Thursday, January 3, 2013

கூடங்குளம் அணுமின் நிலையக் கசிவு பற்றி வெள்ளை அறிக்கை தருக!



திருநெல்வேலி மாவட்டம்
சனவரி 2, 2013

                                                      பத்திரிக்கைச் செய்தி


கூடங்குளம் அணுமின் நிலையக் கசிவு பற்றி வெள்ளை அறிக்கை தருக!


சனவரி 1, 2013 அன்று புதுச்சேரியில் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி அணு உலையில் இரு வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாகவும், இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் அவற்றை சரி செய்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார். ஏதோ ஒரு சாதாரண மனிதன் தெருக் குழாயில் தண்ணீர் கசிந்துபோவதைப் பற்றி பேசுவது போல கடுகளவும் கடமையுணர்வின்றி, பொறுப்பின்றி பேசியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய விடயம், எத்தனை லட்சம் மக்களின் உயிர்களை உள்ளடக்கிய நிகழ்வு என்பதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை.

இன்னும் இயக்கப்படாத அணு உலையில் எப்படிக் கசிவு ஏற்பட முடியும்? என்னக் கசிவு ஏற்பட்டது? இவை பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அப்படியானால் மக்களுக்கு தகவல் தெரிவிக்காமல், உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் அணு உலையைத் தொடங்கி விட்டார்களா? இது பற்றியும் வாய் திறக்கவில்லை அமைச்சர்.

இன்னும் இயக்கப்படாத அணுஉலை திறக்கப்படாத நிலையிலேயே கசிகிறது என்றால், எல்லாமே பாதுகாப்பாக இருக்கிறது என்று யார் யாரோ வந்து சான்றிதழ் வழங்கினார்களே? அவையெல்லாம் உண்மைக்குப் புறம்பான தகவல்கள்தானே?

உலகத்தரம் வாய்ந்த உன்னதமான மூன்றாம் தலைமுறை அணு உலை இப்போதே கசிகிறது என்றால், நாளை என்னென்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? திரு. நாராயணசாமி போன்ற அமைச்சர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் அரைகுறை தகவல்களைச் சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்வார்கள். அணு உலை அதிகாரிகள் எல்லாம் கட்டுக்குள் இருப்பதாக கதை விடுவார்கள். இழப்பீடு எதுவும் தரவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாத ரஷ்ய விஞ்ஞானிகள் விமானத்தில் வெளியேறிவிடுவார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்பார்கள். அணுமின் நிலைய விபத்துக்களில் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்று மக்களுக்கு பயிற்சி கொடுக்கவேண்டுமென மாநில அரசை நீதிமன்றங்கள் பணித்திருக்கின்றன. ஆனால் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமோ மக்களுக்கு முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை என லஞ்சம் வழங்கி “விழிப்புணர்வு முகாம்” என்ற பெயரில் சம்பிரதாயச் சடங்குகள் நடத்திக் கொண்டிருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பாகும்.

எத்தனையோக் கட்டுமான, மின் இணைப்பு விபத்துக்கள் நடந்தபோதெல்லாம், ஒரு சில வாரங்களுக்குமுன் திரு. கல்யாணசுந்தரம் என்ற இளைஞர் இறந்தபோதும்கூட வாய் திறக்காத அமைச்சர் நாராயணசாமி இப்போது கசிவு பற்றி பேசியிருப்பது ஏன் என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். பத்து நாட்களுக்கு முன்னால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டபோது, அணுமின் நிலையத்தை அவசரமாக மூடிவிட்டு மக்களுக்கும் தகவல் தெரிவித்தார்கள்.

இந்தப் பின்னணியில் திரு. நாராயணசாமியின் கூடங்குளம் கசிவு கதை பற்றியும், மக்கள் மீதான, இயற்கையின் மீதான தாக்கங்கள் பற்றியும் அணு உலை அதிகாரிகள் வெள்ளை அறிக்கைத் தரவேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வற்புறுத்துகிறது.

போராட்டக் குழு,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

No comments:

Post a Comment