Tuesday, November 13, 2012

ட்விட்டர் கைதுகள் !… தூண்டும் விவாதங்கள் !

மூன்று வாரங்களுக்கு முன்பு, திரைப்படப் பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் என்கிற சமூக வலைத்தளத்தினூடாக தன்னையும், தன் தாயையும் பற்றி தரக்குறைவான ஆபாச கருத்துக்களைச் சிலர் பரப்பிவருவதாகவும், தன்னுடைய படங்களை ஆபாசமாக்கி வெளியிட்டிருப்பதாகவும், தொலைபேசியில் சிலர் மிரட்டிவருவதாகவும் கூறி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து இருவரைக் கைது செய்தது காவல்துறை(தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர்).

ட்விட்டர், ஃபேஸ்புக்(முகநூல்) போன்ற சமூக இணையதளங்களில் ஒவ்வொரு மனிதனும் தனது கருத்துக்களை சுதந்திரமாக எழுதிப் பரப்புவது கடந்த பத்தாண்டுகளில் மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு கருவி. கைபேசி தொழில்நுட்பத்தின் அண்மை கால வளர்ச்சியால், குறைந்த விலையில் கைகளுக்குள் அடங்கும் ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால், இந்த ஊடகங்களின் வழியாக 'அதிகார மையங்களுக்கு' எதிராக எந்த சாமானியனும் தனது கருத்தைப் பதிவு செய்ய முடிகிறது.இணையத்தில் இயங்கும் பெரும்பாலோர் வீதிக்கு வந்து போராடுவதில்லை என்ற கருத்து உண்மையாக இருந்தாலும், இணைய வழியாகப் பாயும் எதிர்க்குரல், ஆளும் மற்றும் அதிகார வர்க்கங்களையும் ஏற்கெனவே இங்கு பொதுமக்களின் ஊடகங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களையும் கூட திகைக்கவைக்கின்றது.

இத்தகைய பின்னணியில்தான், சின்மயி பிரச்சினையையும் அணுகவேண்டியுள்ளது. சின்மயிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் அவதூறுகளையும் தனது புகாரில் அவர் தெரவித்துள்ள மற்ற குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. இதற்கு, சம்பந்தப்பட்ட நபர்களின் பொதுவான வசவுகள்(சிலசமயம் இவை கீழ்த்தரமான வார்த்தைகளாகவும் வெளிப்பட்டுள்ளது) உதாரணமாகக் காட்டப்படுகிறது. இந்த நிலையில் கைது நடவடிக்கை உடனடியாக,அதுவும் 24 மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஊடகங்க‌ள் 'செக்ஸ் டார்ச்சர்' என்றும் 'ஆபாச படங்கள் வெளியிட்டவர்கள்'என்றும் அவசர அவசரமாகச் செய்தி வெளியிடுகின்றன. பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த மாநகர ஆணையர், 'ஏற்கெனவே இதுமாதிரி 19 வழக்குகள் உள்ளன' என்று கூறியுள்ள நிலையில் இந்த வழக்கை மட்டும் முன்னிலைப்படுத்தியுள்ள நோக்கம் குறித்து நாம் ஆராயவேண்டியுள்ளது. ''பிரபலம், மேலும் முதலமைச்சரைக் கூட நேரில் சென்று சந்திக்கும் நிலையில் இருப்பவர் என்கிற காரணங்களுக்காக'' எனில், பிரபலங்களுக்கு மட்டுமேயான அரசு-காவல்துறை என்று எளிதில் கடந்துவிட்டுப் போய்விடலாம்.

ஆனால் அதையும் தாண்டி, சமூக வலைத்தளங்களில் இருக்கும் கட்டற்ற சுதந்திரத்தையும், அதிகார மையங்களுக்கெதிரான அறைகூவலையும் அதன் குரல்வளையிலேயே நசுக்குவதற்கான முதல்படியாக இது இருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.இங்கிருக்கும் அதிகார மையங்கள் சில சாதியினரின் பிடிகளுக்குள்ளேயே இன்னமும் இருக்கின்றன என்பதையும் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

''நாட்டை ஆள்பவரைப் பொறுத்தே காவல்துறையின் செயல்பாடுகள் அமையும்'' என்று சமீபத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். 19 பேரின் புகார் மீது நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் 20-வது நபரின் புகார் மீது மட்டும் உடனடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் போக்கு இந்த அரச மையத்தின் தன்மையை விளக்குகிறது. சாதாரண மக்களின் புகார்கள் குப்பைத்தொட்டிக்குப் போகவைக்கும் அரசு எந்திரங்களின் செயல்பாடுகள் நமக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும்,குறிப்பான இந்த நடவடிக்கை, சமூக வலைத்தளங்களின் தற்போதைய இயங்குதன்மையைக் குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இனி வரும் காலங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கப்போகின்றது. அரசுகளின் தவறாக கொள்கைகள் மற்றும் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் போக்குகளையும், கேள்விக்கு உள்ளாக்கும் நபர்களும் விமர்சிக்கும் நபர்களும் அதிகரிக்கப்போகின்றார்கள். இவர்களையெல்லாம் ஒருவிதமான கட்டுப்பாட்டுக்குள்ளும் குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளும் மட்டுமே கருத்துகளை எழுத வைப்பதற்கான ஒரு ஆயுதமாகவே, 'ஆபாசம்-அவதூறு' என்கிற முகமூடியுடன் இந்த வழக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி, சின்மயி விசயத்தில் நடவடிக்கை என்பது ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளையும் கூட 'ஆபாசம்' என்கிற குறிப்பான வகைக்குள் பொதுமைப்படுத்தி, அரச எந்திரம் இப்பிரச்சினையில் காட்டும் தீவிரத்தின் உள்நோக்கத்தை மறைத்துக்கொள்கிறதாகவே இருக்கிறது.

இவ்விசயத்தில் வெகுமக்கள் ஊடகங்களான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தங்களது ஒருபக்கச் சார்புடைய செய்திகளை வெளியிட்டு, ஒருவகையில் அதிகாரத்திற்கும் பிரபலங்களுக்குமான தமது சார்புநிலைகளையும், வளர்ந்துவரும் தனிமனிதப் பங்களிப்பு அதிகம் இருக்கிற, சமூக ஊடகங்களின் மீதான வெறுப்புணர்வையும் ஒருங்கே காட்டிக்கொள்கின்றன. அதுமட்டுமின்றி 'இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தாரின் விவரங்களையும் வெளியிட்ட இதே ஊடகங்களிடம் நாளை அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களிடம் மன்னிப்பு கோரும் நேர்மை இருக்கின்றதா?' என்று கேட்டால்'இல்லை' என்ற பதிலே கிடைக்க வாய்ப்புள்ளது. இது போன்று இன்னும் பல நிகழ்வுகளில் நாம் இத்தகைய மெத்தனப் போக்கைக்காண முடியும். மேலும், இந்த‌ ஊட‌க‌ங்களின் செய‌ல்பாடுகளில் திரை, அர‌சிய‌ல், விளையாட்டு வீர‌ர்க‌ளை முக்கிய‌ப்ப‌டுத்தி த‌னி ந‌ப‌ர் வ‌ழிபாடுக‌ளை உருவாக்கும் போக்கும், வணிக நோக்கோடு செய்திகளை வெளியிட்டு மக்களை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பி ஒரு மாய உலகத்தில் வைத்திருக்கும் போக்குமே காண‌ப்ப‌டுகின்ற‌து. 'சமூக‌ வ‌லைத‌ள‌ங்க‌ளில் ஆபாச‌மாக‌ எழுதுகின்ற‌ன‌ர்' என்று குற்ற‌ம் சாட்டும் எல்லா ஊட‌க‌ங்க‌ளுமே ஆபாச‌ குப்பைகளையே பெரும்பாலும் செய்திகள் என‌ வெளியிட்டு வ‌ருகின்ற‌ன‌. இந்த‌ ஊட‌க‌ங்க‌ளும் த‌ங்க‌ள‌து த‌வ‌றுக‌ளுக்கு வ‌ருந்தி மக்களின் உண்மையான பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு சரியான வழியில் பயணிக்க‌ வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது.

இந்த வழக்கு மற்றும் அது தொடர்பான கைதுகளை, ''பிரபலங்கள், ஊடகங்களின் அத்துமீறல், தனிநபர் ஒழுக்கப் பிரச்சினை''களையெல்லாம் தாண்டி, அதிகார மையங்களுக்கெதிரான சாமானியர்களின் சமகால, எதிர்காலக் குரல்களை அச்சுறுத்தும் ஒரு முன்னோட்ட நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இதே போன்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள 'இணையத்தில் அவதூறு' புகாரின் அடிப்படையில் நிகழ்ந்தப்பட்டுள்ளமற்றுமொறு கைது, இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வாருங்கள் மேலும் விவாதிப்போம் - கருத்துக்களை முடக்க வரும் எதிர்ப்புகளைச் சமாளிப்போம்!

நாள்: 17 நவம்பர் 2012 , சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம் : பி.எட். அரங்கு, இலயோலா கல்லூரி , சென்னை