Saturday, March 30, 2013

தோழர்கள் மீது காவல்துறை நடத்திய வெறிச்செயலை வன்மையாக கண்டிப்போம்!



இன்று அதிகாலை நம் தோழர்கள் மீது தமிழக காவல் துறை நடத்திய வெறித் தாக்குதலை கண்டித்து சேவ் தமிழ்சு இயக்கத்தின் கண்டன அறிக்கை!

இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்திலும், தமிழ்நாடு மக்கள் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளருமான தோழர் அருண் சோரியும் அரசியல் பணி நிமித்தமான பயணத்திற்காக வட பழனியின் பிரதான சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.அந்நேரம் அவ்வழியே வந்த இரவு ரோந்து காவல்துறையினர் தோழர்களை சந்தேகத்தின் பேரில் அழைத்து மரியாதை குறைவான சொற்களை பயன்படுத்தி விசாரித்திருக்கின்றனர். விசாரணையின் போது V.ஜெகதீசு என்ற காவல்துறை அதிகாரி, தகாத வார்த்தைகளால் தோழர்களை கடுமையாக திட்டியிருக்கிறார். இதை எதிர்த்து தட்டிக் கேட்ட தோழர் அருண் சோரியையும் தோழர் செந்திலையும் கழுத்தில் அறைந்திருக்கிறனர் காவல் துறையினர். அடி விழுந்த போது, ஜிப்பீல் தலை மோதியதால் தோழர்கள் நிலை குலைந்து, தடுக்க முற்பட்டிருக்கின்றனர். இதனால் இன்னும் வெறி தலைக் கேறிய காவல் துறையினர், தோழர்களை வாகனத்தில் ஏற்றி R3 காவல் நிலையம், அசோக் நகருக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

காவல்நிலையத்தில் தோழர்களை அமர்வதற்கு கூட அனுமதி மறுத்த காவல் துறையினர், அவர்களின் அலைபேசிகளை பறித்ததோடல்லாமல், சட்ட ரீதியாக அவர்கள் யாரோடும் தொடர்பு கொள்ள முடியாமல் துன்புறுத்தியதாக தெரிகிறது.மேலும் தோழர் செந்திலின் பையும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடக்க விருக்கும் “ஐ.நா தீர்மானமும் ஈழத்தின் திசை வழியும்”கூட்டத்திற்கான துண்டறிக்கைகள் இருந்திருக்கின்றன. அதைப் பார்த்த காவல்துறை அதிகாரி V.ஜெகதீசு, “ஈழமா...இதுக்காகவே உங்களை அடிக்கணும்டா” என்று கூறி மாறி மாறி தோழர் செந்திலின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இன்னும் தகாத வார்த்தைகளால் நா கூசும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி தோழர்களை திட்டியும் அடித்தும் இரவு முழுதும் இந்த வன்கொடுமை தொடர்ந்திருக்கிறது.

தோழர்கள் தங்களைப் பற்றி பேசக் கூட அவர்கள் இடமளிக்காமல் இந்த வெறிச்செயல் அரங்கேறியிருக்கிறது. பிறகு விடியற்காலை நான்கு மணிக்கு வந்த காவல் ஆய்வாளர், அவர்கள் விசாரித்த போது தான் தோழர்கள் இருவரும் அரசியல் ஆற்றல் என்பது காவல்துறைக்கு தெரிய வந்திருக்கிறது. “முன்னரே சொல்லியிருக்கலாமே...சரி இதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுங்கள்” என்று போலி ஆறுதல் சொல்லி காலையில் தோழர்களை விடுவித்திருக்கின்றனர்.

எந்த வித அடிப்படை காரணங்களோ, முன் விசாரணையோ, தவறு நடப்பதற்கான முகாந்திரமோ இல்லாமல், தோழர்களை வார்த்தைகளாலும் உடல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாக்கிய காவல்துறையின் இந்த வெறிச்செயல் கண்டிக்கத் தக்கது. ஈழ அரசியல் குறித்தான தமிழக அரசின் நிலைப்பாடு, வெட்ட வெளிச்சமாக அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதியான காவல்துறை மூலமாக அம்பலமாகியிருக்கிறது. தன்னெழுச்சியான மாணவ மக்கள் போராட்டங்களை எப்படி ஒடுக்குவது என்ற வழி தெரியாத தமிழக அரசும் காவல்துறையும், கிடைக்கும் வாய்ப்பில் அரங்கேற்றும் இது போன்ற வெறிச்செயல்களை, அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள மாணவ சமுதாயம் தயாராக இருக்க வேண்டும் என்பதையே இச்சம்பவம் நமக்கு அறிவுறுத்துகிறது.

மேலும் தோழர்கள் அரசியல் ஆற்றல்கள் என்ற அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்டு பெரிது படுத்த விரும்பாமல் விடயத்தை முடித்து விட்டனர்.ஒரு வேளை பாதிக்கப்பட்டது பொது மக்களாக இருந்திருந்தால் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு இன்னும் கொடுரமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.இந்த வன்செயலின் மூலம் காவல் துறையினரை எதிர்த்து பொது மக்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற தமிழக காவல் துறையினரின் அதிகார வெறி அப்பட்டமாக அம்பலமாகிறது.

பொது மக்களை மதிக்காமல்,அவர்களிடம் காவல் துறை என்றாலே மக்கள் அடிபணிந்து செல்ல வேண்டும் என்ற உணர்வை ஏறபடுத்த முயலும் காவல் துறையினரின் இந்த அடக்குமுறை வன்போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது

தோழர்கள் மீது காவல்துறை ஏவிய இந்த வெறிச்செயலை வன்மையாக கண்டிப்போம் !! அதிகார ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுப்போம்!

- இளங்கோவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment