துதலில் இணைந்து செயலாற்றுமாறு தங்களின் மாவட்ட அமைப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ந‌ன்றி - திராவிடர் விடுதலைக் கழகம் விடுத‌லை க‌ழ‌க‌ம்